பரதனின் மகனான பரத்வாஜனின் மகன் மன்யு. அவனது வம்சாவளி முறையே கர்க்கன், சினி, கார்க்கியன். இவன் க்ஷத்ரியன் ஆனாலும் இவனிடமிருந்து அந்தணர் குலம் தோன்றியது.
மகாவீர்யன் எனப்படும் இவனது மகன் துரிதக்ஷயன். அவனுக்கு த்ரய்யாருணி, கவி, புஷ்கருணி என்று மூன்று புதல்வர்கள். இவர்கள் அந்தணத் தன்மையை அடைந்தனர்.
மன்யுவின் முதல் மகன் ப்ருஹத்க்ஷத்ரன். அவனுக்கு ஹஸ்தி என்றொரு மகன் பிறந்தான். இவன்தான் ஹஸ்தினாபுரத்தை நிர்மாணித்தவன். ஹஸ்திக்கு அஜமீடன், த்விமீடன், புருமீடன் என மூன்று புதல்வர்கள். அஜமீடனின் வம்சத்தில் பிறந்த ப்ரியமேதன் முதலானவர்கள் அந்தணத் தன்மையை அடைந்தார்கள்.
அஜமீடனின் வம்சம் முறையே ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்காயன், ஜயத்ரதன், விசதன், ஸேனஜித். அவனது மகன்கள் ருசிராஸ்வன், திருடஹனு, காசியன், வத்ஸன் ஆகியோர்.
ருசிராஸ்வனின் மகன் பாரன். அவனது மகன்கள் ப்ருதுஸேனன், நீபன் ஆகியோர். நீபனுக்கு நூறு பிள்ளைகள். நீபன் சாயாசுகரின் மகள் க்ருத்வியை மணந்தான். அவனது மகன் ப்ரும்மதத்தன். ப்ரும்மதத்தன் பெரும் யோகியாவான். அவனது மனைவி ஸரஸ்வதியின் அம்சமான கவி என்பவள். அவளது மகன் விஷ்வக்ஸேனன்.
மஹாயோகியான ப்ரும்மதத்தன் ஜைகீஷவ்யர் என்ற முனிவரிடம் உபதேசம்பெற்று யோக சாஸ்திரத்தைத் தோற்றுவித்தார். விஷ்வக்ஸேனனின் குமாரன் உதக்ஸ்வனன். அவனது மகன் பல்லாதன்.
ஹஸ்தியின் மகனான த்விமீடனின் வம்சம்முறையே யவீநரன், க்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன்,ஸுமதி, ஸந்ததிமான், க்ருதி. இந்த க்ருதி ஹிரண்யநாபர் என்பவரிடமிருந்து யோகசாஸ்திரத்தைப் பயின்று ப்ராச்யஸாமா என்ற ருக்குகளில் ஆறு ஸம்ஹிதைகளைப் பிரித்துக் கொடுத்தார்.
க்ருதியின் வம்சம் முறையே நீபன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுவீரன், ரிபுஞ்ஜயன், பஹுரதன் ஆகியோர்.
த்விமீடனின் தம்பியான புருமீடனுக்கு மக்கட்பேறில்லை.
ஹஸ்தியின் முதல் மகன் அஜமீடன். அவனது இரண்டாவது மனைவி நளினி. அவளது மகன் நீலன். அவன் வம்சம் வருமாறு. சாந்தி, ஸுசாந்தி, புருஜன் அர்க்கன், ப்ரம்யாஸ்வன். அவனது மகன்கள் முத்கலன், யவீநரன், ப்ருஹதிஷு, காம்பில்யன், ஸஞ்ஜயன் என ஐந்து புதல்வர்கள். ஒருநாள் ப்ரம்யாஸ்வன் என் இந்த ஐந்து புதல்வர்களும் ஐந்து தேசங்களை நிர்வகிக்கத் தகுந்தவர்கள் என்று கூறினான். பஞ்ச + அலம் என்பதாக அவர்கள் பாஞ்சாலர்கள் என்று அறியப்பட்டனர்.
இவர்களுள் மூத்தவரான முத்கலனிடமிருந்து மௌத்கல்ய வம்சம் தோன்றியது.
அவரது புதல்வன் திவோதஸன், மகள் அகல்யை. இவள் கௌதம முனிவரை மணந்தாள். இவர்களது புதல்வர் ஸதானந்தர்.
சதாநந்தரின் மகன் ஸத்யதிருதி தனுர்வேதத்தில் சிறந்தவர். அவரது மகன் சரத்வான். அவர் ஒரு சமயம் ஊர்வசியைக் கண்டு காமுற, இரண்டு குழந்தைகள் அக்கணமே தோன்றினர். அவ்விரட்டையரில் ஆண்ம்கவு க்ருபாசார்யார். பெண் மகவு க்ருபி ஆவாள். கிருபி துரோணாசார்யாரை மணந்தாள்..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
No comments:
Post a Comment