Wednesday, May 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 464

மறுநாள் அக்ரூரர் கிளம்பி அஸ்தினாபுரம்‌ சென்றார்.

திருதராஷ்ட்ரன், பீஷ்மர், விதுரர், குந்தி அனைவரையும் கண்டார். துரோணர், க்ருபர், கர்ணன், துரியோதனன், அஸ்வத்தாமா, பாண்டவர்கள் மற்றும் உறவினர் அனைவரையும் சந்தித்தார். 

அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

திருதராஷ்ட்ரனின் மனநிலையையும் அவர் பாண்டவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் பற்றி விவரமாக அறிய விரும்பிய அக்ரூரர் அங்கேயே சில‌ மாதங்கள் தங்கினார்.

பாண்டவர்களின் வலிமையையும் ஆயுதங்களைச் செலுத்தும் திறத்தையும், வீரம், அடக்கம், நாட்டு மக்களிடம் அன்பு முதலியவற்றையும் தாள இயலவில்லை. அவர்களுக்கு விஷம் கொடுத்தார்கள். சமயம் ‌கிடைக்கும் போதெல்லாம் அவமானப் படுத்துகிறார்கள் என்பதை குந்தியும், விதுரரும் அக்ரூரரிடம் கூறினர். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விவரமாகக் கேட்டு அறிந்துகொண்டார் அக்ரூரர். அவர்கள் சொன்ன விவரங்களை மற்ற சிலரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.

அக்ரூரரைக் கண்டதும் குந்திக்கு தன் பிறந்த வீடு நினைவுக்கு வந்தது.

அண்ணா! என் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்? என் சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரைப் பார்த்தீர்களா? அவர்களுக்கு என் நினைவு வருமா?

என் அண்ணனுக்கு மகனாகப் பிறந்திருக்கும் பகவான் க்ருஷ்ணன் எப்படி இருக்கிறார்? அவரது லீலைகள் பற்றி ஏராளமான செவி வழிச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு தன் அத்தையான என் நினைவும் என் குழந்தைகளின் நினைவும் வருகிறதா?

ஓநாய்களுக்கிடையே சிக்கிய பெண்மானைப்போல் கயவர்களுக்கிடையே வந்து என் மக்களுடன் துன்புறுகிறேன். கணவரும் இல்லை. என் மகன்கள் தந்தையற்றவர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இன்சொல் கூற கண்ணன் வருவாரா?

பேசிக்கொண்டே போன குந்தி தன்னை மறந்து கண்ணனை‌ நோக்கி பிரார்த்தனை செய்யத் துவங்கினாள்.

கோவிந்தா! நீர் யோகீஸ்வரனாயிற்றே! உலகைக் காத்து வாழவைப்பவனாயிற்றே! நானும் என் குழந்தைகளும் உன்னை அடைக்கலம் புகுந்தோம். எங்களைக் காத்தருள்வாய் ஐயனே! நீர் ஒருவனே முக்தி தர வல்ல ஸர்வேஸ்வரன். பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவர்க்கு உமது பாதங்களே‌ புகலிடம்.

மாயையை நீக்கும் பரம்பொருளே! தூயவரே! உனக்கு கோடி கோடி நமஸ்காரம். உன்னையே சரணடைந்தேன்!

என்று கதறினாள்.

தடேலென்று தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். 

தாயானவள் தன் குழந்தைகளுக்கும்‌ சேர்த்து சரணாகதி செய்துவிடுகிறாள்.

இவ்வாறு நம் அன்னையும்‌ முன்னோரும் என்றோ‌ ஒரு நாள் சரணாகதி செய்திருப்பார்கள்.
என்றோ‌ ஒரு நாள் ஒரு மஹாத்மாவின் ஸந்நிதியிலோ, கோவிலிலோ கொண்டுபோய் கைக்குழந்தையைப் போட்டு என் குழந்தையைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பார்கள். 

 அவற்றின் விளைவாகவே, நமக்கு ஒரு ஸத்குருநாதர் கிடைத்திருக்கிறார். அவர் மூலமாக ஸ்ரீமத் பாகவதம் என்ற தேனினும்‌ இனிய இந்தக் கதாம்ருதம் நமக்குக்‌ கிடைத்திருக்கிறது.

ஸ்ரீ சுகர் பரிக்ஷித்தைப்‌ பார்த்துக் கூறலானர்.

அரசே! உன் தந்தையின் பாட்டியான குந்தி அன்றே உமது குலம்‌ முழுவதற்குமான சரணாகதியைச் செய்துவிட்டாள் என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment