ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
அரசன் கூறியதற்கு முதன் முதலாக வாய் திறந்து ஆன்ம தத்துவத்தை விடையாகக் கூறிவிட்டு ஒன்றுமே நடவாததுபோல் மேலே தொடர்ந்து நடக்கலானார் பரதர்.
பாண்டுகுல விளக்கே! ரஹூகணன் தத்துவ விசாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதைத் தெரிந்துகொள்ளத் தகுதி படைத்தவன்.
பரதர் கூறியதனைத்தும் பல யோக நூல்களில் விளக்கப்பட்டதும், மனத்தின் ஐயங்களைப் போக்குவதாகவும் இருப்பதை உணர்ந்தான்.
தான் அரசன் என்ற செருக்கை விட்டு சட்டென பல்லக்கை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கினான். அவரது திருவடிகளில் தலைபடும்படி விழுந்து வணங்கினான்.
ஐயா! தன்னை மறைத்துக்கொண்டு இவ்வாறு வலம் வரும் தாங்கள் உண்மையில் யார்?
பூணூல் அணிந்திருக்கிறீர்கள். அதிஆஸ்ரமியா? அவதூத ஸன்யாசியா? தத்தாத்ரேயரேதானா? தங்கள் ஊர் எது? என்ன காரணமாய் வந்திருக்கிறீர்கள்? அல்லது எங்கள் குலகுருவான கபிலமூர்த்தியா?
எனக்கு தேவேந்திரனின் வஜ்ரப்படை, பரமேஸ்வரனின் சூலம், யமதர்மராஜனின் பாசக்கயிறு, அக்னி, சூரியன், வாயு, குபேரன், ஆகியோரின் அஸ்திரங்கள் எதைக் கண்டும் பயமில்லை. ஆனால், அந்தணகுலத்தை அவமரியாதை செய்வதற்கு பயந்து நடுங்குகிறேன்.
எல்லையற்ற ஞானஒளியை மறைத்துக்கொண்டு அறிவிலிபோல் பற்றற்றுத் திரியும் தாங்கள் யார்? தாங்கள் கூறிய யோகநிலைகளை ஆராய்ந்து பார்த்தாலும்கூட தாங்கள் யாரென்று புலப்படவில்லை.
நான் இப்போது பகவான் ஸ்ரீ ஹரியின் திரு அவதாரமான கபிலமூர்த்தியைத் தரிசனம்செய்து இவ்வுலகில் யாருடைய சரணத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும்? என்ற நிலையான அறிவைப் பெறவே போய்க்கொண்டிருக்கிறேன்.
என் ஆர்வத்தைச் சோதிக்கவேண்டி உண்மையுருவை மறைத்துக்கொண்டு கபிலமூர்த்தியே வந்திருக்கிறீரா?
ஒரு செயல் செய்வதால் செய்பவனுக்குச் சிரமம் உண்டு.
வெகுதூரம் பல்லக்குத் தூக்கிவரும் தங்களுக்கு சிரமமாய் இருக்கும் என்பதை உணர்கிறேன்.
கையில் குடம் இல்லாதபோது இருப்பதாக நினைத்துக்கொண்டு அதில் நீர் பிடித்துவர இயலாது. அதுபோல் இப்ப்ரபஞ்சம் வெறும் தோற்றமே. அதில் விவஹாரங்கள் நடைபெறாது. ஆனால், இப்போது தங்களைச் சந்தித்தது மட்டும் ஸத்யம் என்று தோன்றுகிறது.
ஒரு திமிர் பிடித்த பணியாளனை தண்டிப்பது அரசனின் கடைமை. அவன் தன் பணியைச் செய்வதே பகவானின் சேவை. அதனாலேயே அவன் பாவங்கள் விலகுகின்றன.
ஆனால், செருக்கினால் மதியி்ழந்து தங்களைப் போன்ற பெரியோர்களை அவமதித்து விட்டேன். தங்கள் கருணை பொங்கும் பார்வையை என்மீது செலுத்தி என்னை இம்மகாபாவத்திலிருந்து விடுவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியோர்கள் நோக்கினாலேயே அனைத்து பாவங்களும் தீயினில் தூசாகும்.
தங்களுக்கு உடல் பற்றில்லை. உலகத்தார் அனைவர்க்கும் உற்ற நண்பர். அனைவரையும் சமமாகக் காண்பவர். மானமோ, அவமானமோ, அதனால் ஏற்படும் மாறுதல்களோ தங்களுக்கில்லை.
தங்களை அவமதிப்பவர் எவ்வளவு உயர்ந்தவராயினும் அழிந்துபோவர் என்பது நிச்சயம்.
என்னைக் காத்தாருளுங்கள். தாங்கள் யார்?
என்று கண்களில் கண்ணீர் மல்க அவரது திருவடிகளைப் பிடித்துக்கொண்டு கூறினான் ரஹூகணன்.
அந்தணர் (ஜடபரதர்) கூறினார்.
சிறந்த அறிவாளிபோல் தர்க்கம், விளக்கம் எல்லாம் கூறிப் பேசுகிறீர்கள். உண்மையை அறிபவர்கள் பணியாளன், பணிகொள்பவன், ஆண்டான் அடிமை போன்ற வேற்றுமையை விடுத்து ப்ரும்மத்தைப் பார்ப்பார்கள்.
வேதத்தின் முற்பகுதியான கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளவைகள் அனைத்தும் உலக சுகங்களையும், இல்லறத்தானின் நெறிமுறைகளையும், ஸ்வர்கம் முதலிய லோகங்களை அடைவதற்குமே பயன்படும். அதில் ப்ரும்ம விசாரம் பற்றித் தெளிவாகக் கூறப்படவில்லை.
வேத வாக்கியங்களும், உபநிஷத்துக்களும்கூட ப்ரும்மத்தை விளக்கத் திறனற்றவைகளே.
மனிதனாகப் பிறந்துவிட்டாலே ஸத்வம், ரஜஸ், தமஸ் முதலிய குணங்களுக்காட்பட்டு தன் அறிவு மற்றும் செயற்புலன்கள் வாயிலாக நற்செயலையோ, தீய செயலையோ செய்து கொண்டுதான் இருப்பான்.
மாயையோடு தொடர்புடைய மனம், சம்சார சாகரத்தில் இயைந்து செல்லும் இயல்புடையது. உடலை அபிமானித்திருக்கும் மனம் ஜீவனுடன் சேர்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. இன்ப துன்பங்களுக்குக் காரணம் மனமே. மனம் அழிந்தால் கர்மங்களை உடல் அனுபவிக்கும்போதும், பாதிப்பு ஜீவனுக்கு இல்லை.
மனம் இருக்கும்வரையே ஜீவனுக்கு உலக விவஹாரங்களால் பாதிப்பு. ஆகவே, அறிஞர்கள் ஸம்சாரத்தில் வீழ்வதற்கும், அதிலிருந்து விடுபட்டு முக்தியின்பம் பெறுவதற்கும் முக்கிய காரணி மனமே என்கிறார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment