நாரதர் கூறலானார்.
தர்மராஜனே! பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதைத்தான்.
ஹிரண்யகசிபு தம்பி இறந்த சோகத்தில் மூழ்கினான். பின்னர் மிகுந்த சினத்துடன், பற்களால் உதடுகளைக் கடித்து, கண்கள் சிவந்து பயங்கரத் தோற்றத்துடன் வானத்தை நோக்கியவாறு கூறலானான்.
தைத்யர்களே! தானவர்களே! தேவர்கள் என் தம்பியை விஷ்ணுவை வைத்துக் கொன்றுவிட்டனர்.
விஷ்ணுவுக்கு தேவர்களும், அசுரர்களும் ஒன்றுதான். அவர் பாரபட்சம் அற்றவர்தான். ஆனால், தேவர்கள் அவரிடம் நெருங்கிப் பழகி, சேவை புரிந்து தன்வயப்படுத்திக் கொண்டனர்.
இப்போது அவர் மாயையினால் பல உருவம் ஏற்று தன் இயல்பினின்று மாறிவிட்டார். சேவை புரிபவர் பின்னால், குழந்தையைப் போல் பின்தொடர்கிறார்.
நான் அவரை வெட்டி, என் தம்பிக்கு அவரது உதிரத்தினால் தர்ப்பணம் செய்யப்போகிறேன். விஷ்ணுவை அழித்தால், தேவர்கள் அழிவார்கள். அந்தணர்கள் மற்றும் க்ஷத்ரியர்களே அவரது பலம்.
எனவே, வேத அத்யயனம், விரதம், தானம், வேள்விகள் செய்வோரைத் துன்புறுத்தி அழியுங்கள். விஷ்ணுவின் வேர் அந்தணர்களின் அறச்செயல்களே.
தேவர்கள், ரிஷிகள், பித்ருதேவதைகள், ஜீவராசிகள் அனைத்திற்காகவும் செய்யும் பஞ்சமஹா யக்ஞங்களுக்கு விஷ்ணுவே ஆதாரம்.
எனவே, அந்தணர்களும் பசுக்களும், வர்ணாஸ்ரமங்களுக்குத் தக்க அனுஷ்டானங்களும் நடைபெறும் இடங்களை அழியுங்கள். என்றான்.
இயல்பாகவே மற்றவரைத் துன்புறுத்துவதில் இன்பம் காணும் அசுரர்களுக்கு இப்போது அரச உத்தரவே வந்துவிட்டது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மக்களைப் பீடிக்கலானார்கள்.
நகரங்கள், கிராமங்கள், பசுமாட்டுக் கொட்டில்கள், வயல்கள், பூங்காக்கள், முனிவர்களின் ஆசிரமங்கள், இரத்தினம் விளையும் சுரங்கங்கள், வேளாளர்கள் குடியிருக்கும் பகுதிகள் மலையுச்சிலிருக்கும் சிற்சிறு கிராமங்கள், இடைச்சேரிகள், வணிகர்கள் வாழும் பகுதிகள் ஆகியவற்றைத் தீக்கிரையாக்கினர்.
பாலங்கள், அணைகள், கோட்டைச் சுவர்கள், கோவில்கள் ஆகியவற்றை இடித்துத் தள்ளினர். பச்சை மரங்களை வெட்டினர். அசுர மன்னனின் பணியாளர்கள் உலகோரைத் துன்புறுத்தவே, தேவர்கள் அவியுணவு கிடைக்காமல், தேவருலகை விடுத்து மண்ணுலகில் வந்து மறைந்து வாழத் துவங்கினர்.
தம்பியின் பிரிவால் துன்புற்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனின் புதல்வர்களான சகுனி, சம்பரன், த்ருஷ்டன், பூட்கஸந்தாபனன், விருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிச்மச்ரு, உத்கசன் ஆகியோர் மூலம் அவனுக்கு பித்ரு காரியங்களைச் செய்வித்தான்.
தம்பியின் மனைவியான ருஷபானுவையும், தன் தாயான திதிதேவியையும் சமாதானம் செய்துவிட்டுக் கூறினான்.
இனி நீங்கள் வருந்தலாகாது. போர்முனையில் பகைவனைத் தாக்கி வீரமரணம் எய்துவதையே வீரர்கள் விரும்புவர்.
நீர்நிலைகளில் மக்கள் கூடுவதைப்போல், ஜீவன்கள் முன்வினைக்கேற்ப சிலகாலம் ஒன்று சேர்ந்து, பின்னர் பிரிந்துவிடுகின்றனர்.
உண்மையில் ஆன்மா அழியாதது. தூய்மையானது. மாறுதலற்றது. புலன்களில் ஒட்டாதது. தனித்திருப்பது.
நீர்நிலையின் மேற்பரப்பில் அசைவு ஏற்படும்போது அதில் ப்ரதிபலிக்கும் மரங்கள் போன்றவையும் அசைவதுபோல் தெரியும்.
அதுபோலவே ஆன்மா மாறுபாடற்றிருப்பினும், உலகியல் பொருள்களால் மனம் ஊசலாடும்போது, ஆன்மாவும் ஆடுவதுபோல் தோன்றுகிறது.
இறந்தவனைக் குறித்து வருந்தும்போது சான்றோர் ஒரு கதையைச் சொல்கின்றனர்.
என்று கூறினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment