துவாபர யுகம். பாரத தேசம், யாதவர்களின் தலைநகரான மதுரா நகரம்.
எப்போதும் ஸ்ரீஹரியின் ஸாந்நித்யத்துடன் விளங்கும் மதுவனமே தற்போது மதுரா நகரமாக உருமாறியிருந்தது. ஸ்ரீ ராமனின் சகோதரரான சத்ருக்னனால் த்ரேதா யுகத்தில் உருவாக்கப்பட்டது.
சூரஸேன வம்சத்தைச் சேர்ந்த வசுதேவருக்கும், உக்ரஸேனரின் தம்பியான தேவகனின் மகள் தேவகிக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. ஒரு இனிய நன்னாளில் காலையில் அரண்மனைக்குள் சுற்றமும், முக்கிய அதிகாரிகளும் சூழ திருமணம் நடந்தேறியது.
மாலையில் பொது மக்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தி மகிழ்வதற்காக அவர்களைத் தேரிலேற்றி பட்டணப் பிரவேசம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(இக்கதையை நான் கோப குடீரச் சிறுவர்களுக்குக் கூறும் சமயம், ஒரு சிறுமி, சடாரென கல்யாண ரிசப்ஷன் மாதிரியா மா? என்று கேட்டாள். குழந்தைகள் நம்மை விடவும் அதிக புரிதலோடு விளங்குகிறார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்வது நம் கடைமையாகிறது).
குடும்பத்தின் செல்லக் கடைக்குட்டியான தேவகியின் திருமணம் என்பதால் உக்ரசேனரின் மூத்த மகன் இளவரசன் கம்சனுக்கு உற்சாகம் கரை புரண்டோடியது. அசுர ஸ்வபாவம் கொண்டவன் ஆனாலும், பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் ஆனாலும், தங்கைப் பாசம் அவனைப் புரட்டிப்போட்டது.
கிட்டத்தட்ட மகள் வயதுடைய தேவகியின் திருமணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் கம்சன் தானே முன்னின்று செய்தான்.
மாலையானதும், மிக நன்றாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வசுதேவரும் தேவகியும் எழுந்தருள, தேரோட்டம் துவங்கிற்று.
துவங்கும் கணத்தில் கம்சன் தன் தேரிலிருந்து இறங்கி புதுமணத் தம்பதியரின் தேருக்கு வந்தான்.
என் தங்கையின் திருமணம். நானே தேரோட்டுவேன். இறங்கு
என்று தேரோட்டியை இறக்கிவிட்டுத் தானே தேரில் ஏறி குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்தான்.
தேவகியின் தந்தையான தேவகன், தங்கவடம் பூண்ட நானூறு யானைகளையும், பதினையாயிரம் குதிரைகளையும், ஆயிரத்து எண்ணூறு தேர்களையும், நன்கு அலங்கரித்துக் கொண்ட இருநூறு பணிப்பெண்களையும் தேவகியுடன் ஸ்த்ரீதனமாக அனுப்பினார்.
வாழ்த்தொலியாக சங்கு, துரியம், மிருதங்கம், துந்துபி போன்ற வாத்தியங்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டன.
மதுரா நகரம் முழுவதும் தோரணங்களாலும், அலங்கார மலர் வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளும் நன்றாக அலங்கரிக்கப்பட்டு, வாசலில் பெரிய கோலங்களும், தீபங்களும் திகழ்ந்தன. ஆங்காங்கே மகளிர் மணமக்களுக்கு ஆரத்தி காட்டி, குங்குமம், சந்தனம், பன்னீர், மலர்கள், மங்களாக்ஷதை ஆகியவறரைத் தூவி வாழ்த்தினர்.
மிக விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது அந்தத் தேரோட்டம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment