Thursday, November 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 351

நல்லோரைக் காத்து தீயோரை மாய்க்க அவதாரமேற்று வந்த இறைவன், இப்போது அரக்கி வந்ததும் கண்ணை மூடிக்கொள்வானேன்?

முந்தைய அவதாரத்திலும் முதலில் தாடகை என்னும் அரக்கியை வதம் செய்யும்படி நேர்ந்தது. இந்த அவதாரத்திலும் முதலில் வரும் எதிரி பெண்ணாக அமைந்துவிட்டதே
என்று நினைத்தானோ..

கருணைமழை பொழியும் கண்களைத் திறந்து அரக்கியைப் பார்த்துவிட்டால் பின்னர் கொலை எப்படிச் செய்வது? இவளைக் கொன்று பிறவியில்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்துக் கண்களை மூடிக்கொண்டானோ..

இந்த அரக்கி விஷத்தைக் கொடுக்க வந்திருக்கிறாள். நமக்கோ விஷம் உண்டு பழக்கமில்லை. ஏற்கனவே விஷம் அருந்திப் பழகிய பரமேஸ்வரனிடம் தங்கள் அனுபவம் ‌எப்படி என்று விசாரிப்பதற்காக தியானத்தில் மூழ்கிக் கண்களை மூடிக்கொண்டானோ..

அக்காலத்தில் கைக்குழந்தைக்கு பேதமின்றி யார் வேண்டுமானாலும் தாய்ப்பால் கொடுப்பார்கள். அதனாலேயே குழந்தைகள் உடலுறுதி மிகப் பெற்று விளங்கின. மேலும், பெண்கள் அனைவரையும் தாயாக வணங்கும் குணம் இயல்பிலேயே வந்தது.

பேரழகு கொண்ட ஒருத்தி தன் குழந்தையைக் கையிலேந்திக்கொண்டு நிற்பதைக் கண்ட யசோதை ஒன்றும் சொல்லாமல், முகமலர்ச்சியுடன் அவளை நோக்கினாள். அவள் எதுவும் சொல்வதற்குள் பூதனை இறைவனுக்கு தாய்ப்பாலை, இல்லை இல்லை, விஷம் தடவிய முலையைக் கொடுத்தாள்.

அனைத்தையும் உண்டு செரிக்கும் வித்தகனான எம்பெருமான், தன் பட்டு அதரங்களால், மெல்ல அவளது உயிரை உறிஞ்சத் துவங்கினான்.

வலி தாளாமல் விடு விடு என்று கதறிக்கொண்டு எழுந்து ஓடத் துவங்கினாள் பூதனை.
எல்லா பக்தர்களும்‌ இறைவனைப் பார்த்து என்னை விட்டுவிடாதே விட்டுவிடாதே என்று கதறிக்கொண்டிருக்க, பூதனையின் பாக்யம் பகவான் அவளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறான். அவளோ, விடு விடு என்கிறாள்.

அழகான பெண்ணுருவம் மறைந்து அரக்கியின் சுயரூபம் வெளிப்பட, மலை போன்ற உடலெடுத்து பூமி அதிர, ஹோவென்று அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினாள்.

என்ன செய்தாலும் இறைவன் அவளை விடவில்லை. மொத்தமாக உயிரை இழந்து பூமியில் விழுந்தாள்.

முன்பொரு காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தனவாம். அவை பறந்து பறந்து பூமியில் இறங்கும்போது நிறைய உயிர்ச்சேதங்கள் விளைந்தன என்று இந்திரன் அவைகளின் இறக்கைகளை வெட்டினானாம்.
அவ்வாறு கீழே விழுந்த மலைபோல் இருந்தது பூதனையின் உடல்.

அதிர்ந்துபோனார்கள் இடைசேரியில் இருந்தவர்கள்.

யசோதைக்கு மயக்கமே வந்துவிட்டது. சற்றும் எதிர்பாராத தருணத்தில் தேவமங்கைபோல் உருவெடுத்து ஒரு அரக்கி வந்து குழந்தையை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொண்டு சென்று விட்டாள்.

எப்படி இருக்கும் அவர்களுக்கு?

சுதாரித்துக்கொண்டு கோகுல வீரர்கள் அரக்கியைத் தொடர்ந்து ஓடினார்கள்.
மலைபோல் விழுந்திருந்த அரக்கியின் உடல்மீது, எதுவுமே அறியாதவன்போல் பச்சிளம் பாலகன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வீரர்கள் அருகில் வந்தது கண்டு சற்றே பயந்தவன்போல் அழத் துவங்கினான்.
சட்டென்று குழந்தையை வாரியெடுத்து அன்னையிடம் கொடுத்தனர்.

குழந்தைக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று சோதித்தனர். பயந்துவிட்டானே.. என்று அங்கலாய்த்தனர்.

அவர்களுக்கு பிரத்யக்ஷ தெய்வம் கோமாதா. எனவே நேராக மாட்டுக் கொட்டிலில் கொண்டுபோய் வைத்து, பசுவின் குளம்பு மண்ணைப் பூசினார்கள். கோமியத்தால், பன்னிரு நாமங்களைச் சொல்லியவாறு அனைத்தையும் காப்பவனுக்கு காப்பு செய்தார்கள் யசோதையும் ரோஹிணியும்.

அன்னை இடுப்பில் அமர்ந்துகொண்டு, திருதிருவென்று விழித்துக்கொண்டு,‌ கோபியரின் கைப்பாவையாக மாறி, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் எல்லாம் வல்ல நம் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment