முனிவர்களின் சாபத்தைக் கேட்டதும் பயந்துபோனார்கள் யாதவ இளைஞர்கள். உடனே சாம்பனின் வேஷத்தைக் கலைத்து வயிற்றில் சுற்றியிருந்த துணியை நீக்கினால் அதனுள் நிஜமாகவே ஒரு இரும்பு உலக்கை இருந்தது.
ஐயகோ! நமக்குக் கெட்டகாலம் வந்துவிட்டது போலும். பெரிய தவறு செய்தோம். என்று அரற்றிக்கொண்டு வருத்தத்துடன் அனைவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் நேராக உக்ரசேனரின் அவையில் கொண்டுபோய் உலக்கையை வைத்தனர். நடந்த அனைத்து விஷயங்களையும் ஒளிக்காமல் கூறினார்கள்.
அவர்கள் சொன்னதைக் கேட்டு அத்தனை பேருக்கும் கிலி பிடித்துக்கொண்டது. அந்தணர் சாபம் பொய்க்காது என்று பயந்தார்கள்.
உக்ரசேனர் அவ்வுலக்கையைப் பொடிப்பொடியாக நொறுக்கி கடலில் வீசக் கட்டளையிட்டார். இது விஷயமாகக் கண்ணனுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
ஒருக்கால் கண்ணனிடம் தெரிவித்திருந்தால் வேறு உபாயம் செய்திருப்பானோ என்னவோ. எல்லாவற்றையும் ஓடி ஓடி கண்ணனிடம் முதலில் தெரிவிக்கும் அவர்களுக்கு இவ்விஷயத்தைச் சொல்லவேண்டாம் என்று தோன்றியதும் அவனது சங்கல்பமே.
இரும்புத்தூள்கள் கடலில் கரையுமா என்ன?
சில நாள்களுக்குப் பின் அவை மிதந்து கரை ஒதுங்கின. அவைகளிலிருந்து ஒரு விதமான கோரைப்புற்கள் தோன்றின. அவ்விரும்புத் துகளுள் ஒன்றை ஒரு மீன் விழுங்கியது.
அந்த மீன் ஒரு மீனவனின் வலையில் சிக்கியது. அதை அவன் சந்தையில் விற்கப் புகுந்தான். அதை ஒரு வேட்டைக் காரன் வாங்கினான். அவன் வீட்டுக்குச் சென்று மீனை அறுத்ட்கபோது அதன் வயிற்றில் மிகவும் கூரான ஒரு இரும்புத்துகளைக் கண்டான். அதை எடுத்துத் தன் அம்பில் பொருத்திக்கொண்டான்.
அனைத்தையும் கண்ணன் அறிந்தே வாளாவிருந்தான். அந்தண சாபத்தை மாற்றி அமைக்கும் திறன் இருந்தும், கால வடிவம் எடுத்தவனாய் அழிக்கும் சக்தியாய் பூபாரத்தைக் குறைக்கவேண்டி பேசாமல் இருந்தான். அந்தண சாபத்தை ஒரு காரணமாக வைத்து யாதவ குலத்தை அழிக்க முடிவுசெய்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment