அக்ரூரரும் விதுரரும் குந்திக்கு ஆறுதலாகப் பேசினர். தர்மராஜன், வாயு, இந்திரன், அஸ்வினி குமாரர்கள் ஆகியோரின் அம்சங்களாகப் பிறந்திருக்கும் பாண்டவர்கள் உலகில் தர்மத்தை நிலை நாட்டுவர். அவர்களுக்குக் குறைவே இல்லை. இப்போது படும் துயரங்களைப் பொருட்படுத்தாதே. என்று சொன்னார்கள்.
மதுராவிற்குக் கிளம்ப எண்ணிய அக்ரூரர் திருதராஷ்ட்ரனிடம் விடை பெற்றுக்கொள்ளச் சென்றார்.
குரு வம்சத்தின் புகழை வளர்க்கும் அரசே! பாண்டு இறந்ததும் அவரது ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். (அவரது பிள்ளைகள் இருக்கும்போது அறநெறியை விடுத்து தாங்கள் அரியணையில் அமர்ந்திருக்கீர்கள் என்பதாம்)
அறவழிச் சென்று மக்களை அன்பால் ஈர்த்து பேதபாவமின்றி சமநிலையாய் நடந்துகொள்ளுங்கள். அவ்வாறு நடந்தால் இம்மையில் புகழும், மறுமையில் நற்கதியும் கிடைக்கும்.
மறவழிச்சென்றால் நரகம் செல்ல நேரிடும். பாண்டுவின் புதல்வர்களை உங்கள் சொந்த மகன்களைப் போல் நடத்துங்கள்.
இவ்வுலக வாழ்வு நிலையற்றது. இப்போது நம்மைச் சுற்றி இருப்பவரை ஒருநாள் பிரிய நேரிடலாம். மனைவி மக்கள், உறவு எதுவும் உடன் வருபவை அல்ல. நாம் காக்கும் அறமே எப்போதும் உடன் வரும்.
தனியொருவராய்ப் பிறந்து தனியொருவராய் இறக்கும் இவ்வாழ்வில் வினைப்பயனையும் தனியாகத்தான் அனுபவிக்க வேண்டும்.
கடைமைகளைக் கைவிடுபவன், யாருக்காக அவற்றை விட்டானோ, அவர்களைப் பிரிய நேரிடும். மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்றி பாவமூட்டையை மட்டும் சுமந்து அந்ததமஸ் என்னும் நரகம் செல்ல வேண்டியிருக்கும்.
இவ்வுலகை மாயை என்றறிந்து விருப்பங்களுக்கு இடம் கொடாமல், அறவழி நில்லுங்கள். அதனால் மனநிம்மதி கிடைக்கும்.
என்று சொன்ன அக்ரூரரைப் பார்த்து த்ருதராஷ்ட்ரன் கோபம் கொள்ளவில்லை. மாறாக தன் மீதே பச்சாதாபம் கொண்டான்.
அக்ரூரரே! நீங்கள் உண்மையில் எனக்கு நலம் தருபவற்றையே கூறினீர்கள். ஆனால் என் மனம் புத்ர பாசத்தால் கலங்கியிருக்கிறது. உமது மதுரமான சொற்கள் ஸ்படிகத்தில் எதிரொளிக்கும் மின்னல்போல் கணநேரம் கூட நிற்கவில்லை.
பூமியின் பாரம் குறைக்க அவதாரம் செய்திருக்கிறார் பகவான் கண்ணன். அவரது கட்டளையை மீறி எதுவும் நிகழாது.
அவரே இவ்வுலகைப் படைத்து அதனுள் நுழைந்து வினைப்பயனையும் பகிர்ந்தளிக்கிறார். அவரது திருவிளையாடலைப் புரிந்துகொள்ள இயலாது. அவருக்கு என் நமஸ்காரங்கள்.
என்றான்.
எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தும் புத்தி தெளிவுறாமல் வெறும் ஏட்டுக்கல்வியாய் நின்றால் அது இப்படித்தான் இருக்கும். அஞ்ஞானி தான் கற்ற வேதாந்தத்தை தனக்கு சாதகமாய்த் திரித்துப் பேசுவான்.
இப்போதும் திருதராஷ்ட்ரன், இவையனைத்தும் பாண்டவர்களின் வினைப்பயன். அதைப் பகிர்ந்தளித்தவன் கண்ணனே என்று பொருள்படும்படி பேசினான்.
த்ருதராஷ்ட்ரனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட அக்ரூரர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி மதுரா வந்தடைந்தார்.
சென்ற நாள் முதல் திரும்பிய கணம் வரை நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் கண்ணனிடமும் பலராமனிடமும் ஒப்பித்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment