வ்ருத்ராசுரன் இறந்ததில் மூவுலகத்தாரும் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால், தேவேந்திரன் மிகவும் வருத்தமுற்றான்.
முதலில், அவன் வ்ருத்ரனைக் கொல்லத் தயங்கினான்.
ப்ரும்மஹத்தி பாவம் வரும், பக்தனாக வேறு இருக்கிறானே என்று அஞ்சினான்.
மேலும்,
இப்போதுதான் ஒரு ப்ரும்மஹத்தியைப் பிரித்து பூமி, நதி, பெண்கள் ஆகியோர்க்குக் கொடுத்தேன். மறுபடி தோஷம் வந்தால் தாங்க இயலாது
என்று கவலைப்பட்டான்.
அப்போது முனிவர்கள்,
மூவுலகங்களின் நன்மைக்காகச் செய்துதான் ஆகவேண்டும். இதனால் வரும் ப்ரும்மஹத்தியை உனக்காக அஸ்வமேத யாகம்செய்து போக்கிவிடுகிறோம்
என்று தைரியம் சொன்னதனாலேயே அசுரனை வீழ்த்தினான் இந்திரன்.
வ்ருத்ராசுர வதம் முடிந்ததும் ப்ரும்மஹத்தி இந்திரனைத் தொடரலாயிற்று.
மிகவும் அவலட்சணமாக, மூப்பினால் நடுங்குகின்ற, என்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டு, சிவப்பு ஆடையுடன், நரைத்த கூந்தலை விரித்துக் கொண்டு, மீன் நாற்றமுள்ள சுவாசத்துடன் துர்நாற்றத்தைப் பரப்பிக்கொண்டு, ப்ரும்மஹத்தி இந்திரனைத் தொடர்ந்து ஓடிவந்தது.
அதனிடமிருந்து தப்பிக்க இந்திரன் எல்லா திசைகளிலும் ஓடினான். புகலிடம் இன்றி மானஸ ஸரஸில் நுழைந்தான்.
அங்கு ஒரு தாமரைத் தண்டினுள் ஆயிரம் ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தான்.
தேவர்கள் அக்னி மூலமே அவியுணவைப் பெற இயலும். இந்திரன் நீருக்குள் ஒளிந்ததால் அக்னியால் அவனுக்கு உணவைக் கொண்டு சேர்க்க முடியவில்லை.
இந்திரன் பசியால் வாடினான்.
இந்த இடைவெளியில் வித்யை, தவம், மற்றும் யோகப்பயிற்சியால் நகுஷன் என்பவன் இந்திர பதவியை அடைந்து மூவுலகையும் ஆண்டு வந்தான். அவ்வமயம் அழகே உருவான இந்திரனின் மனைவியான சசிதேவியிடம், தவறாக நடக்க முயன்றான்.
சசிதேவி நகுஷனை ஸப்தரிஷிகளிடம் அபசாரப்படும்படி தந்திரமாக மாட்டிவிட்டாள்.
அதனால் நகுஷன் சாபம்பெற்று பாம்பாக உருக்கொண்டான்.
நீருக்குள் ஒளிந்து தேவேந்திரன் பகவானையே தியானம் செய்ததால் ப்ரும்மஹத்தி விலகியது.
ப்ரும்மாவின் உத்தரவின்படி அக்னி சென்று இந்திரனை அழைக்க இந்திரன் மீண்டும் ஸ்வர்கம் வந்தான்.
முனிவர்கள் தேவேந்திரனை முன்னிறுத்தி, அனைத்து விதிகளையும் பின்பற்றி, முறைப்படி அஸ்வமேத யாகம் செய்துவைத்தனர். அதன் பலனாய் அனைத்துவிதமான தோஷங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் இந்திரனை விட்டு விலகின.
இந்த உயர்ந்த கதையைக் கேட்பவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கப்பெற்று தூய்மையான உள்ளத்தைப் பெறுவர். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கேட்டால் பெரும் செல்வமும் புகழும் சேரும். பகை அழியும். ஆயுள் வளரும். இன்னும் பல நன்மைகளையும் பெறலாம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment