இறைவன் புவியில் அவதரிக்கும் பொற்காலம் வந்தது.
எல்லா நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் சாந்தமாக இருந்தன. ப்ரும்மாவின் நக்ஷத்ரமான ரோஹிணி வானில் வந்தாள்.
திசைகள் தெளிந்தன. பூமியின் எல்லா இடங்களும் மங்களகரமாய் விளங்கின.
ஆறுகளில் நீரோட்டம் தெளிந்திருந்தது. இரவாயினும் தாமரைகள் மலர்ந்திருந்தன.
எல்லாவிதமான மலர்களும் கால நேரம் மறந்து ஒரே சமயத்தில் மலர்ந்தன. வண்டுகளின் ரீங்காரத்துடன் காடு அழகாய் விளங்கியது.
கம்சனின் அட்டூழியத்தால் அந்தணர்கள் வளர்க்கும் மூவித அக்னிகளும் ஒளியின்றி இருந்தன.
இப்போது அவை பிரகாசிக்கத் துவங்கின.
இப்போது அவை பிரகாசிக்கத் துவங்கின.
வானில் துந்துபிகள் முழங்கின. கின்னரரும் கந்தர்வரும் பாடினர்.
வித்யாதரப் பெண்களும், அப்ஸரஸுகளும் நடனமாடினர்.
பகவான் அவதரிக்கும் காலம் வந்ததும் முனிவர்களும் தேவர்களும் பூமாரி பொழிந்தனர். கிழக்கே பூர்ண சந்திரன் உதிப்பதுபோல் தேவகி வயிற்றிலிருந்து மறைந்து பகவான் வெளித்தோன்றினார்.
மிக அழகிய உருவம். செந்தாமரை இதழ் போன்ற கண்கள். கழுத்தில் கௌஸ்துப மணி. அரையில் மஞ்சள் பட்டாடை. நீருண்ட மேகம்போல் நீலமேனி. வைடூர்யக் கற்கள் பதித்த கிரீடம். சுருள் சுருளான கேசம், காதுகளில் அசைந்து கன்னங்களில் பளீரிடும் குண்டலங்கள். ஒளி வீசும் அரைஞாண், தோள்வளைகள், கங்கணங்கள். சின்னஞ்சிறு உருவத்திற்கேற்ப ஆயுதங்கள். குட்டி வெண்சங்கம், கிலுகிலுப்பை போன்ற கதை, தீபாவளிச் சக்கரம் போன்ற சக்கரத்தாழ்வார், அழகிய சிறிய தாமரை ஆகியவற்றை ஏந்திக்கொண்டு காட்சியளித்த இறைவனை வசுதேவர் கண்டார்.
கண்கள் மலர, இவ்வளவு நாள்களாக அவர்கள் பட்ட துன்பமெல்லாம் மறந்து இன்பவெள்ளம் சூழ்ந்தது.
இறைவனே புதல்வனாகப் பிறந்ததை உணர்ந்து, குழந்தை பிறந்ததும் செய்யவேண்டிய தானங்களை மனத்தினால் செய்தார் வசுதேவர்.
இறைவனைக் கண்டதும் ஏற்பட்ட ஞானத்தால், பரவசம் பொங்க வணங்கி வணக்கி எழுந்து நாத்தழுதழுக்கத் துதிக்கலானார்.
இவ்விடத்தில் பகவானை அத்புத பாலகன் என்று ஸ்ரீ சுகர் சொல்கிறார்..
எதனால் அப்படிச் சொன்னார்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment