பகவானின் தரிசனம் பெற்றதும், மகிழ்ச்சியினால் பேச்சற்றுப் போன அதிதி தேவி, சிறிது நேரம் கழித்து மெதுவாகப் பேசத் துவங்கினாள்.
வேதங்களுக்கெல்லாம் தலைவரே! தன்னிலை வழுவாதவரே! நிகரில் புகழுடையவரே! கேட்கும்போதே நலன்களை வாரியிறைக்கும் நாமத்தை உடையவரே! பரிபூரணரே! ஸர்வேஸ்வரா!
இப்பிரபஞ்சத்தின் மூலகாரணமாக விளங்குபவரே! எல்லை காண இயலாதவரே! விருப்பம் போல் நாம ரூபம் ஏற்பவரே! இருப்பினும் நிர்குண ஸ்வரூபத்தில் நிற்பவரே! துன்பம் துடைப்பதால் ஹரி எனும் பெயர் பெற்றவ்ரே! பரிபூரண நித்யானந்த ஸ்வரூபரே! தங்களுக்கு நமஸ்காரம்!
இடம், காலம், திசைகளைக் கடந்த எம்பெருமானே! தங்களை மகிழ்விக்கும் அடியார்களுக்கு, ப்ரும்மாவைப் போல் இரண்டு மடங்கு ஆயுளும், விருப்பம் போல் அழகான சரீரமும், எல்லையற்ற செல்வமும், விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளம் வரை அனைத்து லோகங்களும், அணிமாதி சித்திகளும், உண்மையான பேரறிவும் தானாகக் கிடைக்கின்றன. அப்படியிருக்க, பகைவர்களை வெல்லுதல் போன்ற சிற்சிறு விருப்பங்கள் நிறைவேறும்.
இவ்வாறு அதிதி தேவி கூறினாள்.
தாமரைக் கண்ணனாகிய பகவான், அவளைப் பார்த்துக் கூறினார்.
தேவர்களின் அன்னையே! நீ வெகுகாலமாக எதை வேண்டுகிறாய் என்பதை அறிவேன். உன் மைந்தர்களான தேவர்களின் செல்வத்தையும் பதவியையும் அசுரர்கள் பறித்துக்கொண்டனர்.
உன் மக்கள் வெற்றி பெற்று வளமாய் வாழவேண்டும் என்பதே உன் அவா அல்லவா?
ஆனால், இப்போது அசுரர்களுக்கு காலம் சாதகமாய் இருக்கிறது. அவர்களை வெற்றி கொள்ள இயலாது. அந்தணர்களின் ஆசீர்வாதம் அவர்களைக் காத்து நிற்கிறது. எனவே, இப்போது அவர்களுடன் போரிட்டால் வெற்றி கிடைக்காது.
அதிதி தேவீ! நீ செய்த பயோ விரதத்தினால் நான் மிகவும் மகிழ்ந்தேன். நான் உனக்காக வேறு உபாயத்தை யோசிக்கிறேன். நீ என்னைக் குறித்து செய்த விரதம் வீணாகாது.
நீ உன் புதல்வர்களைக் காக்கவே, என்னை முறைதவறாமல் ஆராதனை செய்தாய். நான் எனது ஓர் அம்சத்தோடு கச்யபருக்கும் தங்களுக்கும் மகனாகப் பிறப்பேன்.
அப்போது என் தமையர்களான தேவர்களுக்காக நன்மை செய்வேன்.
நீ கச்யபரின் திருமேனியில் நானே விளங்குவதாக நினைத்து பூஜை செய்.
ஆனால், யார் கேட்டாலும் தாங்கள் என்னை தரிசனம் செய்தது பற்றிச் சொல்லவேண்டாம். தெய்வ ரகசியத்தை மறைத்து வைப்பது நிறைய பலனை அளிக்கும்.
என்றார்.
என்றார்.
பின்னர் அதிதி பார்த்துக்கொண்டிருக்கும்போதே பகவான் மறைந்தார். பகவான் தனக்கு மகனாகப் பிறக்கப்போவதை எண்ணி எண்ணி மகிழ்ந்த அதிதி மிகுந்த சிரத்தையுடன் கச்யபருக்கு சேவை செய்து வந்தாள். கச்யபரோ, அதிதியிடம் எதுவும் வினவாமல் தன் ஞான த்ருஷ்டியால் அனைத்தையும் அறிந்துகொண்டார்.
அதிதியின் கர்பத்தில் பகவான் பிரவேசித்ததும், ப்ரும்மா வந்து அவளை தரிசனம் செய்து மானசீகமாக பகவானைத் துதித்தார்.
எல்லாப் புகழுக்கும் அடைக்கலமான இறையே! எல்லையற்ற சக்தி படைத்தவரே! வணக்கம். முன்பொரு சமயம் அதிதி ப்ருச்னி என்ற பெயருடன் விளங்கினாள். அப்போது ப்ருச்னிகர்பன் என்ற பெயருடன் அவளுக்கு மகனாகப் பிறந்தீர்கள். இப்பிரபஞ்சத்தின் தோற்றமும், முடிவும், பிரபஞ்ச ரூபமாகவும் விளங்குபவர் தாங்கள். காலரூபியாக இருந்து அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறீர். சராசரங்கள், ப்ரஜாபதிகள் அனைத்தையும் தோற்றுவித்தவர் தாங்களே.
நீரில் மூழ்கித் தவிப்பவனுக்குத் தோணிபோல விண்ணுலகை இழந்து தவிக்கும் தேவர்களுக்கும் தாங்களே அடைக்கலம்.
என்று கூறி வணங்கினார்.
என்று கூறி வணங்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment