அடுத்ததாக இன்னொரு சுவையான நிகழ்வை விவரிக்கத் துவங்கினார் ஸ்ரீ சுகர்.
பரீக்ஷித் ப்ராயோபவேசம் வந்து ஆறு நாள்களாகிவிட்டிருந்து. அவன் மனத்தில் ஏகாக்ர பக்தியை விதைக்க, பகவான் ஹரியின் மேன்மைகளைப் பறைசாற்றும் கதைகளாகத் தேர்ந்தெடுத்து கூறினார் போலும்.
சீடனின் மனப்பக்குவத்தை அறிந்து அதற்கேற்ப அவனை வழிநடத்திச் செல்வதே குருவின் தலையாய பணியல்லவா?
பரீக்ஷித்! ஒரு சமயம் ஸரஸ்வதி நதிக்கரையில் முனிவர்கள் ஸத்ரயாகம் செய்தனர்.
யாகத்தின் விராம(இடைவெளி) காலத்தில், உறங்கக்கூடாது. அதற்காக, வேதாந்த ஸதஸ்கள், புராண ப்ரவசனங்கள், விவாதங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொள்வார்கள். அதுபோல இந்த யாகத்தின் விராமத்தில் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவருள் யார் சிறந்தவர் என்ற விவாதத்தை மேற்கொண்டனர்.
அதற்கு முடிவு எட்டப்படாததால், உண்மையை அறியவிரும்பி, ப்ரும்மாவின் புதல்வரான ப்ருகு முனிவரை அனுப்பினர்.
ப்ருகு முனிவர் முதலில் ப்ரும்மலோகம் சென்றார்.
ப்ரும்மாவின் குணத்தைச் சோதிக்க விரும்பிய ப்ருகு, ப்ரும்மாவின் எதிரில் போய் நின்றார். வணங்கவும் இல்லை, துதிக்கவும் இல்லை.
ப்ரும்மாவிற்கு கடுங்கோபம் வந்தது. எட்டு கண்களும் சிவந்தன. தன்னை அவமதித்ததாக எண்ணினார். இருப்பினும் ப்ருகு அவரது மகன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் பொறுத்துக்கொண்டார்.
அதைப் புரிந்துகொண்ட ப்ருகு, ஒன்றும் பேசாமல், கிளம்பிவிட்டார்.
நேராக கைலாயத்தினுள் நுழைந்தார். ப்ருகுவைக் கண்டதும் பரமேஸ்வரன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரைத் தழுவுதற்காக வந்தார். ப்ருகு முனிவரோ, வேண்டுமென்றே, அவரது கைகளைத் தள்ளி,
நீங்கள் வேதத்திற்கும் உலக நடைமுறைக்கும் ஒவ்வாத வழிச் செல்கிறீர்கள் என்றார்.
அன்புடன் அணைக்க வந்த கரத்தைத் தட்டியதோடு, குறைகாணும் சொற்களைப் பேசியதையும் கேட்டு
பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு ப்ருகுவைத் தாக்குவதற்காக சூலத்தை எடுத்தார்.
முனிவரைத் தாக்குதல் தகாது என்று பார்வதி ஓடிவந்து கணவரைச் சமாதானம் செய்தார். பாதிப்பு வருவதற்குள் ப்ருகு அங்கிருந்து நழுவிவிட்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment