ஸ்ரீ சுகாசார்யார் அடுத்ததாக யோக வழியைச் சொல்கிறார்.
யோகியானவன் உடலை விட்டுவிட விரும்பினால், இடம், காலம் நிகழ்வுகளில் மனத்தைச் செலுத்தாமல், அசைவற்ற ஒரு சுகமான ஆசனத்தில் அமர்ந்து, புலன்களை அதன் வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.
ப்ராணாயமத்தால் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். புலன்களை வசப்படுத்த மனத்தையடக்கவேண்டும். மனத்தை புத்தியால் தன்வயப்படுத்தவேண்டும்.
மனம், புத்தி இரண்டையும் அவற்றின் ஆதாரமான ஆத்மாவில் அல்லது க்ஷேத்ரக்ஞனில் ஒடுக்கவேண்டும். மனம், புத்தி, க்ஷேத்ரக்ஞன் மூன்றையும் சுத்த ஸத்வமான ஆத்மாவில் லயமாக்கவேண்டும். பிறகு நான்கையும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவில் லயமடையச் செய்தால் அதன் பின் சாந்திதான்.
பகவானது காலஸ்வரூபம் ப்ரும்மா உள்பட அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. தேவர்கள் புலன்களின் அதிபதிகளாக இருந்து ஆட்டிப்படைக்கிறது.
பகவானின் பரமாத்ம ஸ்வரூபத்தில் லயமடைந்தவனை பகவானின் காலரூபமான சக்திகூட ஒன்றும் செய்ய இயலாது. ப்ரக்ருதியே ஒன்றும் செய்ய இயலாதெனில், முக்குணங்கள் என்ன செய்து விட முடியும்?
யோகிகள் பரமாத்மாவைத் தவிர, மற்ற அனைத்தையும் இதுவல்ல இதுவல்ல என்று தள்ளிவிடும்போது, நான் என்றோ, என் மனைவி மக்கள் என்றோ எப்படி உணர்வான்?
யோக மார்கத்தைப் பின்பற்றும் சாதகன் நானே ப்ரும்மம் என்ற எண்ணத்துடன், ஆசார்யர்களின் கருணையால், புல்ன்களின் செயல்களை அடக்கி, உடலை விடவேண்டும். முதலில் குதிகால்களால் அழுத்தி அமர்ந்து உடலில் காற்று உருவில் இருக்கும் ப்ராணன், அபானன் முதலிய வாயுக்களை தொப்புள், இதயம், மார்பு, உள்நாக்கு, புருவ மத்தி, ப்ரும்மரந்திரம் ஆகிய இடங்களுக்கு ஒன்றின் மேல் ஒன்றாகக் கொண்டுபோகவேண்டும்.
மணிபூரகம் என்ற தொப்புளில் உள்ள ப்ராணனை , இதயத்திலுள்ள அநாஹத சக்கரத்திலும், பின் ப்ரும்மநாடி வழியாக மார்பிலுள்ள விசுத்தி சக்கரத்தில் கொண்டுபோகவேண்டும். அங்கிருந்து, புத்தியால் அநுஸந்தானம் செய்துகொண்டு, ப்ராணனை உள்நாக்கிற்குக் கொண்டுபோகவேண்டும்.
பின்னர் புருவமத்தியில் செலுத்தவேண்டும். அப்போது, கண், காது, மூக்கு, வாய் ஆகிய ஏழு துவாரங்களையும் அடைத்து விடவேண்டும். ஆக்ஞாசக்கரத்தில் புருவ மத்தியில் இருக்கும்போது ஸ்வர்கம் முதலிய உலகங்களுக்குச் செல்லலாம். அவ்வாறு விருப்பமில்லையெனில், இறைவனை அரை முஹூர்த்த நேரம் த்யானிக்கவேண்டும்.
பின்னர் ப்ராணனை ஸஹஸ்ராரம் என்ற உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். இப்போது ப்ரும்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தவனாவான். புலன்களையும் உடலையும் விடுவதற்கு, ப்ராணன் உச்சிக்குழியைப் பிளந்து வெளிச்செல்லவேண்டும்.
யோகாப்யாசம் இல்லாதவனுக்கும் இதுவரை சொல்லப்பட்ட வழியில்தான் இறுதி காலத்தில் ப்ராணன் வெளியேறுகிறதும் தொண்டைக் குழியில் உள்ள ப்ராணன் மற்றவர்களுக்கு கண் காது மூக்கு இவைகளில் ஏதாவது ஒன்றின் வழியாக வெளியேறும்.
ஏனெனில் அத்துவாரங்களின் புலன்கள் அடக்கப்படாததே காரணம்.
ப்ரும்மாதி லோகங்களை அடைய விரும்புபவரோ, சித்தராகத் திரியவோ, ப்ரும்மாண்டத்தில் எங்காவது சுற்றவோ விரும்பும் யோகி, இவ்வுடலை உதறிக் கிளம்பும்போது, மனம், புலன்களைத் தன்னுடன் எடுத்துச் செல்லவேண்டும்.
சூக்ஷ்மமான உடலுடைய பக்தியோக, தபோயோக, ஞானயோக சித்தர்கள், உள்ளும் புறமும் விரும்பியபடி தடையின்றி சஞ்சாரம் செய்கிறார்கள்.
சூக்ஷ்மமான உடலுடைய பக்தியோக, தபோயோக, ஞானயோக சித்தர்கள், உள்ளும் புறமும் விரும்பியபடி தடையின்றி சஞ்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு சுற்றித் திரியும் யோகிகளின் சஞ்சாரங்களையும், அவர்கள் அடையும் உலகங்களையும் அவர்கள் எவ்வாறு பகவானின் விராட் ஸ்வரூபத்தில் அடங்குகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment