ஸ்ரீ வாசுதேவனின் மனத்திலிருந்து தோன்றியவன் மன்மதன். அவன் ஒருமுறை பரமேஸ்வரனின் கோபத்தால் சாம்பலாகிவிட்டான்.
ரதிதேவியின் ப்ரார்த்தனைக்கிணங்க அவனுக்கு மீண்டும் தேகம் கிடைக்கும் வரை அனங்கனாக உருவமின்றி சுற்றும் வரம் கிடைத்தது.
இப்போது கண்ணனுக்குத் திருமணமானதும் மீண்டும் பகவானுக்கே மகனாகப் பிறந்து உடலை அடையும் பாக்யம் பெற்றான். ருக்மிணியின் வயிற்றில் பிறந்த அவன் ப்ரத்யும்னன் என்றழைக்கப்பட்டான்.
அவன் அப்படியே கண்ணனைப் போலவே எல்லா விஷயங்களிலும் ஒத்து விளங்கினான்.
சம்பரன் என்ற அசுரன் தனக்கு ப்ரத்யும்னனால் மரணம் ஏற்படும் என்பதை எப்படியோ அறிந்துகொண்டான். ஒரு மாய உருவெடுத்து ருக்மிணியின் அந்தப்புரத்தில் நுழைந்தான். பத்தே நாள்களான சிசுவை எவரும் அறியாமல் எடுத்துச் சென்று கடலில் எறிந்துவிட்டான்.
பிறந்து பத்தே நாள்களான முதல் குழந்தையை அந்தப்புரத்தில் காணவில்லை. இத்தனை கட்டுக்காவல்களை மீறி எங்கே போயிருக்கும்? அரண்மனையே அல்லோலகல்லோலப்பட்டது.
அனைவரும் குழந்தையைத் தேடத் துவங்கினர்.
ருக்மிணியின் அழுகையையும் பலராமனின் கோபத்தையும் கண்ட கண்ணன், இருவரையும் தனியே அழைத்து,
குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. தானே திரும்பிவரும். பதறவேண்டாம். என்று எடுத்துச் சொன்னான்.
பலராமன் கண்ணனை நன்கறிவான் ஆகையால் புரிந்துகொண்டு கோபத்தை விட்டான். குழந்தையைத் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.
ருக்மிணியும் கண்ணனது ஸ்வரூபத்தை நன்குணர்ந்தவள். பெற்ற உள்ளம் ஆறாவிடினும், ஞானத்தினால் மனத்தை அமைதிப் படுத்திக்கொண்டாள்.
பகவானே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால் வரும் துன்பங்களை மாயம் செய்து விலக்கிக்கொள்ளவில்லை. அவனால் இயலாதா என்ன? ஆனால், ஞானத்தினாலும், பக்குவத்தினாலும் தனக்கு வரும் ப்ரச்சினைகளைப் பொறுமையாக எதிர்கொள்கிறான்.
பக்தர்களுக்குத் துன்பமென்றால் மட்டும் அக்கணமே துயர் துடைக்க ஓடவும் செய்வான்.
கடலில் எறியப்பட்ட பச்சிளங்குழந்தையை ஒரு பெரிய மீன் விழுங்கியது.
மீனவர்கள் வலை வீசும்போது அம்மீன் வலையில் மாட்டிக்கொண்டது.
பெரிய மீனாக இருக்கவே, அதை சம்பரனுக்கு காணிக்கையாக்கினால் நிறைய பணம் கிடைக்குமே என்று எண்ணி அவனிடம் சேர்ப்பித்துவிட்டனர்.
சம்பரனின் சமையல்காரர்கள் சமைப்பதற்காக அம்மீனை வெட்டினர்.
மீனின் வயிற்றினுள் ஒரு சின்னஞ்சிறுகுழந்தை அவர்களைப் பார்த்துச் சிரித்தது.
அதன் அழகில் அவர்கள் மயங்கி நின்ற நேரம், சமையல் முடிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக மாயாவதி என்பவள் அங்கு வந்தாள். ரதியின் அவதாரமான அவள் மன்மதனை எதிர்பார்த்து சம்பரனின் அரண்மனையில் பணியாளாக இருந்தாள்.
சமையல்காரர்கள் அவளிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்துவிட்டு மீனைச் சமைக்கத் துவங்கினர்..
சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த மன்மதனை அவளால் அடையாளம் காண முடியவில்லை. அவள் அக்குழந்தையை சம்பரனிடமே கொண்டு செல்லப் புகுந்தாள்.
அப்போது ஆபத்பாந்தவரும், ஆதிகுருவுமான நாரதர் அவள் முன் தோன்றி குழந்தை பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார்.
அவளுடைய மாயை விலகி, அக்கணமே தான் ரதிதேவி என்பதை உணர்ந்துகொண்டாள்.
குழந்தையை உடனே எவரும் அறியாமல் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.
ரசவாதம் போன்றவற்றைச் செய்வதில் வல்லவள் அவள். மிகக்குறைந்த காலத்தில் அவளது அன்பினாலும், மாயவித்தைகளாலும் இளைஞனாக மாறிவிட்டான் ப்ரத்யும்னன். ஏற்கனவே அழகே உருவான அவனுக்கு இப்போது தந்தையான கண்ணனின் அழகும் சேர்ந்துகொண்டது. அவனைப் பார்க்கும் அத்தனை பெண்களும் மோகத்தில் விழுந்தனர்.
இருப்பினும் மாயாவதியை அவன் ரதியென்று உணரவில்லை. ஒருநாள் அவளது செயல்கள் பற்றி அவன் வினவ, மாயாவதி அவனுக்கு ஸ்வரூபத்தை விளக்கி, நடந்தவை அனைத்தையும் கூறினாள்.
மேலும் சம்பரனைக்கொன்று விரைவில் அன்னை தந்தையைக் காண துவாரகை செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தாள்.
தாயான ருக்மிணி தன்னைப் பிரிந்து வாடுவதைக் கேட்டதும், ப்ரத்யும்னனுக்கு சம்பரன் மீது மஹாகோபம் வந்தது.
வெறும் கோபத்தினால் சம்பரனை வெல்ல இயலாது. அவன் மாய அசுரன் எனவே, மாயக் கலைகளைக் கற்றுச் செல்லவேண்டும் என்று சொல்லி, தனக்குத் தெரிந்த அத்தனை மாயக் கலைகளையும் ஒரே நாளில் ப்ரத்யும்னனுக்கு கற்றுக்கொடுத்தாள் மாயாவதி. அதோடு மற்ற எல்லா மாயவித்யை களையும் தவிடுபொடியாக்க வல்ல மஹாமாயவித்யையையும் உபதேசம் செய்தாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment