மூவுலகிலும் சஞ்சாரம் செய்யும் நாரதர் அடிக்கடி துவாரகையில் வந்து தங்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
இப்படி ஒரு சமயம் துவாரகை வந்த நாரதர், வசுதேவரின் வீட்டிற்குச் சென்றார். வசுதேவர் அவரை முறைப்படி வரவேற்று உபசரித்தார். பின்னர் அவரிடம் கூறினார்.
மஹரிஷீ! தாங்கள் பகவானின் வழியைப் பின்பற்றுகிறீர்கள். தங்கள் வருகை அனைவர்க்கும் நன்மை செய்யக்கூடியது.
தேவதைகள் உடனுக்குடன் அருள்கின்றனவோ இல்லையோ, தங்களைப்போன்ற மஹான்களின் அருளைப் பெறுவது எளிது. அது பகவானிடம் ஒரு ஜீவனை அழைத்துச் சென்றுவிடுகிறது.
பிற தெய்வங்கள் வழிபாட்டுக்கேற்ப அருள்பவை. ஆனால் ஸாதுக்களோ காரணமே இன்றி கருணை பொழிபவர்கள்.
எல்லா பயங்களிலும் விடுவிக்கும் பாகவத தர்மத்தை எனக்கு உபதேசிக்கும்படி வேண்டுகிறேன்.
முன்பொரு சமயம் நான் பகவானை ஆராதனம் செய்தேன். முக்தியைக் கொடுக்க வல்ல அவரிடம் போய் பிள்ளைப்பேறு வேண்டும் என்று கேட்டேன். அப்போது தேவமாயை என்னை மயக்கியிருந்தது.
தவ ச்ரேஷ்டரே! இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்கள் கூட சில சமயம் இன்பமளிப்பவை போல் ஏமாற்றுகின்றன. நிச்சய இன்பத்தைத் தரும் முக்தி மார்கத்தை எனக்குக் கூறியருளுங்கள். என்றார்.
இதைக் கேட்டதும் நாரதர், பகவானின் கல்யாண குணங்களை எண்ணி பரவசத்துடன் மெய்மறந்தார். பின்னர் மெதுவாகப் பேசத் துவங்கினார்.
யதுகுலோத்தமரே! உலகனைத்திற்கும் நன்மை பயக்கும் பாகவத தர்மத்தைக் கேட்டீர்கள்.
பாகவத தர்மத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும், மனப்பூர்வமாக அனுசரிப்பதாலும் அந்த நொடியே ஒரு ஜீவன் புனிதமடைகிறான். எவ்வளவு தீயவனாக இருப்பினும் அவன் உடனேயே தூய்மையாகிவிடுகிறான்.
மங்கள மயமான பகவானின் நாமங்களை உச்சரிப்பது, கேட்பது, ஆகியவை பெரும் புண்ணியம் தருபவை. அத்தகைய பகவான் நாராயணனை எனக்கு நீங்கள் நினைவுபடுத்தினீர்கள்.
இது விஷயமாக ஒரு பழைய நிகழ்வைக் கூறுகிறேன்.
விதேக நாட்டு மன்னர் நிமி (அவரது சரித்ரம் முன்பு கூறப்பட்டது.) என்பவருக்கு நவ யோகிகள் என்றழைக்கப்ப்டும் ரிஷபதேவரின் புதல்வர்கள் கூறிய விஷயம்தான் இவை.
ஸ்வாயம்புவ மனுவின் மகன் ப்ரியவ்ரதன். அவருடைய மகன் ஆக்னீத்ரன். அவருடைய மகன் நாபி. நாபியின் புதல்வர் பகவான் ரிஷபதேவர்.
பகவான் வாசுதேவனின் அம்சமாகப் பிறந்தவர் ரிஷபதேவர். அவருடைய மகன்கள் நூற்றுவர். அவர்களுள் முதல்வன் பரதன். என்பவன். பெரிய பக்தனாகவும், ஞானியாகவும் விளங்கினான். அவனுடைய பெயரிலேயே இந்த தேசம் பாரத வர்ஷம் என்றழைக்கப்படுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment