பும்ஸவன விரதத்தை மிகுந்த சிரத்தையுடன் பின்பற்றினாள் திதிதேவி.
தன் சிற்றன்னையின் நோக்கத்தை அறிந்துகொண்ட இந்திரன், மிகவும் புத்திசாலித்தனமாகத் தன்னை மறைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திதியின் ஆசிரமத்தில் வந்து அவளுக்குப் பணியாற்றத் துவங்கினான்.
நாள்தோறும் அவளுக்கு வேண்டிய பூக்கள், காய்கனிகள், ஸமித், தர்பை, புற்றுமண், நன்னீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொடுத்தான்.
பரீக்ஷித்! தேவேந்திரன் திதியின் அருகிலேயே இருந்துகொண்டு அவள் ஏதேனும் தவறு செய்கிறாளா என்பதை உன்னிப்புடன் கவனித்து வந்தான்.
ஆனால், அவனால் எந்த ஒரு தவற்றையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் பொறுமையுடன் காத்திருந்தான்.
ஒருநாள் மிகவும் சோர்வுற்ற திதிதேவி மாலை வேளையில் முகம் கழுவாமல், காலும் அலம்பாமல், அழுக்குடன் விதியின் கட்டளைப்படி உறங்கிவிட்டாள்.
இதுதான் சமயமென்று இந்திரன் தன் யோக சக்தியால் திதியின் கருப்பைக்குள் நுழைந்தான். அங்கு தங்கம் போல் ஒளிவீசிய கருவைத் தன் வஜ்ராயுதத்தால் ஏழு துண்டங்களாக்கினான். அவை அழத்துவங்கியதும் அழாதே. (மா ருத) என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு துண்டத்தையும் ஏழு ஏழாகப் பிளந்தான்.
அவனை நோக்கிக் கை கூப்பியவாறு அந்தத் துண்டங்கள், நாங்கள் உன் சகோதரர்கள். எங்களை வெட்டாதே என்று வேண்டின.
உடனே இந்திரன், இனி இவை தமக்கு அணுக்கமான தொண்டர்களாகிவிடும் என்று புரிந்துகொண்டு, அவைகளிடம் பேசினான்.
பரீக்ஷித்! அச்வத்தாமாவின் ப்ருமாஸ்திரத்திலிருந்து நீ பகவானால் காப்பாற்றப்பட்டாய் அல்லவா? அதைப்போல் அவை நாராயணனால் காப்பாற்றப்பட்டன.
திதிதேவி ஒரு வருஷத்துக்குச் சற்றுக் குறைவாக தினமும் பகவான் நாராயணனை ஆராதித்திருந்தாள். அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது.
திதி கண் விழித்ததும் இந்திரனுடன் தன் நாற்பத்தொன்பது பிள்ளைகளும் நிற்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றாள்.
ஆனால், அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாததால் இந்திரனைக் கேட்டாள்.
இந்திரன் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒளிக்காமல் சொல்லிவிட்டு, இறைவன் அருளாலேயே வெட்டப்பட்ட குழந்தைகள் பிழைத்தன. என்னை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினான்.
உண்மையைச் சொன்னதால், இந்திரனைக் கண்டு மகிழ்ந்தாள் திதி. இந்திரன் மருத் கணங்களோடு அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.
பரீக்ஷித் பும்ஸவன விரதம் பற்றி இன்னும் விரிவாக விளக்கும்படி சுகாசார்யாரிடம் கேட்க, அவர் மீண்டும், பும்ஸவன விரதத்தைப் பற்றியும், அதன் நெறி முறைகள் பற்றியும் 28 ஸ்லோகங்களில் விளக்குகிறார்.
பின்னர், இதைப் பின்பற்றும் பெண்கள், மிகுந்த நன்மையடைவார்கள். மலடு நீங்கி நன்மக்களை அடைவாள். நீண்ட ஆயுளை உடைய குழந்தைகள் பிறக்கும். பித்ரு தேவதைகளும் மகிழ்வார்கள்.
இதைப் பற்றி வேள்விக்காலங்களில் கேட்டால், ஸ்ரீ நாராயணனும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
என்றார் சுகர்.
என்றார் சுகர்.
ஆறாம் ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment