கம்ஸனின் மனைவிகள் அஸ்தி, பிராப்தி என்ற இருவர். அவர்கள் ஜராஸந்தனின் மகள்கள். கம்சன் இறந்ததும் கணவனைப் பிரிந்த துயரம் தாளாமல் பிறந்தகம் சென்றனர்.
தந்தையிடம் கண்ணன் கம்சனைக் கொன்று விட்டதைச் சொல்லி அழுதனர்.
அதைக் கேட்ட ஜராசந்தன் மிகுந்த மனவருத்தமடைந்தான். கண்ணனின் மீது கடுங்கோபம் கொண்டான். இந்த பூமியில் யாதவர்களே இல்லாமல் செய்கிறேன் என்று சபதம் பூண்டான்.
இருபத்து மூன்று அக்ஷௌஹிணி படைகளைத் திரட்டிக்கொண்டு மதுரா நகரை நாற்புறமும் முற்றுகையிட்டான்.
கடலைப்போன்ற சேனை மதுராவின் கோட்டையை முற்றுகையிட்டதால் மதுரா மக்கள் பயந்துபோயினர். மக்களின் கலக்கத்தைக் கண்ட கண்ணன் தீர ஆலோசித்தான்.
பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டும். ஆனால் அப்பாவி மக்களுக்கு எதுவும் நேரக்கூடாது.
தனக்கு அடங்கிய துஷ்ட சுபாவமுள்ள சிற்றரசர்கள் அனைவரையும் திரட்டி வந்துள்ளான் ஜராசந்தன். படையை மட்டும் அழித்து, அவனை உயிரோடு விடுத்தால் அவன் மீண்டும் துஷ்டர்களைத் திரட்டிக் கொண்டு வருவான்.
இருந்த இடத்தில் இருந்தபடியே அத்தனை துஷ்டர்களையும் அழிக்க இதுவே சரியான வழி.
பூமியின் பாரத்தைக் குறைப்பதே அவதார நோக்கம்.
என்றெண்ணினான் கண்ணன். அப்போது வானிலிருந்து ஒளிமிக்க இரண்டு ரதங்கள் தேரோட்டிகளுடனும், அனைத்துப் போர்க்கருவிகளுடனும் வந்திறங்கின.
அவற்றில் சுதர்சனமும், மற்ற திவ்ய ஆயுதங்களும் இருந்தன.
உடனே பலராமனை அழைத்து,
அண்ணா! இந்த யாதவகுலம் முழுதும் உங்களையே நம்பியுள்ளது. இதோ உங்களுக்கான ரதமும், ஆயுதங்களும் வந்துவிட்டன.
புறப்படுங்கள். புவியின் பாரத்தைக் குறைக்கலாம். என்றான்.
அதைக் கண்டு சிரித்த பலராமன் கண்ணனின் திருவுளத்தைப் புரிந்துகொண்டு தேரில் ஏறினான்.
கண்ணனும் பலராமனும் கவசங்களை அணிந்துகொண்டனர். ஆளுக்கொரு தேரில் ஏறிக்கொண்டு கோட்டை வாயிலை நோக்கிப் புறப்பட்டனர்.
நகரத்தின் வாயிலினின்று வெளிப்பட்டதும் கோட்டை வாயில் மீண்டும் அடைக்கப்பட்டது.
கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து முழங்கினான்.
இடிபோல் நெஞ்சில் இறங்கும் அவ்வொலி கேட்டு ஜராசந்தனின் படையிலிருந்த ஏராளமான வீரர்கள் மயங்கி விழுந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment