வருணனின் பெருமையை நன்குணர்ந்த நந்தன் அவர் கண்ணனிடம் காட்டிய மரியாதையை நினைத்து வியந்தார். வீட்டுக்குச் சென்றதும் தன் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
அதைக் கேட்ட கோபர்கள் மனத்தில் ஒரு ஏக்கம் வந்தது.
ஸர்வேஸ்வரனான பகவான் நம் தோழன் என்றால், அவனால் வைகுண்டத்தைக் காட்ட முடியுமல்லவா? அவன் நம் கண்முன் நடமாடும்போதே வாய்ப்பைப் பயன்படுத்தி வைகுண்டத்தைப் பார்க்கலாமே என்று எண்ணினர்கள்.
எல்லாவற்றையும் அறிந்த கண்ணனுக்கு அவர்களது உள்ளக் கிடக்கை தெரியாதா?
ஒருநாள் அவர்கள் அனைவரையும் அழைத்தான்.
அவர்கள் தம் உண்மை நிலையை உணரவில்லையே. தங்களைத் தகுதியாக்கிக்கொள்ளாமல் அறியாமை மறைக்கிறதே என்றெண்ணியவன் தன் சாமர்த்தியத்தால் அவர்களுக்கு வைகுண்டத்தைக் காட்ட முடிவு செய்தான்.
அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளச் செய்து தன் யோக சக்தியால் அத்தனை கோபர்களுக்கும், தன் நண்பர்களுக்கும் ஒளி மிகுந்த வைகுண்டத்தைக் காட்டினான்.
முதலில் ப்ரும்ம ஸ்வரூபமாகத் தான் இருப்பதையும், தன்னிலிருந்து அனைத்து உலகங்கள் தோன்றுவதையும் காட்டினான். பின்னர் பரவாசுதேவன் கோலத்தையும் காண்பித்தான்.
அதன் பின் யமுனையில் இருந்த ப்ரும்மரதம் என்ற மடுவிற்கு அழைத்துச் சென்றான். அதில் அனைவரையும் முழ்கச் செய்தான். மூழ்கி எழும்போது அவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் இருந்தனர்.
அக்ரூரருக்கும் இதே இடத்தில்தான் வைகுண்ட தரிசனம் ஏற்பட்டது.
தங்க மயமாக மின்னும் வைகுண்டத்தில் கோபர்கள் ஆசை தீரச் சுற்றினர். ஏராளமான கற்பக மரச் சோலைகளும், பூக்களும் நீரோடைகளும் கண்டனர். ஏற்கனவே வைகுண்டவாசம் செய்யும் மஹனீயர்களையும் கண்டனர். அவர்களுடன் விளையாடும் கண்ணன் அங்கு ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தனர். வேதமே உருவெடுத்து பகவானைத் துதித்தது.
மறுபடி அவர்களை தன் யோக சக்தியால் ப்ரும்மரதத்திலேயே கொண்டுவந்து விட்டான் கண்ணன். அதைப் பற்றியே பேசிப் பேசி மாய்ந்த கோபர்களுக்கு அத்தனையும் கனவு போலிருந்தது.
மறுபடி கண்ணன் தோளின் மீது கைபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment