விடிய விடிய கம்சன் உறங்கவே இல்லை. மதுரா வீதிகளில் நடந்த அத்தனை விஷயங்களும் அவனுக்கு ஒற்றர் மூலம் தெரியவந்தன. யாரைப் பார்த்தாலும் சந்தேகம். திரைச்சீலை அசைந்தாலும் வாளை உருவிக்கொண்டு பாய்ந்தான்.
நீர் அருந்தக் குவளையை எடுத்தால் அதில் கண்ணன் முகம் தெரிந்தது. உணவுகள் அனைத்தும் கண்ணனே. தீபத்தைப் பார்த்தால் கண்ணன். நிலவைக் கண்டால் அதில் கண்ணன் முகம் தெரிந்தால் பக்தர்கள் மகிழ்வார்கள். கம்சனுக்கோ பயம் அதிகமாயிற்று. படுக்கையில் படுத்தால், கண்ணன் அவன் மீதேறி அமர்வது போலவும், நாற்காலியில் அமரப்போனால் அதில் ஏற்கனவே கண்ணன் சிரிப்பது போலவும் தெரிந்தான்.
ஒருக்கால் தன்னை மறந்து கண்ணயர்ந்தாலும் கனவிலும் கண்ணன் வந்தால்
என்னதான் செய்வான் பாவம்! ஆனால், இது பாக்யமல்லவா!
வான முகட்டைச் சற்று மனம் வந்து நோக்கினும் நின் மோன முகம் வந்து காணுதே என்கிறார் ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையர்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று பாடினார் முண்டாசுக் கவி.
உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான் என்ற ஆழ்வாரின் வாக்கின்படி அனைத்தும் கண்ணனாகத் தெரியவேண்டும் அவ்வளவுதான். அந்நிலை கண்ணன் மீது கொண்ட அளவற்ற வாத்ஸல்யத்தாலோ, பக்தியாலொ, காதலினாலோ, நட்பினாலோ, எஜமானன் என்பதாலோ, பகையாலோ, பயத்தாலோ, கோபத்தாலோ எவ்வுணர்வினால் வந்தாலும் சரி. அந்த ஜீவனை பகவான் முழுவதுமாக
ஆட்கொண்டு விடுகிறான்.
உட்காரவும், படுக்கவும் கூட இயலாமல் நின்றுகொண்டே சற்று கண்ணயர்ந்தான் கம்சன். அப்போது ஏராளமான துர்சகுனங்களைக் கனவில் கண்டான்.
கண்ணாடியில் தன் பிம்பம் தலையின்றி இருப்பதுபோலவும், இரண்டிரண்டு சூரிய சந்திரர்களையும், தன் நிழலில் ஓட்டை இருப்பது போலவும், இதயத்துடிப்பு தனக்குக் கேட்காததுபோலவும் சேற்றில் நடந்தால் தன் காலடி பதியாததுபோலவும் தீய கனவுகளைக் கண்டான்.
கனவென்றறியாமல் பிதற்றிக்கொண்டிருந்த கம்சனைக் காலைச் சூரியனில் சிரிக்கும் கண்ணன் எழுப்பிவிட்டான்.
அலறிப் புடைத்துக்கொண்டு விழித்த கம்சன் ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்தால் உடுத்தப் புது உடை இல்லை. கேட்டால் அரண்மனை உடைகள் அனைத்தையும் கண்ணன் எடுத்துக் கொண்டான் என்று பதில் வந்தது. ஏற்கனவே அணிந்த உடையை அணிந்துகொண்டு வந்தால், சந்தனம் மற்றும் வாசனைப் பூச்சுக்கள் வரவில்லை. கண்ணனுக்கு சந்தனம் பூசி சேவை செய்தபின் பாழும் இக்கம்சனுக்கு சேவை செய்வாளா குப்ஜை. அலங்காரத்திற்கான மாலைகளும் வரவில்லை. நேற்று தொடுத்த மாலைகள் அனைத்தையும் அப்போதே கண்ணன் சாற்றிக்கொண்டான்.
வெறுத்துப்போனான் கம்சன். கோபத்தில் என்னமோ தாறுமாறாக ஒரு அலங்காரம் செய்துகொண்டு அரசவைக்கு வந்தான்.
மல்யுத்தம் துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே செய்யச் சொல்லி சாணூரன் முஷ்டிகன் ஆகியோர்க்கு உத்தரவிட்டான்.
சிறைச்சாலையில் வசுதேவரின் காவலை அதிகப்படுத்தச் சொன்னான்.
பட்டத்து யானையான குவலயாபீடத்தை மதம் ஏற்றிவிட்டு மல்லர் அரங்கின் வாயிலில் நிற்கப் பணித்தான்.
மல்லர் அரங்கில் தன் இருக்கையை இரண்டு மாடி உயரத்திலுள்ள உப்பரிகையில் போடச்சொன்னான்.
கண்ணனைக் கண்காணிக்க எல்லா இடத்திலும் வீரர்களைச் சித்தமாக நிறுத்தவும் அவனது ஒவ்வொரு அசைவையும் உடனுக்குடன் தனக்குத் தெரியப்படுத்தவும் கட்டளையிட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment