சுகாசார்யார் கூறலானார்.
விஸ்வரூபருக்கு மூன்று தலைகள் உண்டு.
ஒரு சமயம் தேவர்களின் குருவான அவர், யாகம் அவர்கள் பொருட்டு யாகம் செய்வித்தார். அவ்வமயம், தன் தந்தையான த்வஷ்டா, பன்னிரு ஆதித்யர்களில் ஒருவரானதால், உரத்த குரலில் மரியாதையுடன் தேவர்களுக்கான அவியுணவை அளித்தார்.
ஆனால், கூடவே, மறைமுகமாக, அசுரர்களுக்கும் அவியைக் கொடுத்தார்.
அசுரர்கள் அவரது தாய் வழி உறவு. தாய்வீட்டுப் பாசத்தினால் அசுரர்கள் மேலும் அவருக்கு ஒரு வாஞ்சை இருந்தது. அதனால் அப்படிச் செய்தார்.
அதைக் கவனித்துவிட்ட இந்திரன், தேவர்களை அவமதித்து அறநெறிக்குப் புறம்பாக துரோகம் செய்கிறார் என்று விஸ்வரூபர் மீது கடுங்கோபம் கொண்டான். சினத்தினால் அவருடைய மூன்று தலைகளையும் வெட்டிச் சாய்த்துவிட்டான்.
விஸ்வரூபரது மூன்று தலைகளும் மூன்று பறவைகளாக உருக்கொண்டன.
இந்திரன் விரும்பியிருந்தால் விஸ்வரூபரைக் கொன்றதற்காக வந்த ப்ரும்மஹத்தி தோஷத்தை பரிஹாரங்கள் செய்து தவிர்த்திருக்கலாம். ஆனால், தான் செய்தது தவறில்லை. எனவே விளைவை அனுபவிக்கலாம். பின்னால் வரும் சந்ததியினருக்குப் பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததால், அந்த தோஷத்தைத் தன் இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டான்.
அவனது தேஜஸ் அழிந்துபோயிற்று.
ஒரு வருடம் வரை அதை நீக்கிக்கொள்ள எந்த உபாயமும் செய்யாமல் மறைந்திருந்து அனுபவித்தான்.
ஒரு வருடம் வரை அதை நீக்கிக்கொள்ள எந்த உபாயமும் செய்யாமல் மறைந்திருந்து அனுபவித்தான்.
பின்னர், தன் தோஷமான பாவத்தை நான்காகப் பிரித்து பூமி, தண்ணீர், மரம், மற்றும் பெண்கள் ஆகியோர்க்கு அளித்தான்.
மண்ணை வெட்டிப் பள்ளமாக்கினாலும் அவ்விடம் தானாகவே தூர்ந்துவிடவேண்டும் என்ற வரத்தைப் பெற்றுக்கொண்டு பூமி இந்திரனின் ப்ரும்மஹத்தி தோஷத்தில் நான்கில் ஒரு பாகத்தை வாங்கிக்கொண்டது. அதன் பலனாக பூமியில் உவர்நிலம் ஏற்பட்டது. அங்கு பயிர் பச்சைகள் எதுவும் வளராது.
மரம் தான் வெட்டப்படாலும் மீண்டும் அவ்விடத்தில் கிளை துளிர்க்கவேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்டு தோஷத்தை பிசினாகக் (மரங்களில் இருக்கும் கோந்து போன்ற பசை) கொண்டது.
எந்தப் பொருளுடன் கலந்தாலும் அது அளவில் அதிகமாக வேண்டும். அருவிகளாகவும், வெள்ளமாகவும் வளரவேண்டும். இயற்கையில் எப்போதும் திரவமாகவே இருக்கவேண்டும் என்று நீர் வரம் வாங்கிக்கொண்டது.
ப்ரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பாகம் நீரில் நுரையும் நீர்க்குமிழிகளாகவும் வெளிப்படுகிறது. அதை நீரிலிருந்து எடுப்பவன் நீரின் பாவத்தை அகற்றுகிறான். அதிலேயே விடுபவன் பாவத்தை அடைகிறான். அதனால்தான் மக்கள், நுரையை நீக்கிவிட்டுத் தண்ணீரை எடுத்துக்கொள்கின்றனர்.
பெண்கள் கர்பமுற்றாலும் இன்பத்திற்குக் குறைவின்றி இருக்கவேண்டும் என்ற வரத்தை வாங்கிக்கொண்டு ப்ரும்மஹத்தி தோஷத்தை மாதவிடாயாக அனுபவிக்க ஒப்புக்கொண்டனர்.
தன் பிள்ளை விஸ்வரூபரை இந்திரன் கொன்றுவிட்டான் என்றறிந்த த்வஷ்டா கடுங்கோபம் கொண்டார். தானே வலிய வந்து குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டு என் பிள்ளையை வதம் செய்துவிட்டான். இந்திரனின் பகைவனே நீ ஓங்கி வளர்வாய்! வெகு விரைவில் இந்திரனை ஒழிப்பாய்! என்று பொருள்படும்படி மந்திரத்தை உச்சரித்தவாறே ஒரு வேள்வியைச் செய்தார்.
#மஹாராண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment