தர்மபுத்ரர் கேட்ட கேள்விக்கு நாரதர் விடை கூறத் துவங்கினார்.
மயன் என்பவன் அசுரர் தலைவன். முன்பொரு சமயம் போரில், தேவர்கள் அசுரர்களை வென்றனர். அசுரர்கள் சென்று தங்கள் தலைவனான மயனிடம் முறையிட்டனர்.
அவனும் தன் மாய சக்தியால், தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று பட்டணங்களைப் படைத்து அவர்களிடம் கொடுத்தான்.
அவை எங்கு செல்கின்றன? எப்போது எப்படி வரும்? என்பதை ஒருவரும் அறிய இயலாது. மேலும் அவை, சக்தி வாய்ந்த பல போர்த்தளவாடங்களை உள்ளடக்கியவை.
அசுரர்கள் அவற்றில் மறைந்திருந்து திடீர் திட்டிரென்று தேவர்களைத் தாக்கத் துவங்கினர்.
மூவுலகங்களையும் சற்றும் எதிர்பாராத சமயங்களில் தாக்கி அழிக்கலாயினர்.
மிகவும் துன்பமடைந்ததால், மூவுலகங்களின் தலைவர்களும் பரமேஸ்வரனிடம் சரணடைந்து,
மஹாதேவா! தங்கள் பக்தர்கள் எங்களை மிகவும் வாட்டி வதிக்கிறார்கள். தயை கூர்ந்து காத்தருளுங்கள் என்று வேண்டினர்.
பரமேஸ்வரன் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய வில்லான பிநாகத்தை எடுத்து முப்புரங்கள் மீதும் அம்பெய்தினார்.
ஈஸ்வரன் விட்ட அம்பிலிருந்து சூரியக் கிரணங்கள் போல் பலப்பல பாணங்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டு வெளிக்கிளம்பி முப்புரங்களையும் மறைத்தன.
முப்புரங்களிலிருந்து பல அசுரர்கள் மயக்கமுற்று பூமியில் விழுந்தனர்.
மஹா மாயாவியான மயன் அவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் தான் ஏற்படுத்திய அமுதக் கிணற்றில் போட்டான்.
அக்கிணற்றின் அமுதம் பட்டதும் அசுரர்கள் உயிர் பெற்றதோடு மட்டுமின்றி வஜ்ரம் போல் பளபளக்கும் உடலையும் பெற்று முன்னிலும் பலசாலிகளாக விளங்கினர்.
பரமேஸ்வரன் தன் எண்ணம் வெற்றியுறாததைக் கண்டு திகைத்தார். அப்போது ஸ்ரீஹரி, அவரிடம் உபாயத்தைக் கூறினார்.
ஸ்ரீமன் நாராயணன் பசுவாகவும், ப்ரும்மதேவர் கன்றுக்குட்டியாகவும் மாறி முப்புரங்களிலிருந்த அமுதக் கிணறுகளின் அமுதம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்.
அங்கு காவற்காத்த அசுரர்கள் இதைக் கண்டபோதும், பகவான் அவர்களை மாயையால் கட்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மயன் இதைக் கண்டு வருந்தாமல், தன் காவலாளிகளுக்கு தைரியம் கூறினான்.
தேவரோ, அசுரரோ, மனிதரோ, எந்த ஜீவனானாலும், முன் வினைப் பயனை மாற்ற இயலாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். மனம் வருந்தாதீர். ஆகவேண்டியதைப் பார்ப்போம்
என்றான்.
பகவான் ஹரி ருத்ரனுக்கான போர்க்கருவிகள் பலவற்றை உருவாக்கினார். ரதம், தேரோட்டி, குதிரைகள், வில், கவசம், பாணங்கள் அனைத்தையும் ஆக்கித் தந்தார்.
அனைத்தையும் ஏற்றுத் தயாராகி பரமேஸ்வரன் தேரிலேறிக் கிளம்பினார். அபிஜித் முஹூர்த்தத்தில் நாணேற்றி, முப்புரங்களின் மேல் மழைபோல் அம்பு தொடுக்க, அவை எரிந்து சாம்பலாயின. மூவுலகத்தோரும் வெற்றி முழக்கமிட்டனர்.
பரமேஸ்வரனுக்கு புரமெரித்தோன் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.
அனைவரும் இருப்பிடம் சென்றனர்.
பகவான் ஹரியின் திருவிளையாடல்கள் ஒப்பற்றவை. அனைவராலும் புகழப்படுபவை.
என்றார் நாரதர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment