நந்தகோபர் நீராடித் தூய்மையுற்று, நன்றாக அலங்காரம் செய்துகொண்டு அந்தணர்களை அழைத்து ஸ்வஸ்தி வாசனம் (நல்வாழ்த்துச் சடங்கு) செய்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் வழிபாடு செய்து, ஜாதகர்மத்தையும் முறைப்படி செய்வித்தார்.
நன்கு அலங்கரிக்கப்பட்ட இரண்டு லட்சம் பசுக்களையும், இரத்தினங்கள், தங்கம், மற்றும் ஆடைகளால் மூடப்பட்ட மலை போன்ற ஏழு எள்ளுக் குவியல்களையும் அந்தணர்களுக்குத் தானமாக அளித்தார்.
உரிய காலத்தில் பயிரிடுவதால் பூமியும், நீராடுவதால் உடலும், வேத ஸம்ஸ்காரங்களால் கர்பமும், தவத்தால் ஐம்பொறிகளும், வேள்வியால் அந்தணர்களும், தானத்தால் செல்வமும், மனநிறைவால் மனமும் தூய்மையடைகின்றன.
அந்தணர்கள், பௌராணிகர்கள், துதிபாடிகள், பாடகர்கள் அனைவரும் வந்து மங்கலச் சொற்களால் வாழ்த்து பாடினர்.
ஆயர்பாடி முழுதும் திருவிழாக் கோலம் கொண்டது. மாலை, தோரணங்கள், தீபங்கள் ஆகியவற்றால், வீடுகள், வாசற்படி, தெருக்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டன.
உண்மையில் அத்தனை ஆயர்களும் அரசன் வீட்டு வைபவம் என்றெண்ணாமல் தங்கள் வீட்டில் குழந்தை பிறந்திருப்பதாக எண்ணி அளவிலா மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
பசுக்கள், காளைகள், கன்றுகள் அனைத்தும் மஞ்சள், எண்ணெய் பூசப்பட்டு, வண்ணப்பொடிகள், தோகை, மாலைகள், தங்க நகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன.
எல்லா கோபர்களும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டனர்.
பல்வேறு விதமான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு திரண்டு வந்து நந்தன் வீட்டில் குழுமினர்.
கோபிகளின் நிலைமை சொல்லொணாதது. ஆனந்தத்தில் பித்து பிடித்தாற்போல் ஆனார்கள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு, பிறந்த குழந்தைக்குப் பல்வகையான பரிசுப்பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடிவந்தனர்.
அனைவர் நாவிலும் நாமகீரத்தனம் வந்துகொண்டே இருந்தது.
அனைவரும் குழந்தையைக் காண நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு ஓடினர்.
அங்கே தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை இவர்கள் எல்லாரும் எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது.
பூமியில் பிறந்ததே அதற்குத்தானே. தன்னைக் கொண்டாடும் பக்தர்களுக்காகவே இறைவனின் தோற்றம். மற்ற எந்த அவதாரங்களிலும் இல்லாதபடி இப்போது இவர்களுடன் ஒன்றோடு ஒன்றாய்க் கலந்து பழகப்போகிறான். மற்ற அவதாரங்களில் ஓரிரு பக்தர்கள்தான்.
நரசிம்ம அவதாரத்தில்தான் முதன் முதலில் பகவானுக்கே ஒரு பக்தனின் ஸ்பர்சம் கிடைத்தது. வாமனாவதாரத்திலும் பலியிடம் அத்தகைய அன்பு செலுத்தி அவனுக்குக் காவலாக இருக்கிறான். அதன் பின்னர் பரசுராம அவதாரத்தில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ராமாவதாரத்திலோ காம்பீர்ய புருஷனாக இருந்துவிட்டபடியால் பக்தர்களுடன் கலந்து பழகும் வாய்ப்பில்லை.
அவ்வமயம் ராமனை கட்டியணைத்துக்கொள்ள விரும்பிய ரிஷிகளிடமும், அடுத்த அவதாரத்தில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டான்.
இப்போது அந்த ரிஷிகளும், தேவர்களுமாக பகவானுடன் கலந்து பழக யார் யாரெல்லாம் ஆசைப்பட்டார்களோ அத்தனை பேரும் ப்ரும்மதேவரின் கட்டளைப்படி, வந்து கோகுலத்திலும், மதுராவிலுமாகப் பிறந்திருக்கின்றனர்.
தொட்டிலில் படுத்துக்கொண்டு காதுவரை நீண்ட விழிகளால் பரபரவென்று அங்குமிங்குமாகப் பார்த்துக்கொண்டு அனைவரும் வந்து விட்டார்களா இன்னும் யாராவது கீழே இறங்காமல் பாக்கி இருக்கிறார்களா? தன் மேலுள்ள அன்பினால் பூமியில் தன்னுடன் விளையாடப் பிறந்தவர் எவரெவர் என்றெல்லாம் கணக்கெடுத்தான் குட்டி இறைவன்.
அவன் அழகை எப்படிச் சொல்வது?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment