வேடிக்கை பார்த்துக் கொண்டும், மதுரா நகர மக்கள் சமர்ப்பித்த மரியாதைகளை ஏற்றுக்கொண்டும், அவர்களுக்கு அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டும், ஒய்யாரமாக நடந்த கண்ணன் ஒரு வழியாக தனுர் யாகம் நடக்கும் இடத்தை அடைந்தான்.
நன்றாக அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கம் அது. யாககுண்டங்களைத் தாண்டி பட்டு விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய மேடை இருந்தது. அதன் மேல் ஒரு பெரிய வில் வைக்கப்பட்டிருந்தது. கம்சன் பரம்பரையாக வழிபட்டுவரும் தனுசு அது.
அவ்வில்லிற்கு மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்ற அடையாளம் இருந்தது. சந்தன குங்குமம் இடப்பட்டு, பூக்கள் சிதறியிருந்தன.
அவ்வரங்கைச் சுற்றிலும் நிறைய காவலாளிகள் இருந்தனர்.
அரங்கிற்குள் தன் பட்டாளத்துடன் பிரவேசித்தான் கண்ணன். வில்லைப் பார்வையிடவும் வணங்கவும் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இவர்களையும் ஏதோ பார்வையாளர்கள் என்றெண்ணி வாளாவிருந்தனர் வீரர்கள்.
ஆனால் அனைவரின் பார்வையும் சுந்தரக் கண்ணன் மீதே இருந்தது.
மற்றவர்கள் சற்று தயங்கி நிற்கும் சமயத்தில் கண்ணன் விடுவிடுவென்று வில்லின் அருகில் சென்றான்.
தள்ளி நின்று வழிபடு. வில்லைத் தொடக்கூடாது என்று காவலர்கள் தடுத்தனர்.
அவர்களை ஒரே தள்ளாகத் தள்ளினான் கண்ணன். மற்ற காவலர்கள் சுதாரித்துக்கொண்டு ஓடி வருவதற்குள் அநாயாசமாக அவ்வில்லை இடக்கையால் எடுத்தான்.
மாபெரும் வில் அது. கம்சனின் அரண்மனை யிலிருந்து அதை எடுத்துவரவே ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டனர். அப்படியிருக்க ஒரு சிறுவன் இடக்கையால் வில்லைத் தூக்குவது கண்டு பிரமித்துப்போய் சிலையாய் நின்றனர் அக்காவலர்கள்.
கண்ணன் வில்லை நாணேற்ற முயலும் சமயத்தில் டணார் என்று இடி போன்ற சத்தத்துடன் வில் முறிந்து விழுந்தது.
வில்லின் ஒலி நாற்றிசைகளிலும் கேட்டது. கம்சனுக்கும் அச்சத்தம் எட்டியது.
குளிர்ஜுரம் வந்ததுபோல் பயத்தினால் நடுங்க ஆரம்பித்தான் கம்சன்.
அவ்வளவுதான் அத்தனை காவலர்களும் கண்ணனையும் பலராமனையும் சூழந்துகொண்டனர்.
அவனைப் பிடியுங்கள்! கட்டுங்கள்! என்று கத்தினார்கள்.
கண்ணனும் பலராமனும் வில்லின் ஒடிந்த துண்டுகளைக் கையிலெடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான காவலர்களையும் அடித்து த்வம்சம் செய்ய அவர்கள் அனைவரும் அங்கேயே மாண்டனர்.
வேள்விச்சாலையிலிருந்து வெளிவந்த கண்ணன் தன் பரிவாரத்துடன் மீண்டும் நகருக்குள் சுற்ற ஆரம்பித்தான்.
அதற்குள் காட்டுத்தீயாய்ச் செய்தி பரவ, மக்கள் அனைவரும் கண்ணனையும் பலராமனையும் கொடூரமான கம்சனிடமிருந்து தங்களைக் காக்க வந்த தேவகுமாரர்கள் இவர்களே என்று கூறினர். வணங்கிப் பூஜைகள் செய்தனர்.
ஆங்காங்கே இருந்த தோட்டங்களுக்குள் சென்று வயிறார பழங்களை உண்டனர். சூரியன் மேற்றிசையில் ஓய்வெடுக்கச் சென்றதும், கண்ணனும் பலராமனும் தாங்கள் வண்டிகளைக் கட்டியிருந்த தோட்டத்திற்கே திரும்பினர்.
அங்கே தங்யிருந்த இடையர்கள் இரவுக்குப் பாலுணவு தயார் செய்திருந்தனர்.
அனைவரும் அதை உண்டனர். பின்னர் சிறுவர்கள்,
தாங்கள் நகரைச் சுற்றிய கதையையும், பார்த்த வியப்புக்குரிய விஷயங்களையும், கண்ணன் வில்லொடித்த அழகையும் பேசிக்கொண்டு புல்வெளியில் உறங்கத் துவங்கினர்.
கண்ணனும் பலராமனும் நந்தனைக் கட்டிக்கொண்டு உறங்கத் துவங்க, நந்தனுக்கு உறக்கம் வருமா? நாளை இந்தச் செல்வங்கள் நமதில்லையே என்ற எண்ணம் நந்தனின் நெஞ்சை அறுத்தது.
உறக்கத்திலும் கண்ணனின் திருக்கரம் நந்தனின் கண்ணீரைத் துடைத்தது.
அங்கே.. கம்சனோ பயத்தினால் எதையும் உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment