மல்லர் அரங்கத்தின் பல்வேறு இருக்கைகளில் மக்கள் அமர்ந்தனர். கம்சன் மந்திரிகள் புடைசூழ உப்பரிகையில் தன் ஆசனத்தில் அமர்ந்தான்.
நிறைய மல்லர்கள் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டு மார்களையும் தொடைகளையும் தட்டிக்கொண்டு தங்கள் குருக்களுடன் அரங்கினுள் நுழைந்தனர்.
பேரிகையின் ஒலி விண்ணை முட்டியது.
சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் ஆகிய ஐவரும் தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.
கம்சன் நந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு சிற்றரசரையும் அழைக்க அவர்கள் கம்சனுக்கான பரிசுப்பொருள்களைக் கொடுத்துவிட்டு தத்தம் இடங்களில் அமர்ந்தனர்.
காலைக் கதிரவன் கண்ணனையும் பலராமனையும் மெல்லத் தடவி எழுப்பினான்.
இருவரும் குளித்து தத்தம் கடன்களை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் நகர்வலம் கிளம்பினர்.
பேரிகையின் ஒலி வந்த திசையை நோக்கி கண்ணன் கைகாட்ட அனைவரும் அதை நோக்கிச் சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கத்தின் வாயிலில் சிறு மலையைப் போல் நின்றிருந்த குவலயாபீடத்தைக் கண்டான் கண்ணன். யானைப்பாகனால் தூண்டப்பட்ட அந்தக் களிறு அரங்க வாயிலை அடைத்துக்கொண்டு நின்றது. தோழர்களைப் பின்னே செல்லுமாறு சைகை காட்டினான்.
பின்னர் மாவுத்தனைப் பார்த்துக் கண்ணன் சொன்னான்.
ஓ! மாவுத்தனே! யானையை நகர்த்து! நாங்கள் அரங்கினுள் செல்லவேண்டும்.
மாவுத்தன் யானையைக் குத்த அது இடிபோல் பிளிறிக்கொண்டு அசையாமல் நின்றது.
வேண்டுமென்றே யானையைத் தூண்டி வழி மறிப்பதை உணர்ந்த கண்ணன்,
இப்போது வழிவிடாவிட்டால் நீயும் உன் யானையும் யமலோகம் செல்ல நேரிடும் என்றான்.
கடுங்கோபம் கொண்ட மாவுத்தன் யானையை மேலும் தூண்ட, அது கண்ணனை நோக்கி குன்று ஓடிவருவதைப்போல் பூமி அதிர ஓடிவந்தது.
குவலயாபீடம் கண்ணனைத் தும்பிக்கையால் பிடித்தது. அதிலிருந்து நழுவிய கண்ணன் அதன் கால்களுக்கிடையில் சென்றான்.
கண்ணனைக் காணாத யானை தன் மோப்ப சக்தியால் உணர்ந்து மீண்டும் பிடித்தது.
மறுபடி நழுவிய கண்ணன் ஒரே தாவலில் யானையின் பின்புறம் சென்று அதன் வாலைப் பிடித்தான்.
மலை தூக்கியவனுக்கு யானை ஒரு பாரமா?
யானையின் வாலைப் பிடித்து இருபத்தைந்து வில் தூரம் கரகரவென்று பின்னால் இழுத்தான்.
செய்வதறியாது நிலைகுலைந்த யானையை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் கன்றைச் சுற்றுவதுபோல் விளையாட்டாகச் சுற்றினான்.
தலை சுற்றியது யானைக்கு.
பின்னர் யானையின் எதிரில் ஓடிவந்த கண்ணன் அதன் தும்பிக்கையைப் பிடித்து மேலேறி மஸ்தகத்தின்மீது ஓங்கி அடித்தான்.
கீழே குதித்து தன்னைத் துரத்தும் யானைக்கு முன்னே ஓடுவதுபோல் ஓடி விலகிக்கொண்டான்.
வேகமாக ஓடிவந்த யானை அப்படியே நிலை தடுமாறி விழுந்தது.
கண்ணனும் கீழே விழுந்ததாக எண்ணி தந்தங்களால் கோபமாகத் தரையைக் குத்தியது.
மாவுத்தன் மறுபடி யானையை தூண்டினான்.
கண்ணனைத் தொடர்ந்து ஓடியது யானை. கண்ணன் திரும்பி யானையை நோக்கி ஓடிவந்து அதன் துதிக்கையைப் பிடித்துக் கீழே தள்ளினான்.
பின்னர் அதன் மேல் காலை வைத்து அழுத்தி மிதித்தான். அதன் தந்தங்களைப் பிடுங்கினான். அவற்றினாலேயே தன்னைத் தாக்க வந்த யானைப் பாகர்களையும் கொன்றான்.
குவலயாபீடத்தின் தந்தங்களின் அடியில் முகிழ்ந்திருந்த கஜமௌக்திகம் என்னும் முத்தை எடுத்து தன் நண்பனான ஸ்ரீ தாமாவிடம் கொடுத்தான். (ஸ்ரீதாமா ராதையின் சகோதரன்).
பின்னர் தன் தோள்களின் மீது யானைத் தந்தங்களை ஏந்தி, உடல் முழுவதும் யானையின் மதநீரும், குருதியும் தெறித்த கோலத்துடன் அரங்கினுள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து பலராமனும் கண்ணனின் தோழர்களும் அரங்கிற்குள் சென்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment