கண்ணன் ப்ருந்தாவனத்தில் பலவாறு விளையாடினான். சிலசமயம் பலராமனைப் படுக்கச் சொல்லி
அண்ணா! உங்களுக்கு கால் வலிக்கிறதா? நான் பிடித்து விடுகிறேன்
என்று ஆரம்பித்துவிடுவான். அவன் இஷ்டப்படி இருப்பதே அடியார்க்கழகு. எனவே பலராமன் அமைதியாய் இருப்பான்.
சில சமயம் மல்யுத்தம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர்களைக் கைகுலுக்கிப் பாராட்டுவார்கள்.
சில சமயம் கண்ணன் ஒரு சிறுவன் மடியில் தலை வைத்து ஓய்வெடுப்பான். அப்போது மற்ற கோபர்கள் கால் பிடித்து விடுவார்கள், விசிறுவார்கள்.
சில சிறுவர்கள் தாலாட்டுப் பாடுவார்கள்.
எவ்வளவு மறைத்துக்கொண்டாலும் கண்ணன் இறைவன் என்பதை கோபச் சிறுவர்கள் உணர்ந்திருந்தனர்.
ஸ்ரீதாமா என்பவனும், ஸ்தோஹ (குட்டி) க்ருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் கண்ணனுக்கு உண்டு.
இவர்களுள் ஸ்ரீதாமா என்பவன் ராதாராணியின் அண்ணன்.
ஸ்தோஹ க்ருஷ்ணன் என்பவன் கண்ணனை விட மிகவும் சிறியவன். கோகுலத்தில் கண்ணனுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தைகள் அனைத்திற்கும் க்ருஷ்ணன் என்றே பெயரிடுவார்கள். அடையாளம் தெரிவதற்காக முன்னால் ஏதாவது பெயர் வைத்துக்கொள்வார்கள். அதுபோல் இவனுக்கு குட்டி க்ருஷ்ணன் என்னும்படியாக ஸ்தோஹ க்ருஷ்ணன் என்று பெயர். கன்று மேய்க்கும் வயதுதான் என்றாலும் கண்ணனைப் பிரிய முடியாதென்று அழுது அடம் பிடித்து கண்ணன் கோஷ்டியோடு வந்துவிடுவான்.
ஸ்தோஹ க்ருஷ்ணனும் ஸ்ரீதாமாவும் ஒரு நாள் கண்ணன் ஓய்வெடுக்கும்போது கால் பிடித்துவிட்டுக்கொண்டே மெதுவாகச் சொன்னார்கள்.
கண்ணா! இங்க பக்கத்தில் நிறைய பனைமரங்கள் இருக்கற பெரிய காடு இருக்கு. அதில் இருக்கற பனம்பழ வாசனை இங்க வரை வருது.
அந்தக் காட்டை தேனுகன் னு ஒரு அசுரன் காவல் காக்கறான். கம்சனின் வேலையாள் அவன். எப்பவும் உறவினர் சூழ இருப்பான். பார்க்க கழுதை மாதிரி இருப்பான். அந்தப் பக்கம் போற எல்லாரையும் கொன்னு சாப்பிடறான். நம்ம பசுக்கள், பறவைகள் கூட அவனுக்கு பயந்து அந்தப் பக்கம் போறதில்ல.
எங்களுக்கு அந்தப் பனம்பழங்களை சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. ஏற்பாடு பண்ணேன். என்றனர்.
சரியென்று கண்ணன் பலராமனுடனும் மற்ற சிறுவர்களுடனும் அந்தப் பனங்காட்டை அடைந்தான்.
பலராமன் அக்காட்டிலுள்ள பனை மரங்களை உலுக்கி பனம்பழங்களை விழச் செய்தான்.
பழங்கள் விழும் சத்தம் கேட்ட தேனுகாசுரன் ஓடிவந்தான். கர் கர் பயங்கரமாகக் என்று கூச்சலிட்டான்.
பலராமனைச் சுற்றி சுற்றி வந்த அவன், சட்டென்று பின்னால் திரும்பி பின்னங்கால்களால் பலராமனை உதைக்கத் தலைப்பட்டான்.
தூக்கிய அவனது பின்னங்கால்களை லாவகமாகப் பிடித்த பலராமன் ஒரு கையால் அவனைத் தூக்கிச் சுழற்றினான். பெரும் வேகத்துடன் ஒரு மரத்தின் மீது தூக்கி அடித்தான்.
சுற்றும்போதே அசுரனின் உயிர் பிரிந்துவிட்டது.
அசுரனின் உடல் விழுந்த வேகத்தில் அந்த மரம் முறிந்து விழ, ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகப் பல மரங்கள் முறிந்து விழுந்தன. மற்ற மரங்கள் குலுங்கின.
தேனுகனின் உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து தாக்க முற்பட்டனர். அவர்கள் அனைவரையும் பலராமனும் கண்ணனுமாகச் சேர்ந்து பிடித்து சுழற்றி சுழற்றி வீசினர். அவர்கள் அனைவரும் மடிந்தனர்.
தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணன் கண்ணன் என்று கத்திக்கொண்டு கைதட்டினர். பின்னர் பனம்பழங்களை ஆசையுடன் சுவைக்கத் துவங்கினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment