தாக்ஷ்யர் என்ற பெயர் கொண்ட கச்யபருக்கு விநதை, கத்ரு, பதங்கீ, யாமினீ ஆகிய நான்கு மனைவிகள்.
பதங்கீ என்பவள் பறவைக்கூட்டங்களைப் பெற்றாள். யாமினீ ஈசல் பூச்சிகளைப் பெற்றாள்.
விநதை எனப்படும் ஸுபர்ணை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வாகனமான கருடனைப் பெற்றாள்.
அவளது இரண்டாவது மகன் அருணன் சூரியனின் தேரோட்டியானான்.
கத்ரு பற்பல நாகங்களின் தாயாவாள்.
சந்திரன் இருபத்தேழு பெண்களை மணந்தபோதும் ரோஹிணியின் மீது அதிக காதல் கொண்டான். அதனால் மற்ற பெண்கள் வருந்தவே தக்ஷன் அவனை க்ஷயரோகம் வரும்படி சபித்தான்.
சந்திரன் மீண்டும் தக்ஷனை மனம் குளிரச்செய்து தேய்பிறையில் ஒவ்வொன்றாய்க் குறையும் தன் கலைகளை வளர்பிறையில் வளரும்படி செய்துகொண்டான். இருபத்தோரு நக்ஷத்ரங்களிடம் அவனுக்கு மக்கட்பேறில்லை.
கச்யப முனிவரின் மனைவிகள் அதிதி, திதி, தனு, காஷ்டா, அரிஷ்டா, ஸுரஸா, இளா, முனி, க்ரோதவாசா, தாம்ரா, ஸுரபி, ஸரமா மற்றும் திமி.
நீர்வாழ்வன அனைத்தும் திமியின் மக்கள். பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் புலி முதலியவை ஸரமாவின் மக்கள்.
எருமைகள், பசுக்கள் மற்றும் இரட்டைக் குளம்புகள் உள்ள ஜீவன்கள் அனைத்தும் ஸுரபியின் மக்கள்
கழுகு, பருந்து முதலியவை தாம்ராவின் மக்கள். முனியின் மக்கள் அப்ஸரஸ்கள்.
பாம்பு, தேள் ஆகிய நச்சுப்பிராணிகள் க்ரோதவசாவின் மக்கள். இளா என்பவளிடமிருந்து செடிகொடிகளும், மரங்களும் பிறந்தன. ஸுரசையிடம் அரக்கர்கள் பிறந்தனர்.
அரிஷ்டாவிடம் கந்தர்வர்களும், காஷ்டா என்பவளிடம் குதிரை முதலிய ஒரு குளம்புள்ள பிராணிகளும் தோன்றின. தனுவின் மக்கள் அறுபத்தோரு பேர்.
அவர்களுள் ஒருவனான ஸ்வர்பானுவின் மகளான ஸுப்ரபையை நமூசி மணந்தான்.
தனுவின் இன்னொரு மகனான நகுஷனின் மகன் யயாதி. அவன் அசுர ராஜனான வ்ருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டையை மணந்தான்.
தனுவின் மகன் வைஸுவானரனுக்கு உபதானவீ, ஹயசிரா, புலோமா, காலகா என்ற நான்கு அழகான பெண்கள் பிறந்தனர்.
இவர்களுள் உபாதானவீயை இரண்யாக்ஷன் மணந்தான். ஹயசிரா என்பவளை கிரது மணந்தான். வைஸ்வானரனின் மற்ற இரு புதல்விகளான புலோமா, காலகா என்பவர்களை ப்ருமாவின் கட்டளைப்படி கச்யப ப்ரஜாபதி மணந்தார். இவர்களிடமிருந்து பௌலோமர்கள், காலகேயர்கள் என்று பெயர் பெற்ற அறுபதாயிரம் தானவர்கள் தோன்றினர்.
பரீக்ஷித்! இவர்கள் வேதத்தை அழித்தனர். உன் தாத்தாவான அர்ஜுனன் இந்திரனை மகிழ்விக்க இவர்களைக் கொன்றார். இந்நிகழ்வு அவர் தேவலோகம் சென்றபோது நடந்தது.
தனுவின் மகனான விப்ரசித்தியின் மனைவி ஸிம்ஹிகை. அவளுக்கு நூற்றியோரு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் மூத்தவன் பெயர் ராகு. மற்ற அனைவரின் மொத்த பெயர் கேது. இவர்கள் நவக்ரஹங்களில் இடம் பெற்றனர்.
அரசே! இனி உனக்கு அதிதியின் வம்சாவளியைக் கூறுகிறேன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment