ஸ்ரீ சுகமுனி தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்! பகவானின் திருவடித் தாமரைகளைத் தஞ்சமடைந்தவர்கள், தன்னை வெட்ட வந்தால் கூடக் கலங்கமாட்டார்கள்.
அவர்களுக்கு நான், எனது என்ற எண்ணமில்லை. இது தன் சரீரம் என்றும் நினைப்பதில்லை. ஆத்மாவில் லயிப்பதால், சரீரத்தைப் பிறிதொரு பொருளாய்க் காண்கிறார்கள். சரீரத்துடனான உணர்வை அறுத்து விட்டதால், உடலின் சிரமங்களும், சுகங்களும் ஆன்மைவை பாதிப்பதில்லை.
அவர்களது சரீரத்தை இறைவன் பத்ரகாளி போன்ற உருவங்கள் எடுத்தும், பல வழிகளிலும் காத்தருள்கிறான்.
ஒரு சமயம், சிந்து ஸௌவீர தேசத்தின் அரசன் ரஹூகணன் இக்ஷுமதி நதிக்கரை வழியாகப் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது பல்லக்கு தூக்கிகளின் தலைவன், தன் ஆள்களுக்கு சற்று ஓய்வு கொடுப்பதற்காக வேறொரு ஆளைத் தேடினான்.
அப்போது தற்செயலாக நமது பரதர் அவன் வழியில் எதிர்ப்பட்டார்.
பாகவதம் தற்செயலாக என்னும் இடத்தில் தைவேநோபஸாதித: என்னும் பதத்தைப் போடுகிறது.
அதாவது, நம் வாழ்வில் நடக்கும் சுகதுக்கங்கள் அனைத்தும் நம் வினைப் பயன். ஆனால், ஒரு உண்மையான குருவின் சங்கம் கிடைப்பது தெய்வத்தின் சங்கல்பம். அது வினைப்பயனில் வராது என்பதை ஆங்காங்கே யாத்ருஷ அத்ருஷ்ட தைவேநோபஸாதித: என்றெல்லாம் குறிப்பிடுகிறது.
பரதரைப் பார்த்ததும் அரசனின் பணியாள், இவன் நல்ல உடற்கட்டுடன் இளமையாக இருக்கிறான். நன்கு பாரம் சுமக்க வல்லவனாக இருப்பான் என்று நினைத்தான்.
பரதரிடம் வந்து அவரை அதட்டி அவரது தோளில் பல்லக்கை வைத்தான்.
சொந்தமாக மனத்தில் எண்ணம் எழும்பாத பரதர், பேசாமல் பல்லக்கு தூக்கலானார். ஆனால், வழியில் செல்லும் எறும்பு, புழு முதலிய ஜீவன்களை மிதிக்காமல் இருக்க பார்த்துப் பார்த்து நடந்தார்.
அதனால், மற்ற பல்லக்குத் தூக்கிகளால் நடக்க முடியாமல் ஆயிற்று. அவர் தோளில் பல்லக்கு இருக்கும் நினைவே இல்லாமல், தாண்டிக்குதிப்பதும், கோணலாக காலை வைப்பதுமாக இருக்க, பல்லக்கு கோணலாகச் சென்றது.
உள்ளே அமர்ந்திருந்த ரஹூகணனின் தலை அவ்வப்போது பல்லக்கின் கட்டையில் இடிக்க, அவன் பணியாட்களை ஒழுங்காகச் செல்லும்படி அதட்டினான்.
பரதரால் தங்களுக்கும் அரச தண்டனை கிடைக்குமோ என்று பயந்த பல்லக்குத் தூக்கிகள் அரசனிடம்
அரசே ! இது எங்கள் தவறன்று. நாங்கள் ஒழுங்காகத்தான் தூக்குகிறோம். புதிதாய் வந்த மனிதன்தான் கோணலாக நடக்கிறான். இவனோடு சேர்ந்து எங்களால் பல்லக்கு தூக்க இயலாது என்று கூறினர்.
புதிதாக வந்தவனை தவறு செய்தவுடனேயே கண்டிக்காவிடில் மற்றவர்களும் அலட்சியமாக வேலை செய்வார்கள் என்று எண்ணினான் அரசன். புதிய மனிதனை நினைத்துக் கோபம் அடைந்தான்.
ரஹூகணன் ஸாது சேவையில் ஈடுபாடு உள்ளவன்தான். ஆனால் சாம்பல் மூடிய நெருப்பைப்போல் புழுதி மூடிய ப்ரும்மதேஜஸுடன் இருக்கும் பரதரை சாதாரணன் என்று நினைத்துவிட்டான். எனினும் நேரடியாக ஏசாமல், மறைபொருளாய் கேலி செய்தான்.
தம்பி! ரொம்ப பரிதாபம். தன்னந்தனியா ரொம்ப தூரம் பாரம் தூக்கி களைச்சிட்டீங்க. வயசாயிடுச்சு வேற. உடம்பும் நோஞ்சானா இருக்கு. ரொம்ப சிரமமோ? ஏதாவது உதவி வேணுமோ?
என்றான்.
அதை கவனித்த பரதர், பதிலேதும் சொல்லாமல் பல்லக்கைத் தொடர்ந்து தூக்கினார். ஆனால் அவரது செய்கையில் மாற்றமில்லை.
மீண்டும் அவர் ஒரு புழுவைத் தாண்டி துள்ளிக் காலைவைக்க, பல்லக்கினுள் இருந்த ரஹூகணன் தலையில் பல்லக்கின் கட்டை டங்கென்று இடித்தது. வலியில் துடித்தான் அரசன்.
சட்டென்று கோபத்தில் சுடுசொற்களை வாரி இறைத்தான்.
அடேய்! நீ இருக்கிறாயா? செத்தாயா? அரச கட்டளையை மீறும் அளவுக்கு துணிச்சலா? பைத்தியமா? உனக்கு தண்டனை கொடுத்தால்தான் வழிக்கு வருவாயா?
என்று கத்தினான்.
உண்மையில் ரஹூகணன் ப்ரும்ம வித்யை அறிவதற்காக கபிலரைத் தேடிப் போய்க் கொண்டிருந்தான்.
ப்ரும்மத்தை உணரும் ஆவல் உடையவனுக்கு தெய்வம் குருவை அனுப்பிவைக்கும்.
தெய்வத்தின் சங்கல்பத்தால் குருதான் சீடனைக் கண்டுபிடிப்பார். எவ்வளவு முயன்றாலும் ஜீவனால் குருவைக் கண்டுகொள்ள இயலாது.
ஜீவனின் வேலை இறைய அடைய உண்மையான விருப்பம் கொள்வதோடு சரி. அதன்பின், குருவை அனுப்பி வழிநடத்துவது இறைச் செயல்.
பிறந்ததிலிருந்து எவரிடமும் தானாக விரும்பி ஒரு வார்த்தைகூடப் பேசாத பரதர், தன்னை வெட்டவந்தபோதுகூட எதிர்ப்பு தெரிவிக்காத பரதர், ஊசிப்போனதையும் பழையதையும் போட்டபோதும் பதிலேதும் சொல்லாமல் உண்ட பரதர், எவ்வளவோ பேர் வேலை ஏவினாலும் பதிலின்றிச் செய்து முடித்த பரதர், முதன்முதலாக, தெய்வ சங்கல்பத்தினால், தான் குருவாய் இருந்து வழிநடத்தவேண்டிய ரஹூகணனைக் கண்டு வாய் திறந்தார்.
பல்லாண்டு காலம் மோனத்தில் இருந்த நம்மாழ்வாரைப் பேசவைக்க ஒரு மதுரகவியாழ்வார் வர வேண்டியிருந்தது.
அதுபோல் பரதரை வெளிப்படுத்த உண்மையான சீடனான ரஹூகணன் தேவைப்பட்டான்.
அரசனே! நீ கூறியதெல்லாம் உண்மைதான். பாரம் என்பது சுமப்பவனுக்கல்லவா? வழித்தடம் என்பது செல்பவனுக்கு. பருத்தவன், இளைத்தவன், வயதானவன் என்பதெல்லாம் உடலுக்கன்றி ஆன்மாவிற்கல்ல. உடலின் இயல்பை ஆத்மா ஏற்பதில்லை. நீ கூறியதெல்லாம் நான் எனது என்று உடலில் அபிமானம் கொண்ட ஜீவனுக்கே ஆகும். எனக்கில்லை.
உயிருடன் இருப்பதும், இறப்பதும் அனைத்து ஜீவன்களுக்கும் உண்டு. எஜமானன், பணியாள் என்று இருவர் இருக்கும் இடத்தில்தான் கட்டளை செல்லுபடியாகும். இங்கு நீ நான் என்ற வேற்றுமை இல்லை. அனைத்தும் ஸத்யமான பொருளே.
நீ அரசன் நான் அடிமை என்ற வேற்றுமை எண்ணம் உனக்கிருப்பதால் நீ கட்டளை இடுகிறாய். சொல், இவ்வேற்றுமையற்ற நான் உனக்கு என்ன பணி செய்யவேண்டும்?
வீரனே! நான் திமிர் பிடித்தவன், பைத்தியம், ஜடன் என்றெல்லாம் கூறினாய். நான் என் சொந்த நிலையினின்று வழுவாமல் இருக்கிறேன். உண்மையில் நான் பைத்தியமாகவோ ஜடமாகவோ இருந்தாலும்கூட உன் தண்டனையால் திருத்த இயலுமா? அது பயனற்ற வேலை.
என்று கூறிய பரதர் திரும்ப பல்லக்கைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு நடக்கலானார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment