ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறாலானார்.
மன்னனே! இதன் நடுவில் ஸ்த்ராஜித் என்பவன் தான் இழைத்த தவறுக்கு ப்ராயசித்தம் வேண்டி தன் மகள் சத்யபாமையைக் கண்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவர்களுக்குத் திருமணச்சீராக ஸ்மந்தகமணியையும் கொடுத்தான் என்றார்.
பரீக்ஷித் இடை மறித்தான்.
முனிச்ரேஷ்டரே! ஸத்ராஜித் என்ன தவறு செய்தான்?
ஸ்யமந்தக மணி அவனிடம் எப்படி வந்தது? அதன் பெருமைகள் என்ன? கண்ணனின் திருமணம் எவ்வாறு நடந்தது?
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அபிமன்யு மைந்தன்.
ஸத்ராஜித் சிறந்த ஸூரிய உபாசகன் ஆவான். சூரியனை சக்யபாவத்தில் பக்தி செய்தான். அதில் மகிழ்ந்த சூரியன் அவனுக்கு ஸ்யமந்தகமணியைப் பரிசளித்தான்.
ஸ்த்ராஜித் அதைத் தன் பூஜையறையில் நிறுவினான்.
ஸ்யமந்தகமணியை வழிபடும் இடத்தில் பஞ்சம், மஹாமாரி முதலிய கொடுநோய்கள், மனநோய், பாம்புகள், மாயாவிகளின் தொல்லைகள், மற்றும் அமங்கலங்கள் ஏற்படாது. இவற்றைத்தவிர தினமும் எட்டு பாரம் தங்கத்தைக் கொடுக்கும். (746 கிலோ)
சத்ராஜித் தான் எங்கு சென்றாலும் மணியைக் கழுத்தில் அணிந்துகொண்டு செல்வான்.
ஒருமுறை ஒளிபொருந்திய அம்மணியை அணிந்துகொண்டு ஸத்ராஜித் துவாரகைக்கு வந்தான். அவன் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை. மணியின் ஒளியால் அனைவர்க்கும் கண் கூசிற்று. சூரியனே தெருவில் வருவதாக எண்ணினர்.
ஓடிச்சென்று மண்டபத்தில் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த கண்ணனிடம் தெரிவித்தனர்.
கண்ணா! கோவிந்தா! சூரியன் உம்மைக் காண வருகிறார் என்றனர்.
அதைக் கேட்டு கண்ணன் சிரித்தான்.
வருவது சூரியபகவான் அல்ல. ஸத்ராஜித் ஸ்யமந்தகமணியைக் கழுத்தில் அணிந்து வருகிறான். என்றான்.
கண்ணன் ஸத்ராஜித்திடம்
நண்பரே! இந்த ஸ்யமந்தகமணி மிகவும் மனத்தூய்மையுடன் பராமரிக்கப்படவேண்டும். மனத்தில் மாசுகள் இருப்பின் விபரீத விளைவுகளைத் தந்துவிடும். நமது அரசர் உக்ரசேனர் அப்பழுக்கற்றவர். அவரிடம் இந்த மணியைக் கொடுத்து விடுங்கள். சிறந்த பொருள்களை அரசரிடம் கொடுப்பதே நல்லது என்றான்.
சத்ராஜித்துக்கு கண்ணன் சொன்னதன் உள்ளர்த்தம் புரியவில்லை. கண்ணன் பொறாமையால் கேட்கிறான் என்றெண்ணினான். எனவே மணியைத் தர இயலாதென்று மறுத்துவிட்டான்.
சில நாள்கள் கழித்து ஸத்ராஜித்தின் தம்பி ப்ரசேனன் என்பவன் மணியைக் கழுத்தில் அணிந்துகொண்டு குதிரை மீதேறி காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.
ஒளிமிக்க அம்மணியால் கவரப்பட்ட சிங்கம் ஒன்று ப்ரசேனனையும் அவனது குதிரையையும் கொன்று மணியைப் பறித்துச் சென்றது.
ஒரு மலைமீது அது ஏறும் சமயம் ஜாம்பவான் அதைப் பார்த்தார்.
ஸ்யமந்தகமணியின் ப்ரகாசத்தால் கவரப்பட்டு ஜாம்பவான் சிங்கத்தைக் கொன்று மணியை எடுத்துச் சென்று விட்டார்.
குகைக்குச் சென்று தன் குழந்தையின் தொட்டிலில் விளையாடுவதற்காக மணியக் கட்டிவைத்தார்.
ஸ்யமந்தகமணியைக் காணவில்லை என்றதும் சத்ராஜித்துக்கு கண்ணன் மீது சந்தேகம் வந்தது. மணியை கண்ணன் கேட்டு தான் கொடுக்காததால் தன் தம்பியைக் கொன்று மணியைத் திருடிச் சென்றான் என்று கூறினான்.
அச்செய்தி செவிவழியே மக்களுக்குப் பரவிற்று. ஆங்காங்கே மக்கள் கண்ணன் மணியைத் திருடினான் என்று பேசத் துவங்கினர்.
வெண்ணெய் போன்ற தூய்மையான உள்ளங்களைத் திருடும் கண்ணன் மேல் அபாண்டமாகப் பழி. வ்ரஜவாசிகள் கண்ணெதிரேயே வெண்ணெய் திருடினாலும் அவனைக் கொண்டாடுபவர்கள். நகரத்து மக்கள் அவ்வாறில்லை. கண்ணை மூடச் செய்து யோக சக்தியால் கடலின் நடுவே அனைவரையும் கொண்டு சேர்த்தாலும்கூட ஒரு சமயம் என்று வரும்போது சந்தேகப்படுகிறார்கள்.
நவநீதசோரன் என்பது கண்ணன் விரும்பி ஏற்ற பெயர். பொருளைத் திருடிய பழியை ஏற்க அவன் தயாராக இல்லை. பகவானே ஆனாலும் ஆயிரமாயிரம் மாயங்களைக் கண்முன்னே செய்து காப்பாற்றினாலும் மனித உருக் கொண்டுவிட்டதால் வீண்பழிக்குத் தப்பவில்லை. எனில் நாமெல்லாம் எந்த மூலை?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment