ராஜரிஷியாக விளங்கிய பரதன் புவி முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்டான். பகவானைச் சிறப்பாக பக்தி செய்து, தவம் செய்வதற்காக அரசைத் துறந்து கானகம் ஏகினான். அங்கே ஒரு மானால் சஞ்சலம் அடைந்து பின்னர் மூன்றாவது பிறவியில் ஜடபரதர் என்ற மஹாஞானியாகப் பிறந்து பகவானை அடைந்தான்.
ரிஷபதேவரின் நூறு மகன்களில் ஒன்பது பேர் பாரத வர்ஷத்தைச் சுற்றியிருக்கும் ஒன்பது தீபகற்பங்களுக்குத் தலைவர்களானார்கள். எண்பதோரு பேர் கர்மவழிச் செல்லும் வைதிகர்கள் ஆனார்கள்.
மீதியுள்ள ஒன்பது பேர் அனைத்தையும் துறந்து திகம்பரர்கள் ஆனார்கள். அவர்களின் பெயர்கள் கவி, ஹரி, அந்தரிக்ஷர், ப்ரபுத்தர், பிப்பலாயனர், ஆவிர்ஹோத்ரர், த்ருமிளர், சமஸர், கரபாஜனர் ஆகியவை.
அவர்கள் இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் பகவானாகவே கண்டனர். தங்களை உலகிற்குத் தொடர்பில்லாதவர்களாக எண்ணாமல் அனைத்துமே பகவான் என்றெண்ணியதால் சுதந்திரமாகச் சுற்றி வந்தனர்.
மூன்று உலகங்கள், ஸித்த, சாரண, கந்தர்வ, வித்யாதர லோகங்களிலும் சஞ்சாரம் செய்தனர்.
ஒரு சமயம் அஜநாபம் என்றழைக்கப்படும் இந்த பாரத வர்ஷத்தில் விதேக அரசனான நிமிச் சக்ரவர்த்தி ஒரு ஸத்ர யாகம் நசத்தினார். இந்த ஒன்பது யோகீஸ்வரர்களும் தன்னிச்சையாக அந்த யாக சாலையில் ப்ரவேசித்தனர்.
தன்னொளி வீசும் அவர்களைக் கண்டதுமே அவர்கள் ஞானிகள் என்பது அனைவர்க்கும் தெளிவாக விளங்கிற்று.
வேள்வியின் தலைவரான நிமி, அக்னி குண்டத்தில் எழுந்தருளியிருந்த அக்னி தேவர், மற்றும் ரித்விக்குகள் அனைவரும் அவர்களைக் கடதும் உடனே எழுந்து நின்றனர்.
ஏதாவது ஸத்காரியம் நடக்கும்போது அவ்விடத்திற்கு ஒரு மஹாத்மா முன்னறிவிப்பின்றி எதேச்சையாக வந்தால், அக்கர்மத்தினால் இறைவன் மகிழ்ந்தான் என்றும் அது ஸபலமாயிற்று என்றும் கொள்ளவேண்டும்.
இங்கே ப்ரும்மஞானிகளான நவயோகிகளைப் பார்த்ததும் நிமி மிகவும் மகிழ்ந்தார். ஓடோடிச்சென்று அவர்களை வணங்கி, வரவேற்று ஆசனமளித்தார்.
பின்னர் அவர்களைப் பார்த்துக் கூறினார்.
நீங்கள் பகவானின் பிரியமான தொண்டர்கள் என்றறிகிறேன். ஹரியின் பக்தர்கள் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்துவதற்காகச் சுற்றி வருகின்றனர்.
இந்த மானுடப் பிறவியே மிகவும் அரிதானது. மிகவும் குறைவான காலமே நிலைக்கக்கூடியது. இக்குறுகிய வாழ்வில் பகவானின் தரிசனம் கிடைப்பது அரிது. அதனினும் அரிது பகவானின் தொண்டர்களின் தரிசனம். தங்களைப் போன்றவர்களுடன் அரை நொடி நேரம் ஸத்சங்கம் கிடைத்தாலும் அது மாபெரும் நிதியாகும். அழிவற்ற தன்மையை அடையும் வழியை எடுத்துக்கூறும்படி தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பாகவத தர்மத்தைக் கேட்டு அதன்படி நடந்தால் பகவான் அவர்க்குத் தன்னையே தந்துவிடுவார். அத்தகைய பெருமை வாய்ந்த விஷயத்தைக் கேட்கும் தகுதி எனக்கு இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் எனக்கு விளக்கியருளுங்கள் என்றார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment