ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை முடித்துப் பின் உணவேற்பதாகச் சொல்லிவிட்டுத் தன் சீடர்களுடன் யமுனைக்குச் சென்றார் துர்வாசர்.
ஒரு பூஜையோ, பாராயணமோ, அல்லது சாதனையோ முடியும் தறுவாயில் ஒரு மஹாத்மா விஜயம் செய்தால், உண்மையில் இறைவனே வந்ததாகக் கொள்ளவேண்டும். அந்த பூஜை இறைவனுக்கு உகப்பு என்று பொருள்.
அவ்வாறே ஒரு வருடமாக அனுஷ்டித்துவரும் துவாதசி விரதத்தை முடிக்கும் தறுவாயில் துர்வாசர் வந்தது அம்பரீஷனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. தன் விரதம் நல்லபடியாகப் பூர்த்தி அடைந்ததென்று மகிழ்ந்தான்.
இறைவன் தன் விரதத்தை ஏற்றார் என்று பூரித்தான்.
அதிதியை விட்டுவிட்டு உணவு ஏற்பது பாவம் என்பதால் துர்வாசருக்காகக் காத்திருக்கத் துவங்கினான்.
துர்வாசரோ அம்பரீஷனை சோதிக்க எண்ணினார்.
அவர் ப்ரும்மத்யானம் செய்துகொண்டு நீருக்கடியில் அமர்ந்துவிட்டார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அம்பரீஷன் என்ன செய்கிறான் என்று தன் ஞானத்ருஷ்டியால் கவனித்துக்கொண்டே இருந்தார் துர்வாசர்.
நேரம் ஆக ஆக, துவாதசி திதி போய்க்கொண்டே இருந்தது. 24நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் அம்பரீஷன்.
துவாதசி திதி இருக்கும்போதே பாரணம் செய்யாவிடில், இவ்வளவு நாள்களாகக் கட்டிக் காத்த விரதம் நஷ்டமாகிவிடும்.
உணவு ஏற்கலாம் என்றாலோ, அதிதியா ல்க ஒருவர் வந்திருக்கும் போது, அவர் உண்ணாமல் தான் உண்பது மஹாபாவமாகும்.
இத்தகைய தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்ட அம்பரீஷன், சபையிலிருந்த அந்தணர்களைக் கலந்தாலோசித்தான்.
இதிலிருந்து மீள வழி உண்டா என்று சிந்தித்தபோது, அந்தணர்கள் ஒரு வழி சொன்னார்கள்.
நீர் மட்டும் அருந்தினால், பாரணம் செய்ததாகவும் ஆகும். செய்யாததாகவும் ஆகும் என்பதால், சாளக்ராமத்திற்கு அபிஷேகம் செய்த நீரை ஏற்கும்படி அரசனிடம் கூறினர்.
அம்பரீஷனும் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தை ஒரு உத்தரிணியில் பருகி பாரணையை முடித்தான்.
பின்னர், துர்வாசரின் வருகையை எதிர் பார்க்கலானான்.
அம்பரீஷன் பாரணையை முடித்தானோ இல்லையோ, ஞானக் கண்ணால் அனைத்தையும் பார்த்த துர்வாசமுனி உடனே அங்கு வந்தார்.
பசியோடு, சினத்தினால் உடல் நடுங்க, புருவங்களை நெறித்து, முகம் சிவக்க, அம்பரீஷனைப் பார்த்துச் சாடலானார்.
எவ்வளவு தீய எண்ணம் உனக்கு? அரசன் என்ற இறுமாப்போ? பக்தி இருக்கிறதென்ற கொழுப்பா? சர்வ வல்லமை படைத்தவன் நீ என்ற ஆணவமா? எவ்வளவு திமிர்? அழையா விருந்தாளியாக வந்த என்னை அத்தி ஸத்காரம் என்று விருந்துண்ண அழைத்துவிட்டு, எனக்கு முன் இவன் உண்டுவிட்டானே. இப்போதே இதன் பலனை அனுபவி
என்று கர்ஜித்த வண்ணம் தன் சடையிலிருந்து ஒன்றைப் பிடுங்கி எறிந்து, ஊழிக்காலப் பெருந்தீ போன்ற "க்ருத்யா" என்ற பிசாசைப் படைத்தார் துர்வாசர்.
என்று கர்ஜித்த வண்ணம் தன் சடையிலிருந்து ஒன்றைப் பிடுங்கி எறிந்து, ஊழிக்காலப் பெருந்தீ போன்ற "க்ருத்யா" என்ற பிசாசைப் படைத்தார் துர்வாசர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment