Wednesday, April 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 245

பகவான் ஸ்ரீ ஹரி மோஹினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பரமேஸ்வரன் அத்திருக்கோலத்தைக் காண விரும்பி, பார்வதியுடன், பூத கணங்கள் சூழ, பகவான் ஹரியை நோக்கி வந்தார்.
அவரை உரிய மரியாதையுடன் வரவேற்று, உபசரித்து, ஆசனமளித்து அமர்த்தினார்.

மஹாதேவன் பேசலானார்.
நாராயணா! பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறீர். பிரபஞ்சத்தை அடக்கி ஆள்பவர் தாங்கள். பிரபஞ்சமாகவும் நீரே இருக்கிறீர். எல்லாப்பொருள்களுக்கும் ஆன்மாவாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறீர்.

பரமார்த்திக ஸத்ய சின்மய வடிவமாய் விளங்குகிறீர். அமுதமேனியர். முக்குணங்களற்றவர். ஆனந்த வடிவினர். தங்களைத் தவிர எதுவுமே இல்லை. அனைத்திலும் விடுபட்டுத் தனித்திருக்கிறீர். அனைத்து ஜீவராசிகளின் நல்வினை தீவினைக்கேற்ப பயனளிக்கிறீர். எவ்வித விருப்பு வெறுப்பும் அற்றவர். உபநிடதங்கள் விளக்கும் பரப்ரும்மம் தாங்களே.

தங்கம் பலப்பல ஆபரணங்களாகவும், கட்டித் தங்கமாகவும் உள்ளது. அதுபோலவே தாங்களும் காரிய ரூபமான உலகமாகவும், காரணமாகவும் விளங்குகிறீர்.

இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல், மற்றும் ஸகல ஜீவராசிகளின் செயல்கள், ஸம்ஸார பந்தம், முக்தி ஆகியவற்றை அறிவீர்.

திருவிளையாடல்கள் புரிய எண்ணிய தாங்கள், ஸத்வ குணத்தை ஏற்று, பல அவதாரங்கள் புரிந்தீர்கள். அவை அனைத்தையும் கண்டிருக்கிறேன். இப்போது தாங்கள் ஏற்ற மோஹினி வேடத்தைக் காணவில்லை. மயக்கும் அத்திருக்கோலத்தைக் காணும் ஆவலோடு நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.

பகவான் மிகவும் ஆழ்ந்த பொருள் பொதிந்த புன்னகையுடன் சொன்னார்.

பரமேஸ்வரா! தேவர்களுக்கு அமுதம் கிடைக்க, ஏதோ செய்து அசுரர்களை மயக்கமுறச் செய்யவேண்டும். அதற்காக மாயையே உருவான மோஹினி உருவம் எடுத்தேன். காமத்திற்காட்படவர்களே அவ்வுருவைக் காண விழைவர். தாங்கள் கேட்பதால் காட்டுகிறேன்
என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

பார்வதியும், சிவனும், மற்ற பூதங்களும் நாற்புறங்களிலும் கண்களைச் சுழற்றித் தேடலாயினர்.
அப்போது சிவந்த தளிர்களும், பல வண்ண மலர்களும் நிறைந்த ஒரு மலர் வனத்தில் இடுப்பில் அழகிய பட்டாடையும், ஒட்டியாணமும் அணிந்த அழகிய பெண்ணொருத்தி பந்து விளையாடிக்கொண்டிருக்கக் கண்டனர்.

காதுகளில் மகரகுண்டலமும், முகத்தில் சுருண்டு விழும் முடியழகும், அவளது அவயவங்களின் அழகும் அகில உலகங்களையும் மயக்குபவை. அவள் பரமேஸ்வரனைத் தன் ஓரவிழியால் பார்க்க, அவர் பார்வதி மற்றும் பூதகணங்களை மறந்து அவளைத் தொடர்ந்து ஓடலானார். அவளைத் தொடர்ந்து வெகுதூரம் ஓட, அவள் பிடிகொடுக்காமல் வழுக்கி ஓடினாள். ஒருவழியாக அவளைத் தாவிப் பிடித்ததும், பரமேஸ்வரன் தன் நிலைக்குத் திரும்பினார்.
ஆன்மாவாக விளங்கும் பகவானின் மகிமையை அறிந்த பரமேஸ்வரன், பகவானின் சக்தியை மீற எவரால் முடியும் என்று எண்ணினார்.

அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த பகவான்,
தேவதேவனே! நீங்கள் என் பெண்ணுருவைக் கண்டு மயங்கியபோதும், நிலை கலங்கவில்லையே. என் மாயையிலிருந்து தப்ப உங்களைத் தவிர வேறு எவரால் முடியும்? என்று பரமேஸ்வரனைக் கொண்டாடினார்.

பின்னர், பரமேஸ்வரன், பார்வதியிடம்
பகவான் விஷ்ணுவின் மாயையைக் கண்டாயல்லவா? அனைத்து வித்யைகளுக்கும் தலைவனான நானே மயங்கினேன் என்றால் சாதாரண ஜீவராசிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

நான் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஸமாதியிலிருந்து விழித்தபோது, யாரை தியானம் செய்கிறீர்கள் என்று கேட்டாயல்லவா? அந்த உபாசனா மூர்த்தி இந்த பரமபுஷர்தான். இவரே ஆதிபுருஷன்.

காலத்திற்கப்பாற்பட்டவர். இவரது உண்மை உருவம் எல்லையற்றது. மனம், மற்றும் சொல்லுக்கெட்டாதது. என்றார்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
பரீக்ஷித்! மந்தர மலையை முதுகில் தாங்கிய ஸ்ரீ மன் நாராயணனின் இந்த திருவிளையாடல்களைக் கேட்பவர்க்கு பகவான் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியருள்வான். அந்த இறைவனின் சரண கமலங்களை வணங்குகிறேன். என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment