ஜடபரதர் மேலும் கூறலானார்.
மனம் உலகியல் விஷயங்களில் ஈடுபடும்போது ஜீவனை ஸம்சாரக் குழியில் தள்ளுகிறது. அதே மனம், விஷயங்களின் தொடர்பை அறுக்குமானால், முக்திக்குக் காரணமாகிறது.
விளக்கெரியும்போது திரி நெய்யை எடுத்துக்கொண்டு அக்னி ஜ்வாலையைத் தருகிறது. நெய் தீர்ந்து விட்டால் திரியும் அக்னியோடு ஒன்றுகிறது.
மனம் விஷயங்கள் ஓய்ந்துவிட்டால் தன் தத்துவத்தில் ஐக்கியமாகிறது.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, அஹங்காரம் ஆகிய பதினொன்றும் மனத்தின் மாறுதல்களுக்குக் காரணமாகின்றன.
உருவம், தொடுவுணர்ச்சி, சுவை, ஒலி, ஆகிய ஐந்து அறிவுப்புலன்களின் செயல்கள். கழிவுகளை வெளியேற்றுதல், புணர்ச்சி, ஓடியாடுதல், பேசுதல், கொடுத்தல் வாங்குதல் ஆகிய ஐந்தும் செயற்புலன்களின் செயல்கள். நான் எனது என்னும் எண்ணம் அஹங்காரம்.
இந்தப் பதினோரு விஷயங்களும் இயல்பு, மனப்பதிவு (வாஸனை), செயல்கள், காலம் ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறாகப் பிரிகின்றன. இவை அனைத்திற்கும் உள்ள ஒரே தொடர்பு ஆன்மா. அவை தன்னிச்சையாகத் தொடர்பு கொள்ள இயலாது.
ஜீவனுக்கு மனத்தோடு எவ்விதத் தொடர்பும்இல்லை. ஆனால் இருப்பதாக வேஷம் கொள்கிறது.
விழிப்பு நிலையிலும், கனவிலும் தோன்றும் விஷயங்கள் ஸுஷுப்தியில் (ஆழ்ந்த உறக்கத்தில்) மறைந்துபோகின்றன. அப்போதும் ஜீவன் சாக்ஷியாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறத். அதனால்தான் எழுந்ததும் 'நான் நன்றாக உறங்கினேன்' என்று சொல்லமுடிகிறது. எண்ணங்களற்ற ஆழ்நிலை உறக்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜீவன் புலன்கள் விழித்ததும் தன் நிலையை வெளிப்படுத்துகிறது.
ஜீவனும் வாசுதேவனும் வேறுவேறல்ல. தான் ஆத்ம ஸ்வரூபம் என்று உணரும் வரையே ஜீவன் தன்னை வேறாக நினைக்கிறது. பரமாத்மா எங்கும் நீக்கமற நிறைபவர். ப்ரபஞ்சத்திற்கு ஆதி காரணர். பூரணர், அறிவினால் அறியப்படுபவர். நியாமகர் (ஒவ்வொரு செயலுக்கும் அதிகாரிகளை நியமிப்பவர்).மாயையின் அதிபதி. அனைத்து ஜீவராசிகளின் உள்ளிருந்து நடத்திச் செல்பவர்.
சாட்சியாக ப்ரபஞ்சம் முழுதும் நிரம்பியுள்ளார்.
மனமானது சோகம், மோகம், நோய், பற்று, பேராசை, பகைமை ஆகியவற்றின் தொடர்பையும் மமதையும் உண்டாக்குகிறது. இதுவே ஆத்மாவைத் திரைபோல் மறைப்பது. இதை உணராத வரை ஜீவனுக்குத் துன்பம்தான்.
மனமே நன்மை செய்வதுபோல் நடிக்கும் வலிமைமிக்க பகைவன். குருவின் திருவடிகளையும், ஸ்ரீ ஹரியின் திருவடிகளையும் ஆச்ரயித்து அந்தப் பெரும் படையுடன் விழிப்புணர்வோடு நிதானமாக மனத்தை வெற்றிகொள்வாயாக
என்றார் அந்தணர்.
என்றார் அந்தணர்.
ரஹூகணன் கூறினான்
உலகோரை நல்வழிப்படுத்தவே உடல் தாங்கி வந்தீர். அந்தணர் உருக்கொண்டு ஞானமயமான ஸ்வரூபத்தை மறைத்து உலா வரும் தம்மை வணங்குகிறேன்.
தங்கள் உபதேசங்கள் நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு அருமருந்துபோலும், வெம்மையொனால் வாடியவனுக்குக் குளிர்ந்த நீர்போலும், நான் எனது என்ற நச்சுப்பாம்பினால் கடிபட்ட எனக்கு அமுது போலுமாயிற்று.
ப்ரபோ! என் சந்தேகங்களைப் பிறகு கேட்கிறேன். ஆன்ம ஸ்வரூபம் பற்றித் தாங்கள் கூறியவற்றை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
சுமைதூக்கும் செயல், அதனால் உண்டான சிரமங்கள் ஆகியவை நேருக்கு நேர் தெரிகின்றனவே. உண்மையில் அவை பொய். மாயத் தோற்றம் என்பதை உணர்வதெப்படி?
அரசனைப் பார்த்துக் கருணையுடன் தன் குழந்தையைப் பார்ப்பதுபோல் பார்த்தார் ஜடபரதர்.
மன்னவா! இவ்வுடல் மண்ணின் விகாரமாகும். மண் கல் முதலியவற்றிற்கும் இவ்வுடலுக்கும் என்ன வேறுபாடு?
ஏதோவொரு காரணத்தினால் நிலத்தில் நடக்கும்போது சுமை தூக்குபவன் என்ற பெயரைப் பெறுகிறது.
இப்படி நடந்து செல்லும் உடல் இரண்டு பாதங்கள், கால்கள், இடை, மார்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தோள்பட்டையின் மேல் மரத்தாலான பல்லக்கு. அதில் ஸௌவீர தேசத்தரசன் என்று பெயர் கொண்ட உடல் இருக்கிறது. அவ்வுடலில் நான் எனது என்று ஊறிப்போன நீசெருக்குடன் வீற்றிருக்கிறாய்.
இதில் உனக்கென்ன பெருமை? உண்மையில் இரக்கமற்ற கொடியவனாக இருக்கிறாய். இந்த ஏழை எளியவர்களை வலுவில் பிடித்து உன் பணியாள்களாக்கிக் கொண்டு சுமை தூக்கவைக்கிறாய். ஆனால், பெரியோர் சபையில் நான் மக்களைக் காப்பவன் என்று தற்புகழ்ச்சி பேசித் திரிகிறாய். இது உனக்கழகா?
அனைத்து ஜீவராசிகளும் ப்ரபஞ்சத்தில் தோன்றிப் பின் அதிலேயே ஒடுங்குபவைதான். செயல்முறையினால்தான் பெயர்கள் வேறுபடுகின்றன.இதைத்தவிர உலக நடைமுறைக்கு வேறென்ன காரணம்? நீயே சொல் பார்க்கலாம்.
பூமி என்று சுற்றுகிறதே. அது அடிப்படைக் காரணமான சூக்ஷ்மமான அணுக்களின் கூட்டம்தானே. நுண்ணணுக்களின் கூட்டம் திரண்டு உருக்கொண்டு பூமி எனப்படுகிறது. அந்தப் பரமாணுக்களும் மாயையின் தோற்றமே தானே தவிர, உண்மையில் பரமாணுவின் உள்ளுறைபவன் பரமாத்மாதானே. எனில் திரண்டு உருக்கொண்டு ஒரு மாயத்தோற்றம் காட்டுகிறது.
அவை அனைத்தும் அவித்யையினால் வந்த கற்பனை.
இருட்டில் பாம்பென்று எண்ணப்பட்டது, வெளிச்சத்தில் பழுதென்று தெரிந்தபின்,மீண்டும் இருள் வந்தாலும் பழுதென்று உணரப்படுகிறதல்லவா?
#மஹாரணயம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment