மாயாவதியின் மூலமாக தன் ஸ்வரூபத்தை அறிந்த ப்ரத்யும்னன், மாயவித்யைகள் அனைத்தையும் அவளிடமே கற்றான். பின்னர் தன்னைக் கடத்தி வந்த சம்பரனின் எதிரில் போய் நின்றான்.
பச்சிளம் குழந்தையாக ப்ரத்யும்னனைப் பார்த்திருந்த சம்பரனுக்கு அழகே உருவான இந்த இளைஞனை அடையாளம் தெரியவில்லை.
வேண்டுமென்றே சம்பரனின் கோபத்தைச் சீண்டும் வண்ணம் பல்வேறு வகையான வசைமொழிகளை ஆவேசத்துடன் கூறி விளித்தான் ப்ரத்யும்னன்.
அசுரனான சம்பரனுக்கு இயல்பாகவே கோபம் அதிகம். ப்ரத்யும்னனின் இழி சொற்களைக் கேட்டதும் அவனது கோபம் தலைக்கேறியது. கண்கள் சிவந்தன. கையில் கதையேந்தி ப்ரத்யும்னனைத் தாக்க ஓடிவந்தான்.
தன் மேல் வீசப்பட்ட கதையைத் தடுத்து, தன் கதையை ஓங்கி அவன் மேல் அடித்தான் ப்ரத்யும்னன்.
மயனின் சீடனான சம்பரன் அசுர மாயையைப் பயன்படுத்தி வானில் சென்று மறைந்தான். கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்துகொண்டு ப்ரத்யும்னன் மேல் அம்புமழை பொழிந்தான்.
அந்த அஸ்திர மழையை ப்ரத்யும்னன் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு சத்வ குண மாயையான மஹாமாயா வித்யையை சம்பரன் மேல் ப்ரயோகம் செய்தான்.
சம்பரன் பதிலுக்கு கந்தர்வ, பைசாச, நாக, ராட்சசர்களின் மாய வித்யைகளை ஏவினான். அவையனைத்தையும் முறியடித்தான் ப்ரத்யும்னன்.
அத்தனை மாயவித்யைகளும் தோற்றதும் அதற்குமேல் சம்பரனால் ஒளிய இயலவில்லை.
கண்ணெதிரே தாமிர நிறமுள்ள மீசையுடன் தோன்றிய சம்பரனின் தலையை கணநேரத்தில் துண்டித்தான் ப்ரத்யும்னன்.
தேவர்கள் உடனே துந்துபி முழங்கி பூமாரி பெய்தனர்.
மாயாவதி உடனேயே ப்ரத்யும்னனை அழைத்துக்கொண்டு வான்வழியாகவே துவாரகைக்குச் சென்றாள்.
நேராக இருவரும் அந்தப்புரத்தில் இறங்கி ருக்மிணியின் கண்முன்னே தோன்றினர்.
நீலத்திருமேனி, அரையில் பொன்னாடை, முழங்கால் வரை நீண்ட திருக்கரங்கள், தாமரை போன்ற அழகிய ஒளிவீசும் திருமுகம், சட்டென்று பார்த்தால் கண்ணனைப் போலவே இருந்தான் ப்ரத்யும்னன். அவனைக் கண்ணன் என்றே நினைத்து அந்தப்புரப் பெண்கள் வெட்கத்தால் ஓடி ஆங்காங்கு ஒளிந்தனர்.
சற்று நேரத்தில் சில வித்யாசங்களைக் கண்டதும், இவர் கண்ணனல்ல என்றுணர்ந்து அருகில் சென்று யாரென்று விசாரித்தனர்.
ப்ரத்யும்னனைக் கண்டதுமே ருக்மிணிக்குத் தன் குழந்தையின் நினைவு வந்தது. தொலைந்துபோன தன் குழந்தை வளர்ந்தால் இப்படித்தான் இருப்பான். இவன் கண்ணனைப் போலவே இருக்கிறான். யாரென்று தெரியவில்லையே. இந்தப் பெண்ணும் அவனையொத்த அழகுடையாளாய் இருக்கிறாளே என்று எண்ணினாள்.
உருவம், நடை, அழகு, பாவனைகள் அனைத்தும் கண்ணனைப் போலவே இருக்கிறதே. ஒருக்கால் இவன் எங்கள் மகன்தானோ என்ற எண்ணம் வந்ததும் ருக்மிணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
அவ்வமயம் கண்ணன், தேவகி, மற்றும் வசுதேவருடன் அங்கு வந்தான்.
ஆனால், வாயே திறக்கவில்லை.
அனைத்தும் அறிந்திருந்தும் கண்ணன் பேசாமல் இருந்தான். கண்ணனின் அச்சாக இன்னொருவனைப் பார்த்து அனைவரும் ஒன்றும் பேச இயலாமல் சொல்லற்றுச் சமைந்து நின்றனர்.
ருக்மிணியின் இடது தோள்கள் துடித்தன. இதற்கு மேல் மௌனம் தாங்காது என்று நாரதர் அங்கு வந்தார்.
அவரே அத்தனை விஷயங்களையும் ருக்மிணிக்கு விளக்கிச் சொன்னார்.
ப்ரத்யும்னனின் வ்ருத்தாந்தங்களைக் கேட்டதும் அனைவரும் இறந்தவர் மீண்டும் பிழைத்ததுபோல் மகிழ்ந்தனர்.
அனைவரும் அவனைக் கட்டித் தழுவிக்கொண்டனர்.
காட்டுத்தீபோல் த்வாரகை முழுதும் விஷயம் பரவ, ஊர் கோலாஹலம் கொண்டது.
சாதாரணமாகவே மன்மதன் மயக்கும் அழகுடையவன். கண்ணனுக்குப் புதல்வனான அவனை நேருக்கு நேர் கண்ட துவாரகைவாசிகள் அவன்மேல் மயக்கம் கொண்டதில் வியப்பென்ன?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment