ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
ஆங்கீரஸ கோத்ரத்திற்கு சிறப்பு செய்யும் வண்ணம் அனைத்து நற்பண்புகளும், தவமும் ஒருங்கே பெற்ற ஓர் அந்தணர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். மூத்தவளிடம் அவருக்கொப்பான சிறந்த ஒன்பது பிள்ளைகள் பிறந்தனர். இளையவளுக்கு ஒரு மகனும் மகளும் இரட்டையராகப் பிறந்தனர்.
அந்த இரட்டையரில் ஆண்மகனாகப் பிறந்தது பரம பக்தனும், சிறந்த அரசனுமான பரதனேயாவார்.
இறைவனது அருளால் அவருக்கு இப்பிறவியிலும் சென்ற பிறவிகளின் நினைவு நீங்காமல் இருந்தது.
மீண்டும் மானுடப் பிறவி கிடைத்தது குறித்து மகிழ்ச்சியுற்ற அவர், இம்முறை மிகவும் கவனமாக இருக்க முடிவு செய்தார்.
தளைகள் ஏற்படும் என அஞ்சி, தன் பக்தியை பரம ரகசியமாக வைத்துக் கொண்டார். மேலும் அனைத்து சுற்றத்தார்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கலானார்.
எப்போதும் பகவானின் திருவடித் தாமரைகளையே சிந்தித்தவண்ணம் இருந்தார். பகவத் குணங்களைக் கேட்பதிலேயே பொழுது போக்கினார்.
ஆனால், தன்னைப் பித்தன் போலவும், மூடன் போலவும், குருடன், செவிடன் போலவும் காட்டிக்கொண்டார்.
மூடனாகப் பிறந்த தன் மகனை எண்ணி எண்ணி வருந்திய அந்தண ச்ரேஷ்டர், அவருக்கு வைதீகச் சடங்குகளை முறைப்படி செய்ய விரும்பி உபநயனம் செய்துவைத்தார்.
வேதத்தின் சில பகுதிகளையாவது மகனுக்கு ஓதி வைத்து விட வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தார். ஆனால், பரதரோ நான்கைந்து மாதங்கள் கற்பித்தும் ப்ரணவம் மற்றும் காயத்ரி மந்திரத்தைக்கூட ஸ்வர வரிசை பிழன்று வேண்டுமென்றே தப்பும் தவறுமாகச் சொல்வார்.
மகன் என்ற பாசத்தினாலும், தந்தையாகத் தன் கடைமையை நிறைவேற்றவேண்டும் என்றெண்ணியதாலும் அவ்வந்தணர் விடாமல் பரதருக்குக் கற்பித்து வந்தார்.
பரதரோ எதிலும் கவனம் செலுத்தவே இல்லை. அந்தணர் வருந்தி வருந்தி காலகதியை அடைந்தார்.
இளைய மனைவி, மூத்தவளிடம் தன் இரு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு கணவனுடன் உடன்கட்டை ஏறினாள்.
மூத்த அண்ணன்மார்கள் அனைவரும் மிக நன்றாக சாஸ்திரத்தைப் பயின்று கர்ம மார்கத்தில் ஒழுகி வந்தனர். அதையே உயர்ந்ததாக எண்ணினர்.
அவர்களுக்கு ப்ரும்மத்தைப் பற்றிய அறிவோ, பரவித்யை பற்றிய ஞானமோ இல்லை. எனவே, அவர்கள் பரதரைப் புரிந்துகொள்ளவில்லை.
தந்தை இறந்தபின் பரதருக்குக் கல்வி கற்பிக்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். அவரை மூடன் என்றெண்ணினர்.
செவிடன், பித்தன் என்று எவரேனும் அழைத்தால் அதற்கேற்பவே நடந்துகொள்வார்.
என்ன வேலை ஏவினாலும் செய்வார். கூலி கொடுத்தால் வாங்கிக் கொள்வார். கொடுக்கவில்லையெனில் கேட்கமாட்டார்.
யாராவது அழைத்து உணவு கொடுத்தால், அதை ருசி பார்க்காமல் உட்கொள்வார்.
எவ்வளவு கேலி செய்தாலும், அவமதித்தாலும் உணரமாட்டார்.
ஆன்மஞானம் இயற்கையிலேயே கைவரப் பெற்றிருந்ததால், குளிர் - வெப்பம், மான - அவமானம் போன்ற இரட்டைகளால் பாதிக்கப்படாமலும், சரீரப் பற்று இல்லாமலும் இருந்தார்.
குளிர், வெப்பம் ஆகியவை மிகுந்தாலும் ஆடு மாடு போல் ஆடையின்றி நடப்பார். அழகான உடற்கட்டு, கொழுத்த கம்பீரமான உடல்வாகு, உடல் முழுதும் அழுக்கு, கந்தலாடை, ஜடை போலாகிவிட்ட பூணூல், ஆகியவற்றுடன் விளங்கிய அவரை ஆசாரமற்ற அந்தணன் என்றெல்லாம் அவமதித்தனர்.
பிறரிடம் வேலை செய்து கிடைத்தை உண்டதால் , அவரது தமையன்கள் அவரை வயல் வேலை செய்ய அமர்த்தினர். பூமி, மேடா, பள்ளமா, சமனா என்று கவனிக்காமல் உழுவார். கஞ்சி, உமி, தவிடு, குருணை, உளுத்துப்போன உளுந்து, தீய்ந்த சோறு, ஊசிப்போன பழையது எது கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் விருந்தைப் போல் உண்பார்.
ஒரு சமயம் காட்டுமிராண்டிகளின் தலைவன் ஒருவன், தனக்கு மகப்பேறு வேண்டி, காளிக்கு பலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டான். அதற்காக குறையற்ற மனிதன் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்தான்.
அம்மனிதன் தப்பி ஓடிவிடவே, அவனைத் தேடி வந்த பணியாட்கள், வயலின் நடுவில் நள்ளிரவில் அமர்ந்திருந்த பரதரைக் கண்டனர்.
தொலைந்துபோனவனை விட, பலிக்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றெண்ணினர். எல்லா அங்கங்களும் பூர்த்தியாக மிக அழகாக இருக்கும் பரதரை காளிக்கு பலியிட்டால் தேவி மகிழ்ச்சியடைந்து நல்ல மகனைக் கொடுப்பாள் என்று எண்ணி அவரைப் பிடித்தனர்.
அவரோ தனக்கென்று ஒரு எண்ணம் இல்லாதவர். அவர்கள் பிடித்ததும், மிகுந்த ஒத்துழைப்புடன் மகிழ்ச்சியாக அவர்களுடன் கிளம்பி வந்துவிட்டார்.
அவரை உட்காரவைத்து நன்றாகத் தேய்த்து தேய்த்து எண்ணெய்க் குளியல் செய்வித்தனர். அறுசுவையுண்டி கொடுத்தனர். அவர் நன்கு உண்டபிறகு, அவரை நிறைய மாலைகள் சாற்றி அலங்கரித்தனர். எல்லாவற்றிற்கும் மகிழ்ச்சியாகக் காண்பித்தார்.
பின்னர் தூப தீபங்களுடன் முளைப்பயிர், மாலைகள், கனிகள், தளிர்கள், பொரி ஆகியவற்றுடன் அவரை அழைத்துக்கொண்டு காளியின் முன் நின்று பாடி ஆடி நிறைய துதிகள் செய்தனர்.
அப்போது அவர்களது பூசாரி ஆடிப்பாடிக்கொண்டு நரபசுவை பலியிடுவதற்காகக் கூரிய வாளைக் கையிலெடுத்தான்.
இயற்கையிலேயே அவர்கள் ரஜோகுணமும், தமோகுணமும் நிரம்பியவர்கள். தவறோ சரியோ தங்கள் விருப்பம்போல் வாழும் இயல்பு கொண்டவர்கள். வேதத்தையும் அந்தணர்களையும் அவமதிப்பதில் ஆசை கொண்டவர்கள்.
ஆபத்துக் காலத்தில் தன்னைக் கொல்லவரும் பசுவைக்கூடக் கொல்லலாம் என்று சொல்லும் நீதி சாஸ்திரம் அப்போதும் அந்தணர்களைக் கொல்லலாகாது என்று தடை சொல்கிறது.
அப்படியிருக்க, ப்ரும்மஞானி, எவ்வுயிரிடத்தும் அன்பு பூண்டவர், பகைமையற்றவர், ஸாது, அத்தகைய பரதரை பலியிடத் துணிந்தனர்.
குளிப்பாட்டும்போதும், அலங்காரம் செய்யும்போதும், உண்ணும்போதும் எத்தகைய மலர்ந்த முகத்துடன் இருந்தாரோ, அதே மலர்ச்சியுடன் தன்னை வெட்ட வருபவனையும் நோக்கினார் பரதர்.
இறைவன் தன்னைப் பழித்தாலும் பொறுப்பான். தன் அடியாரைப் பழித்தால் பொறுப்பானா?
ஞானியைத் துன்புறுத்துவது இறைவனைத் துன்புறுத்த முனைவதாகும்.
ஞானியைத் துன்புறுத்துவது இறைவனைத் துன்புறுத்த முனைவதாகும்.
பொறுக்கமுடியாத கோபத்தினால் அங்கிருந்த விக்ரஹத்திலிருந்து காளி வெளித்தோன்றினாள்.
புருவங்கள் நெறிந்தன. கண்கள் சிவந்தன. உலகையே அழிக்கப் புறப்பட்டவள்போல் அட்டஹாசம் செய்துகொண்டு பீடத்திலிருந்து துள்ளிக் குதித்தாள். அங்கிருந்த அத்தனை பாவிகளின் தலைகளையும் வெட்டிப் பந்தாட்டம் ஆடினாள். அவர்களது உதிரத்தைத் தன் கணங்களுடன் குடித்தாள்.
ஆடிக் கொண்டிருக்கும் அன்னையை அதே மாறாத முக மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பரதர்.
தன்னை வெட்ட வந்ததோ, அன்னை காத்ததோ எதையும் உணராமல், அனைத்தையும் ப்ரும்மமாகவே கண்டு எந்தச் சலனமும் இன்றி ஆனந்தத்தில் மூழ்கியிருந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment