Friday, May 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 265

தன்னைக் கடலில் விட்டுச் செல்லவேண்டாம் என்று மீன் ஸத்யவிரதனிடம் வேண்டியது.

அதன் இனிமையான, பரிதாபமான குரலைக்கேட்ட ஸத்யவிரதனுக்கு மதி மயங்கிற்று.

தாங்கள் ஒரே ஒரு பகற்பொழுதில் நூறு யோஜனை தூரம் வளர்ந்துவிட்டீர்கள். இப்படிப்பட்ட நீர்வாழ் பிராணியை நான் பார்த்ததே இல்லை.

நீங்கள் நான் பூஜிக்கும் நாராயணனே என்று நினைக்கிறேன். ஸர்வ அந்தர்யாமியான தாங்கள் நீர்வாழ்பிராணியின் உருவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.

தங்களையே சரணமடைகிறேன். தங்கள் திருவிளையால்களும், அவதாரங்களும் ஜீவன்களின் நன்மைக்காகவே. இப்போது மீனாகத் திருமேனி தாங்கி வந்துள்ளீர்கள். தங்களைச் சரணடைவது என்றுமே‌ வீண்போவதில்லை. என்றான் ஸத்யவிரதன்.

தன் பரமபக்தனான ஸத்யவிரதன் இவ்வாறு பேசவும், அதற்குமேல் பகவான் விளையாட விரும்பவில்லை.

பகவான் கூறலானார்.

குழந்தாய்! இன்று முதல் ஏழாம் நாளில், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகங்களும் ப்ரளயக் கடலில் மூழ்கப் போகின்றன.
அவ்வாறு மூவுலகங்களும்‌ மூழ்கும்போது உன்னருகில் ஒரு படகு வரும்.

அதில் நீ ஸகல ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும், மூலிகைகள், பெரிய செடி கொடி மரங்களின் விதைகளையும், எடுத்துக்கொண்டு ஸப்தரிஷிகளையும் அழைத்துக்கொண்டு அப்படகில் ஏறு.

அவ்வமயம் எங்கும் இருள் சூழ்ந்து, நீர் மட்டும் இருக்கும். கலங்காமல், ப்ரும்மரிஷிகளின் தேஜஸ் வெளிச்சத்தில் அப்படகில் அமர்ந்து ப்ரளயகாலத்தில் கடலில் சுற்றித் திரிந்து வா.

சூறாவளிப் புயலால், படகு தத்தளிக்கும் சமயம் நான் அங்கு வருவேன். வாசுகிப்பாம்பைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிவிடு.

ப்ரும்மாவின் இரவுக்காலம் முடியும் வரை நீ இருக்கும் படகை இழுத்துக்கொண்டு நான் ப்ரளயஜலத்தில் சுற்றித் திரிவேன். அப்போது நீ கேட்கும் கேள்விகளுக்கு பதிலுரைப்பேன். உனக்கு என்னைப் பற்றிய விளக்கங்கள் தானாகவே தோன்றி நீ ஞானம் பெறுவாய்.

இவ்வாறு ஸத்யவிரதனுக்கு க் கட்டளையிட்டுவிட்டு பகவான் அங்கேயே மறைந்துபோனார்.

ஸத்யவிரதன் அங்கேயே தர்பைகளைக் கிழக்கு நுனியாகப் பரப்பி அமர்ந்து மத்ஸ்யமூர்த்தியை தியானிக்கலானான்.

பகவான் கூறியபடி, ஊழிக்காலத்து மேகங்கள் திரண்டு பயங்கரமாக மழை பொழியலாயிற்று. கடல் பொங்கி கரையைக் கடந்து வரலாயிற்று. பூமி முழுவதும் கடலில் மூழ்கத் துவங்கியது.

ஸத்யவிரதன் பகவானின் கூற்றை நினைந்து, உடனே மூலிகைகளையும், மரம், செடிகளின் விதைகளையும் அள்ளி எடுத்துக்கொண்டு நின்றான். அப்போது அவனருகில் ஒரு படகு வந்தது. ஸத்யவிரதன் படகில் ஏறினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, May 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 264

ஸத்யவிரதன் கைக்குள் கிடைத்த குட்டிமீனின் வேண்டுகோளுக்கிணங்க அதைக் கமண்டல நீரில் இட்டு இருப்பிடம் கொண்டு வந்தான். கமண்டலத்தை அப்படியே வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனான்.

அதே இரவில் அந்த மீன் கமண்டல நீரினுள் பெரிதாக வளர்ந்தது. அதனால் கமண்டலத்தினுள் இருக்க முடியவில்லை. அது அரசனைப் பார்த்துக் கூறிற்று.

மன்னா! இந்தக் கமண்டலத்தினுள் என்னால் வளர முடியவில்லை. நான் வளர எனக்கு ஒரு நல்ல பெரிய இடம் வேண்டும் என்றது.

ஒரே இரவில் விரலளவு இருந்த மீன் கையளவு வளர்ந்ததைப் பார்த்து யோசித்துக்கொண்டே மீனைக் கையால் எடுத்து அங்கிருந்த ஒரு பெரிய தொட்டிக்குள் விட்டான் சத்யவிரதன்.

ஒரு முஹூர்த்த காலம் சென்றதும் வந்து பார்த்தால் மீன் தொட்டி முழுமைக்கும் வளர்ந்து திரும்பக்கூட இடமின்றித் தவித்தது.

மன்னா! நான் உன்னிடம் அடைக்கலமாக வந்துள்ளேன். இந்தத் தொட்டி நான் வாழப் போதுமானதாக இல்லை. எனக்கு இன்னும் பெரிய இடம் வேண்டும் என்றது.

ஸத்யவிரதனுக்கு மீனின் வளர்ச்சி பெரிய புதிராக இருந்தபோதிலும், அடைக்கலமாக வந்த மீன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் அதை எடுத்து ஏரியில் விட ஏற்பாடு செய்தான். ஏரியில் விட்ட சில மணி நேரங்களில் அந்த மீன் ப்ரும்மாண்டமாக வளர்ந்தது.

மன்னா! நான் நீர்வாழி பிராணி. இந்த ஏரியும் எனக்குப் போதவில்லை. நீர் என்னைக் காக்க விரும்பினால், நீர் வற்றாத பெரிய ஏரியில் என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்றது.

மீன் இவ்வாறு கூறவே ஸத்யவிரதன் மிகவும் குழப்பத்துடனும், பயத்துடனும் அம்மீனை நாட்டிலுள்ள ஒவ்வொரு நீர்நிலையாகக் கொண்டு விட்டான். ஒரு கட்டத்தில் மீனை விடுவதற்கு அதை விடப் பெரிய நீர்நிலை இல்லை என்ற நிலையில் கடலில் கொண்டு போய் விட்டான்.

கடலில் விட்டதும் மீன், கடலில் வாழும் திமிங்கிலங்கள் என்னைக் கொன்று விடும். என்னைக் கடலில் விட்டுச் செல்லாதீர்கள் என்றது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, May 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 263

பரீக்ஷித் கேட்டான். ப்ரும்மரிஷியே முன்பொரு சமயம் பகவான் மத்ஸ்யாவதாரம் எடுத்து லீலைகள் செய்தாராமே. அதன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.

பகவான் ஏன் மீன் பிறவி எடுத்தார். மீன் பிறவி தமோகுணமுள்ளது. நாற்றமுடையது. பகவானது கதைகள் எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மையளிப்பது. ஆகவே, எனக்கு பகவானின் லீலா விநோதங்களை முழுமையாகக் கூறுங்கள்.

ஸ்ரீ சுகர் கூறலானர்.
எவருக்கும் ஆட்படாத ஒப்பார் மிக்கார் இல்லாத சுதந்திர புருஷன் பகவான். இருப்பினும் பசுக்கள், அந்தணர்கள், ஸாதுக்கள், வேதங்கள், தர்மம், உலகியல் செல்வங்கள் ஆகியவற்றைக் காக்க பற்பல அவதாரங்களை மேற்கொள்கிறார்.

பகவான் பெரியது சிறியது, உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லா ஜீவராசிகளிலும் காற்றைப்போல் உள்ளிருந்து பல திருவிளையாடல்கள் புரிகிறார். ஆனால், அந்த ஜீவராசிகளின் குணங்களால் தான் அடிமைப்படுவதில்லை.

இப்போது நடக்கும் கல்பத்திற்கு முந்தைய கல்பத்தின் முடிவில் ப்ரும்மதேவர் கண்ணயர்ந்தபோது, பிராம்மம் என்ற நைமித்திகப் ப்ரளயம் ஏற்பட்டது. அப்போது இம்மண்ணுலகம் கடலுள் ஆழ்ந்தது.

பிரளயம் தோன்றிய நேரம்‌ இரவு நேரமானதால் ப்ரும்மா உறங்கத் துவங்கினார். அப்போது அவரது திருமுகத்திலிருந்து வேதங்கள் வெளிவந்தன. அப்போது அங்கு வந்த ஹயக்ரீவன் என்ற அசுரன் அவற்றை திருடிச் சென்றான்‌.

ஸர்வசக்தரான பகவான் இதையறிந்து மத்ஸ்யாவதாரம் ஏற்றார். அவ்வமயம் ஸத்யவ்ரதன் என்ற பக்தன் நீரை மட்டும் பருகி தியானம் செய்துவந்தான். இவன்தான் இந்த மஹா கல்பத்தில் சூரியனின் மகனான ச்ராத்ததேவன். அவனைத்தான் பகவான் வைவஸ்வத மனு என்ற ஏழாவது மனுவாக நியமித்தார்.

ஒரு சமயம் ஸத்யவிரதன் க்ருதமாலா எனப்படும் வைகை நதியில் நீர்க்கடன் செய்தான்.

அப்போது குவிந்த அவன் கைக்குள் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் இருந்தது.

பாண்டிய மன்னனான அவன், அம்மீனை நீரிலேயே போட்டுவிட்டான்.

அப்போது குட்டிமீன் அவனைப் பார்த்துப் பேசியது.

அரசே! நீர் ஏழைப் பங்காளன். கொடிய நீர்வாழ் பிராணிகள் சில என்னைப் போன்ற குட்டிமீன்களை கொன்று உண்டுவிடுகின்றன. அவற்றிடமிடமிருந்து தப்பிக்கவே உம்மிடம் சரணடைந்தேன். நீர் எம்மை மறுபடி ஆற்றில் விட்டால் எனக்குப் புகலேது? என்று பரிதாபமாகக் கேட்டது. பகவான் தான் மீனுருவில் வந்திருக்கிறான் என்றறியாத மன்னன் அம்மீனைக் காக்க எண்ணி அதைத் தன் கமண்டலத்தில் இட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, May 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 262

பகவான் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த பலியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. கலங்கிய கண்களோடு, நா தழுதழுக்க இரு கரம் கூப்பி பகவானிடம் கூறலானான்.

நான் இன்னும் தங்களை வணங்கவே இல்லையே. முயற்சிதானே செய்தேன். தங்களையே எப்போதும் எண்ணும் பக்தர்களுக்கும் பெரும்பேற்றை நாயினும் கடையேனான எனக்கருளினீரே.

என்று கூறி பலமுறை வணங்கினான். வருணபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சுற்றம் சூழ மகிழ்ச்சியுடன் ஸுதல லோகம் சென்றான்.

தன் குலப்பெருமையை விளங்கச் செய்த பலியைக் கண்டு மகிழ்ந்த ப்ரஹலாதன் பகவானிடம் கூறினார்.

பகவானே! இது போன்ற திருவிளையாடலை ப்ரும்மாவும் பெற்றதில்லை. திருமகளுக்கும் இல்லை. பரமேஸ்வரனுக்கும் கூட இல்லை. அசுரர்களான எங்களுக்குப் போய் வாயிற்காப்போனாக நிற்கிறீர்களே.

எப்போதும் தங்கள் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கே இல்லாத பேறு எங்களைப் போன்ற தீயவர்க்கு எவ்வாறு கிடைத்தது? தங்களின் அருட்பார்வை கிட்ட நாங்கள் என்ன செய்துவிட்டோம்?

தாங்கள் அனைத்திலும் அந்தர்யாமியாக விளங்குபவர். தங்களுக்கு தெரியாதது ஒன்றுமே‌இல்லை. வேண்டுதல் வேண்டாமையற்றவர். சம நோக்குடையவர். இருப்பினும் தங்களது இந்த லீலை எனக்குப் புரியவில்லை.
என்றார்.

பகவான் கலகலவென்று சிரித்தார்.
ப்ரஹலாதா! நீ ஸுதல லோகம் செல். அங்கு உன் பேரனுடன் ஆனந்தமாய் இரு. உங்கள் அருகில் கையில் கதையேந்தி நிற்பவனாக என்னை எப்போதும் காண்பாய்.
என்றார்.

ப்ரஹலாதன் பகவானை வணக்கிவிட்டு பலியுடன் கிளம்பினார்.
அதன் பின் வாமன பகவான் ரித்விக்குகள் சூழ அங்கிருந்த சுக்ராசார்யாரிடம் யாகத்தைப் பூர்த்தி செய்யும்படி கூறினார். வேள்வியின் நடுவே ஏற்படும் தடைகளும் குறைகளும் ப்ரம்மவித்துகளின் கடாக்ஷத்தினால் நீங்கும். என்றார்.

சுக்ராசார்யார் கூறலானார்.
எம்பெருமானே! தாங்களே ஸகல கர்மாக்களின் நியாமகர். பயனை அளிப்பவர். வேள்வி ஸ்வரூபமும் தாங்களே. தன் எல்லாச் செல்வங்களையும் பலி மனமொப்பி  அளித்திருக்கும் போது குறை எப்படி ஏற்படும்? ஒருக்கால், மந்திரங்களின் ஸ்வரக்குறைபாடு, தவறாக உச்சரித்தல், இடம், காலம், தக்ஷிணை, தானம், ஹவிஸ் ஆகியவற்றால் குறைபாடு ஏற்படுமாயின் அவை தங்களுடைய திருநாமத்தைச் சொல்வதாலேயே நீங்கிவிடும்.

அனைத்துக் குறைகளையும் நீக்குவது தங்கள் திருநாமம் அல்லவா?
இருப்பினும் தங்கள் கட்டளைக்காக செய்கிறேன்.
என்றார்.

இவ்வாறு பகவான் உபேந்திரனாகப் பிறந்து பலியிடமிருந்து மூன்றடி மண் பெற்று அதை இந்திரனுக்கு அளித்தார்.

இதன் பின் ப்ரும்மதேவர், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், பித்ரு கணங்கள், மனுக்கள், ப்ரஜாபதிகள், பரமேஸ்வரன், ஆகியோர் சூழ, கச்யபர், அதிதி ஆகியோர் மனம் மகிழ, உலக நன்மைக்காக லோகபாலர்களின் தலைவராக வாமன பகவானுக்குப் பட்டபிஷேகம் செய்து வைத்தார்.

தேவர்கோனாகிய இந்திரன், ஸகல மரியாதைகளுடன் அவரை விமானத்திலேற்றி ஸ்வர்க லோகம் அழைத்துச் சென்றான்.

இந்திரனுக்கு ஸ்வர்கமும் கிடைத்தது. வாமனனின் நிழலில் வாழும் பாக்யமும் கிடைத்தது. நீங்காத மகிழ்ச்சி பெற்றான். அனைவரும் தத்தம் உலகங்களுக்குச் சென்றனர்.

ஸ்ரீ சுகர் கூறினார்.

பரீக்ஷித்! வாமனரின் சரிதத்தை முழுமையாக உனக்குக் கூறினேன். இதைக் கேட்பவர் ஸகல பாவங்களிலிருந்தும் விடுபடுவர்.

பகவானின் திருவிளையாடல்கள் எல்லையில்லாதவை. அவற்றை முழுதும் கேட்டு முடிக்க நினைப்பவன், பூமியிலுள்ள மண் துகள்களை எண்ணுபவனுக்குச் சமம்.

இவ்வாமன அவதாரக் கதையைக் கேட்பவன் உயர்ந்த கதியைப் பெறுகிறான். வேள்விக்கால விராமங்களில் இக்கதையைக் கேட்டால், அக்கர்மம் ஸத்கர்மம் ஆகிறது. அனைவர்க்கும் பயனளிப்பதாகிறது. அறநெறி வழுவாது செய்ததாகவும் ஆகிறது
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, May 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 261

தன்னொளி பொருந்தியவரும், தாமரையிதழ் போன்ற அழகிய கண்களை உடையவரும், முழங்கால் வரை நீண்ட கைகளை உடையவரும் காண்பவரின் மனம் கவரும் தோற்றமுடையவரும் தன் பாட்டனாருமான ப்ரஹலாதனை மஹாபலி கண்டான்.

வருணபாசத்தால் கட்டப்பட்டிருந்ததால் அவனால் ப்ரஹலாதனை முறைப்படி வரவேற்க இயலவில்லை. அவருடைய பேரனாக இருந்துகொண்டு, அஹங்காரத்தால் தவறிழைத்ததை எண்ணி வெட்கித் தலை குனிந்து வணங்கினான்.

ப்ரஹலாதன், ஸாதுக்களை வாழ்விக்கும் பக்தவத்ஸலனான வாமன மூர்த்தியின் அருகில் சென்று விழுந்து வணங்கினார்.

பெருமானே! இந்திரப் பதவியை பலிக்குத் தந்தது தாங்களே தான். இப்போது பறித்துக்கொண்டவரும் தாங்களே. இரண்டுமே அழகு. ஆன்மாவை அரிக்கும் அஹங்காரத்திலிருந்தும், செல்வத்திலிருந்தும் பலியைக் காத்தீரே! இது தங்களது ஒப்பற்ற பேரருளேயாகும்.
தங்களை வணங்குகிறேன் என்றார்.

பலியின் மனைவி விந்தியாவளியும் பகவானைப் புகழ்ந்து வணங்கினாள்.
அனைத்தையும் கண்ட ப்ரும்மா கூறலானார்.

அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் எம்பெருமானே! இந்த பலி, தனது என்ற அனைத்தையும் தங்களுக்குக் கொடுத்து விட்டான். தன் ஆன்மாவையும் தங்களுக்கே அர்ப்பணித்தான். இவ்வளவு செய்தும் உறுதி குலையாமல் நிற்கிறான். இவன் தங்கள் கருணைக்கு ஏற்றவன். இவனைக் கட்டவேண்டாம். இவனது கட்டுக்களை அவிழ்த்துவிடுங்கள்.

நல்லெண்ணத்துடன் பூஜை செய்வதில் ஏழ்மையைக் காட்டாமல், அர்க்யம், பாத்யம் அளித்து அருகம்புல்லைக் கொண்டு தங்களைப் பூஜை செய்தாலும்கூட ஒருவன் முக்தியை அடைகிறான்.

அப்படியிருக்க, இந்த பலி, மன உறுதியோடு, மனமுவந்து தன்னுடைய அனைத்தையும் தங்களுக்குக் கொடுத்துவிட்டானே. பரமபாகவதனான அவன் துன்புறுத்தலுக்கு அருகதையற்றவன்.

வாமன பகவான் சிரித்தார்.
ப்ரும்மதேவரே! நான் யாருக்கு அருள் செய்ய விரும்புகிறேனோ, அவர்களது செல்வத்தை முதலில் பறித்துவிடுவேன்.

ஏனெனில் செல்வச் செருக்கினால்தான் மதம்‌கொண்டு, என்னையும், உலகத்தாரையும் அவமதிக்கத் துவங்குகிறான்.

ஜீவன் கர்மாக்களுக்காட்பட்டு கலங்கி அடிமையாகப் பற்பல பிறவிகள் எடுத்துச் சுழலும்போது ஏதோ ஒரு முறை எனதருளால் மனிதப்பிறவி எடுக்கிறான்.

மனிதப் பிறவி கிடைத்தாலும், நற்குடிப்பிறப்பு, நற்செயல், அழகு, கல்வி, நல்லறிவு, பெருஞ்செல்வம் ஆகியவை கிடைப்பது கடினம். இவையெல்லாம் கிடைத்தாலும் ஒருவன் செருக்கடையாமல் இருப்பானாகில் அது எனதருள் என்று அறிக.

மேற்சொன்ன அனைத்தும் மனிதனின் செருக்குக்குக் காரணமாகின்றன. இவற்றால் அவனது மேன்மைக்கான சாதனைகளிலிருந்து தவறுகிறான். என்னைச் சரண் புகுந்தவன் இவற்றால் மயங்கமாட்டான்.

தானவர்கள், தைத்யர்கள் ஆகிய இரு குலங்களுக்கும் ஒப்பற்ற தலைவனான இவன், மிகவும் முன்னேறியவன். அவர்களது புகழைப் பரவச் செய்தவன். சத்யசந்தன். மன உறுதி மிக்கவன். எனது மாயையையும் வென்றுவிட்டான்.

இவனுக்கு நான் பெரும்பதவி அளிக்கப் போகிறேன். எனது பக்தனான இவன் ஸர்வாணி மன்வந்திரத்தின் இந்திரனாக விளங்குவான்.

அதுவரை ஸுதல லோகத்தில் வசிப்பான். அங்கு வசிப்பவர்கள் என் கருணைக்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் நோயற்ற உடல், கவலையற்ற மனம், களைப்பின்மை, சோம்பலின்மை ஆகியவற்றுடன் பகைவர்களே இன்றி இன்பமாக வாழக் கூடியவர்கள்.

பலி! நீ உன் சுற்றத்தாருடன் ஸுதலலோகம் செல். இனி எந்த லோகபாலர்களாலும் உன்னை வெல்ல இயலாது. உன் கட்டளையை மீறுபவர்களை என் சுதர்சனம் தண்டிக்கும்.

உனக்கும் உன் சுற்றத்தாருக்கும், செல்வங்களுக்கும் நானே காவலாக உன் அருகிலேயே எப்போதும் நிற்பேன். என்னை எப்போதும் பார்ப்பதாலேயே உனக்கு தானவர்கள் சேர்க்கையால் ஏற்பட்ட அசுர குணங்கள் அடியோடு அழிந்துபோகும்
என்று அருளினார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, May 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 260

வாமனரிடம் சமருக்குச் சென்ற அசுரர்கள் அனைவரையும் தடுத்து அவர்களை ரஸாதலம் அனுப்பினான் பலி.

பின்னர், பகவானது உள்ளத்தை அறிந்த கருடன், பலியை வருணபாசம் கொண்டு கட்டினார்.

பலியின் செல்வத்தைக் கவர்வதன் மூலம், அவனது மமதையை அழிக்கவும், அவன் உடலைத் தன் திருவடிகளால் அளப்பதன் மூலம், அவனது அஹங்காரத்தைச் சிதைக்கவும், சிறந்த ஸத்யசந்தன் என்று அவன் புகழை வளர்க்கவும் திருவுளம் கொண்டார் பகவான்.

பலி கட்டப்பட்டபோது, எட்டுத் திசைகளிலிருந்தும் அதிர்ச்சிக் குரல்கள் ஒலித்தன.

அவனைப் பார்த்து வாமனர் கூறினார்.
நீ எனக்கு மூன்றடி மண் தருவதாய் வாக்களித்தாயே. ஈரடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்துவிட்டேன். மூன்றாம் அடிக்கு மண் எங்கே? அதற்கென்ன செய்யப்போகிறாய்?

சூரியனின் வெப்பம் செல்லும் வரையிலும், சந்திரனின் ஒளி செல்லும் வரையிலுமான உலகங்கள் முழுதையும் அளந்தாயிற்று. மூன்றாவது அடி நிலம் தரவில்லையானால், நீ நரகம் செல்ல நேரிடும். உன் குருவுக்கும் நீ நரகம் செல்வது சம்மதம்தான்.

உலகங்கள் அனைத்தும் உன்னுடையவை. மூவுலகிற்கும் நீதான் ஒரே தலைவன் என்று கர்வம் கொண்டிருந்தாயே. இப்போது வாக்களித்தபடி, ஓரடி நிலம் தராததால் நரகம் செல்லப்போகிறாய். என்றார்.

இவ்வாறு பலியின் மனோபலத்தைக் குலைக்க முயன்றார் பகவான்.
ஆனால், வருணபாசத்தில் கட்டப்பட்டு, பகவானாலேயே மிரட்டப்பட்ட போதும், பயமின்றி தீரனாக நின்ற பலி, தைரியமாகப் பேசினான்.

தேவாதிதேவனே! என் சொற்கள் பொய்யாக வேண்டா. அவற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். என் தலைமேல் தங்களது திருவடியை வைத்து, என்னை மூன்றாவது அடி நிலத்திற்கொப்பாய் தங்கள் சொத்தாய் ஏற்றுக்கொள்ளுங்கள். என் வாக்கு உண்மையாகட்டும்.

நரகத்தைக் கண்டு அஞ்சவில்லை. சொத்தும் பதவியும் பறிபோவதைப் பற்றியும் வருத்தமில்லை. தங்கள் தண்டனைக்கும் பயமில்லை. யாசகன் கேட்டதைத் தருகிறேன் என்று சொல்லி, பின் ஏமாற்றினேன் என்று உலகம் கூறும். அப் பழிச்சொல்லுக்கே அஞ்சுகிறேன்.

சான்றோர்கள் அளிக்கும் தண்டனை வாழ்விற்கு உகந்தது. அதை நண்பரோ, பெற்றோரோ, உடன் பிறந்தவரோ தரமாட்டார்கள்.

செல்வம், குடிப்பிறப்பு, வலிமை ஆகியவற்றால் செருக்குற்ற எங்களுக்கு ஆசானாகி வந்து நல்ல பாடம் புகட்டினீர்கள். என் கண்களைத் திறந்தீர்கள்.

யோகிகளும், பக்தர்களும் அனவரதமும் தங்களைப் போற்றி எந்நிலையை அடைகிறார்களோ, அவ்வுயர்ந்த நிலையை, பாரபட்சமின்றி, பகைமை கொண்ட எங்களுக்கும் அளிக்கிறீர்கள்.

எவரும் புரிந்துகொள்ள இயலாத வண்ணம் எதிர்மறையாக அருள்கிறீர்கள். தாங்கள் என்னைக் கட்டியதால் வெட்கமோ, துன்பமோ இல்லை. நான் தன்யனானேன்.

தங்களது பக்தர்களுள் முதல்வரான ப்ரஹ்லாதர் தன் தந்தையால் பலவாறு துன்புறுத்தப்பட்டபோதிலும், தன் வாழ்வைத் தங்களிடமே ஒப்புவித்திருந்தார்.
இவ்வுடல், செல்வம் ஆகியவை ஒருநாள் என்னைவிட்டுப் போகத்தான் போகிறது. உலகோரின் கண்களுக்குத் தாங்கள் என் பகைவரே‌ ஆனாலும், என் பூர்வ புண்யத்தாலும், முன்னோரின் ஆசியாலும், விதியாலும், என் கர்வத்தை அழிக்க தாங்கள் என் முன்னால் வந்துள்ளீர்கள். என்றான்.

இவ்வாறு பலி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான ப்ரஹ்லாதன் அங்கு வந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, May 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 259

பகவானின் திருவடி சத்யலோகத்தை அடைந்தபோது, அவரது நகங்களின் ஒளியால் சத்யலோகம் ஒளியிழந்தது.

ப்ரும்மா அவ்வொளியில் மறைந்துபோனார். கண்களைக் கூசும் ஒளியுடைய நகங்கள் கொண்ட திருவடியை மஹரிஷிகள் அனைவருடனும் சேர்ந்து வணங்கினார்.

ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், தனுர் வேதம், ஆயுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றின் நியமங்களுக்கான அதிஷ்டான தேவதைகளும், புராண, இதிஹாஸங்களுக்கான தேவதைகளும், சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் ஆகிய வேதாங்கங்களின் தேவதைகளும் ப்ரும்ம லோகத்தில் வசிக்கின்றன.

அர்ச்சிராதி மார்கங்களில் வந்த கர்மாக்களைப் பொசுக்கிய ஞானிகளும், கல்பத்தின் முடிவில் பகவானுடன் ஐக்கியமாவதற்காக ஸத்யலோகத்தில் காத்திருக்கின்றனர். இவர்கள் பகவானின் திருவடிகளை இடையறாது நினைந்ததாலேயே ஸத்யலோகம் வந்தனர்.

பகவானின் தொப்புள்கொடியிலிருந்து தோன்றிய ப்ரும்மா தம்மிடத்திற்கு வந்த பகவானின் திருவடியை முறைப்படி பூஜை செய்தார்.

விஸ்வரூபனான பகவானின் திருவடியைக் கழுவியதால் அவரது கமண்டல தீர்த்தம் புனிதமாயிற்று. அதுவே ஆகாய கங்கையாகி, விண்ணுலகில் பாய்ந்து பின் புவியில் இறங்கி மூவுலகையும் பவித்ரமாக்குகிறது.


பதநக நீர் ஜனித ஜன பாவன என்று ஜெயதேவர் உள்பட அனைத்து மஹாத்மாக்களும் கொண்டாடுகின்றனர். பகவானின் பாத தீர்த்தமான கங்கை இன்று வரை புனிதத்துவம் மாறாமல் விளங்குகிறது.

ஈரடிகளால் மண்ணுலகையும் விண்ணுலகையும் அளந்தபின்பு தன் விபூதிகள் அனைத்தையும் ஒடுக்கிக்கொண்டு சிறிய வாமன ரூபம் கொண்டார்.

அனைத்து லோகபாலர்களும் பகவானை வணங்கினர்.
அப்போது கரடி அரசனான ஜாம்பவான் பேரிகையை முழங்கிக்கொண்டு காற்று வேகத்தில் எண்டிசைகளிலும் சென்று பகவானின் மங்களமான லீலைகளை அறிவித்தார்.

மூன்றடி நிலம் வேண்டி வந்த அந்தணச் சிறுவன், தம் அரசனை ஏமாற்றி மூவுலகையும் பிடுங்கிக்கொண்டானே என்று அசுரர்கள் கோபத்துடன் பேசினர்.

எப்போதும் ஸத்தியம் பேசுபவர் நம் அரசர். வேள்வி தீக்ஷை வேறு. அந்தணர்களிடம் அன்பு கொண்டவர். வாக்குத் தவறமாட்டார். எனவே அவரால் ஒன்றும் செய்ய இயலாது. நாமே இவரைக் கொல்வோம். அதுதான் நம் அரசர்க்குச் செய்யும் சேவை என்று கூறிக்கொண்டு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வாமனரை நோக்கி ஓடினர்.

விஷ்ணு பார்ஷதர்கள் சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்தனர்.
பத்தாயிரம் யானை பலம் கொண்ட நந்தன், சுநந்தன், ஜயன், விஜயன், ப்ரபலன், பலன், குமுதன், குமுதாக்ஷன், விஷ்வக்சேனர், கருடன், ஜயந்தன், ச்ருததேவன், புஷ்பதத்தன் , ஸாத்வதன் ஆகிய விஷ்ணு பார்ஷதர்கள் அசுரர்களைக் கொல்லத் தலைப்பட்டனர்.

தன் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்ட பலி அவர்களைத் தடுத்தான்.
விப்ரசித்தன், ராகு, நேமி ஆகிய அசுரர்களை அழைத்து, காலம் நமக்கு சாதகமாக இல்லை. அமைதியாக இருங்கள். சண்டை வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பினான் பலி.

அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்ப துன்பங்களைச் சரியாகத் தரும் காலதேவதையான பகவானை ஒருவரும் வெற்றி கொள்ள முடியாது.

படை, பலம், யோசனை, புத்தி, மதில்கள், மந்திரங்கள், மூலிகைகள், ஸாம தான பேத தண்டம் போன்ற முறைகள் எதனாலும் காலத்தை வெல்ல இயலாது.

முன்பு காலம் நமக்கு அனுகூலமாய் இருந்தது. அப்போது நாம் பலமுறை தேவர்களை வென்றோம். இப்போது அவ்வாறாக இல்லை. தெய்வம் நமக்கு அனுகூலமாகும் சமயம் வரும்போது நாம் மீண்டும் வெல்வோம். அதுவரை காலத்தை எதிர் நோக்குங்கள் என்றான்.

அசுரர்கள் மஹாபலி கூறியதைக் கேட்டு ரஸாதலம் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, May 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 258

வாமனராய் இருந்த பகவான் வானுயர வளர்ந்தார்.

அவரது ரூபத்திலேயே ஈரேழு பதினான்கு லோகங்களையும் அவற்றில் வாழ்பவர்களையும் கண்டான் பலி.

பகவானின் உள்ளங்காலில் ரஸாதலம், திருவடிகளில் பூவுலகையும், முழங்கால்களில் மலைகளையும், முட்டிக்காலில் பறவைக்கூட்டங்களையும், தொடைகளில் மருத்கணங்களையும் கண்டான்.

ஆடைகளில் ஸந்த்யா தேவியையும், மறைவிடங்களில் ப்ரஜாபதிகளையும், பின்புறம் தன்னையும், அசுரக் கூட்டங்களையும், தொப்புளில் விண்வெளியையும், வயிற்றினுள் ஏழு பெருங்கடல்களையும், திருமார்பில் நக்ஷத்ரக் கூட்டங்களையும் கண்டான்.

ஹ்ருதயத்தில் அறக்கடவுளையும், மார்புத்தடத்தில் சத்யத்தையும், மனத்தில் சந்திரனையும், திருமார்பில் தாமரை மலரேந்திய மஹாலக்ஷ்மியையும், கழுத்தில் ஸாம வேதத்தையும் மற்ற எழுத்துக்களையும் கண்டான்.

கரங்களில் இந்திரன், காதுகளில் திசைகள், தலையில் ஸ்வர்கம், கேசங்களில் மேகக்கூட்டங்கள், மூக்கில் வாயு, கண்களில் சூரியன், வாயில் அக்னி ஆகியவற்றைக் கண்டான்.

திருவாக்கில் மூன்று வேதங்களும், நாக்கில் வருணனையும், புருவங்களில் விதி நிஷேதங்களையும், இமைகளில் பகலிரவுகளையும், நெற்றியில் கோப தேவதையையும், கீழுதட்டில் பேராசையின் தேவதையையும் பார்த்தான்.

பகவானின் தோலில் மன்மதனும், முதுகில் அதர்ம தேவதையும், திருவடியின் அடியில் வேள்விகளும், நிழலில் எமதர்மயனும், புன்சிரிப்பில் மாயையும், உரோமங்களில் மூலிகைகளும் காணப்பெற்றான்.

பகவானின் நரம்புகளில் நதிகள், நகங்களில் கற்கள், புத்தியில் ப்ரும்மதேவர், ப்ராணனில் தேவரிஷிகள், திருமேனியில் அசையும் அசையா அனைத்து ஜீவராசிகள் ஆகியவற்றைக் கண்டான்.

அதைக் கண்டு அனைவரும் பயந்துபோயினர். அப்போது ஒளி படைத்த சுதர்சனம், இடிபோல் நாணொலி செய்யும் சார்ங்கம், நீருண்ட மேகம் போன்ற பாஞ்சஜன்யம், மிகுந்த வேகம்‌ கொண்ட கௌமோதகீ எனும் கதை, கூர்மையான நந்தகி எனும் வாள் ஆகியவை பகவானுக்கு சேவை செய்ய அங்கு வந்தன.

திருமுடியில் திருமகுடம், தோள்வளைகள், காதுகளில் குண்டலங்கள், திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் எனும்‌மரு, தோள்களில் ஐந்து வித மலர்கள் கொண்ட வனமாலை, அரையில் பீதாம்பரம், இடுப்பில் இரத்தின ஒட்டியாணம் ஆகியவற்றுடன் அழகின் எல்லையாக பகவான் ஒளிர்ந்தார்.

அந்த திரிவிக்ரம பகவான் தன் ஒரு காலால் பூமி முதலான அனைத்து உலகங்களையும் அளந்தார். இன்னொரு அடியால் விண்ணையும், மேலுலகங்களையும் அளந்தார். அவரது திருவடி ஸ்வர்கதைத் தாண்டி, மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம் அனைத்தையும் தாண்டி, ஸத்யலோகம் வரை சென்றது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, May 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 257

தானம் கொடுக்கப்போன பலியை அசுர குருவான சுக்ராசார்யார் தடுத்தார். குரு சொல்வதைக் கேட்டு பலி மறுமொழி ஏதும் கூறாமல் சற்று நேரம் அமைதியாகச் சிந்தித்தான். பின்னர் கூறலானான்.

குருவே! தங்களுக்கு வணக்கம். நீங்கள் கூறியதனைத்தும் உண்மைதான். ஆனால், மஹாத்மாவான ப்ரஹலாதனின் பேரனாகிய நான், தானம் தருவதாக வாக்களித்துப் பின் எப்படி வஞ்சகனைப் போல் மறுக்க இயலும்?

பொய்யைக் காட்டிலும் பெரிய அதர்மம் இல்லை. வஞ்சக எண்ணத்துடன் பொய் சொல்பவனைத் தவிர மீதி அனைத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்று பூமாதேவியே கூறுகிறாள்.

கொடுத்த வாக்கை மீறுவதற்கே பயப்படுகிறேன். நரகத்திற்கோ, துன்பத்திற்கோ, அரச பதவி பறிபோகுமென்றோ, மரணம் நேருமென்றோ கூட அஞ்சவில்லை.

எப்படி இருந்தாலும் பணம் சொத்துக்கள் அனைத்துமே மரணத்தின்போது நீங்கத்தான் போகின்றன. அதை நான் உயிருடன் இருக்கும்போதே தானமாகக் கொடுப்பதில் என்ன தவறு? அப்படி தானம் கொடுப்பதால், ஒரு அந்தணனை மகிழ்விக்கமுடியவில்லை என்றால், நான் அரசனாயிருந்து என்ன பயன்?

ததீசி, சிபி முதலியவர்கள் தானமாக நான் என்பதின் ஆதாரமான தங்கள் உயிரையே கொடுத்தார்கள். அப்படியிருக்க, எனது என்பதன் ஆதாரமான சொத்தைக் கொடுக்க எனக்கென்ன தயக்கம்?

புறமுதுகு காட்டாத பல அரசர்களின் ஆயுளைத்தான் காலம் விழுங்கியது. புகழை அல்ல. ஆனால், ஸத்பாத்திரம் கிடைத்தும், தானம் செய்பவர்கள் வெகு சிலரே.

ஒரு யாசகன் விரும்பியதைக் கொடுத்து அதனால் ஏழ்மை வந்தால், அது புகழையே தரும். தங்களைப் போன்ற அந்தணர்களுக்குக் கொடுப்பதால் எனக்கு நன்மையே ஏற்படும்.

எனவே நான் இந்த ப்ரும்மச்சாரியின் விருப்பத்தை நிறைவேற்றப்போகிறேன்.

வந்திருப்பது பகவானே என்றாலும் நிச்சயம் கொடுப்பேன். குற்றமற்ற என்னை அவர் கட்டினாலும், எதிர்வினையாற்றமாட்டேன்.

பகைவரே ஆனாலும், ஸர்வேஸ்வரனான பகவானே வந்து யாசிக்கும்போது கொடாமல் இருக்கலாகுமா? அவர் போர் செய்தால் என்னை வெல்ல முடியாதென்று அறிந்தே தானம் கேட்டு வந்திருக்கிறார். எனவே, இதுவும் எனக்குப் பெருமைதான். என்றான்.

குற்றுயிரும் கொலையுயிருமாக அடிபட்டு தன்னால் காப்பாற்றப்பட்ட தன் சீடன் மரியாதையின்றி, கட்டுப்பாட்டை இழந்து தன் சொல்லை மீறி நடக்க முற்பட்டதும், அவன் மீது தவறில்லை என்றறிந்தபோதும்
அறிவிலியான நீ விரைவில் உன் அனைத்து செல்வங்களையும் இழக்கக்கடவாய்
என்று அவனைச் சபித்தார் சுக்ராசார்யார்.

அதைக் கேட்டும் மனம் கலங்காமல், தானம் கொடுக்க முற்பட்டான். வாமனரைப் பூஜித்து, மூன்றடி மண்ணை தானம் செய்ய நன்னீரை எடுத்தான். அப்போது பலியின் மனைவி விந்த்யாவளி தீர்த்த பாத்திரத்தை வாங்கிக்கொண்டு வாமனருக்கு பாதத்தில் நீர் வார்த்தாள்.

அகில உலகையும் புனிதமாக்கும் அத்திருவடிகளைக் கழுவி அப்புனித நீரை பலி தன் தலையில் தெளித்துக்கொண்டு, மனைவிக்கும் தெளித்தான்.
அப்போது வானத்திலிருந்து தேவர்கள் அவன் மீது மலர்மாரி பொழிந்தனர்.

பகைவன் என்ற உண்மையை அறிந்தபின்னும் மூன்றடி மண்ணைக் கொடுப்பதாகச் சொல்லி மூவுலகையும்‌ கொடுத்தானே என்று வியந்தனர்.

அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம், பகவானின் முக்குண வடிவான வாமன வடிவம் வளரத் துவங்கியது.
பேருருவம் கொண்ட அத்திருமேனியில், மண், விண், திசைகள், ஸ்வர்கம், பாதாளம் கடல்கள், விலங்கினங்கள், பறவையினங்கள், மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைத்தும் தென்பட்டன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, May 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 256

யாகசாலைக்குள் நுழைந்த வாமன பகவானைப் பார்த்து பலி, வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட, வாமனரோ, தன் காலடியால் மூன்றடி மண் வேண்டும் என்றார்.

மேலும், மூன்றடி மண்ணால் த்ருப்தி அடையாதவன், ஒன்பது வர்ஷங்கள் கொண்ட தீவே கிடைத்தாலும் த்ருப்தி அடையமாட்டான். எனவே எனக்குத் தேவையானதை மட்டும் கொடுங்கள்.

இறையருளால் தன் முன்வினைக்கேற்ப கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு அடைபவன் இன்பமாக வாழ்கிறான். புலனடக்கமற்றவனுக்கு மகிழ்ச்சி என்பதே இல்லை. மனநிறைவு கொள்ளாதவன் பிறவிச் சுழலில் மாட்டிக்கொள்கிறான். கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்பவனுக்கு ப்ரும்மதேஜஸ் வளர்கிறது. எனவே எனக்கு வேண்டியதை மட்டும் கொடுத்தால் போதுமானது. என்றார் வாமனர்.

வேறு வழியின்றி பலி, தங்கள் விடுப்பப்படியே ஆகட்டும் என்று சொல்லி, தானம் கொடுக்க தீர்த்த பாத்திரத்தை எடுத்தான்.

முக்காலமும் உணர்ந்த சுக்ராசார்யார், வாமனராய் வந்தவர் மஹாவிஷ்ணுவே என்பதை உணர்ந்தார். அவரது எண்ணத்தை அறிந்து, பலியைப் பார்த்துக் கூறினார்.

அரசனே! இந்த வாமன மூர்த்தி மஹாவிஷ்ணுவே தான். தேவர்களது விருப்பத்தை நிறைவு செய்ய வந்திருக்கிறார். உனக்குக் கேடு வரப்போவதை அறியாமல், தானமளிப்பதாக வாக்களித்துவிட்டாய்.

உன் செயலால் அசுரர்களுக்கு பெரும் தீங்கு நேரும். மாயையால் ப்ரும்மச்சாரிபோல் வந்து நிற்கும் இந்த நாராயணன், உன் அரசு, பதவி, செல்வம், புகழ், அனைத்தையும் பறித்து இந்திரனுக்குக் கொடுக்கப் போகிறார். மூன்றடிகளால் உலகனைத்தையும் அளந்துவிடுவார். எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் நீயும் உன் குலமும் எங்கு எப்படி வாழ இயலும்?

ஈரடிகளால் வானுலகையும், பூமியையும் அளந்தால், மூன்றாவது அடிக்கு நீ எங்கே போவாய்? வாக்குத் தவறினால் உனக்கு நரகம் கிடைக்கும். தானம் செய்தபின், வாழ்க்கை நடத்த ஏதுமில்லையெனில், அந்த தானத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.

வாழ்க்கை நடத்த உதவுவதற்குத்தான் தானமும் பரோபகாரமும். எவன் தன் செல்வத்தை தர்மம், புகழ், செல்வத்தைப் பெருக்குவதற்கு, தினசரி வாழ்க்கை, மற்றும் சுற்றத்தார்க்கு என ஐவகையாகப் பிரித்து வாழ்கிறானோ அவனே இம்மையிலும் மறுமையிலும் சுகமாய் வாழ்வான்.

தானமளிப்பதாகச் சொன்னதை அளிக்காவிட்டால் நரகம் வரும் என்று அஞ்சாதே. பெண்களை மகிழ்விக்கவும், வேடிக்கைக்காகவும், திருமணத்தைத் தடையின்றி முடிக்கவும், தன் உயிர்க்குத் துன்பம் நேரும்போதும், பசுக்களுக்கும், அந்தணர்க்கும் நன்மை பயக்கவும், பிற உயிரைக் காக்கவும் கூறப்படும் பொய்கள் தவறாகா. அவை நிந்திக்கத் தக்கவையல்ல. என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், சுக்ராச்சார்யார் அசுர குருவானாலும் ஞானத்தினால் பகவானை உணர்ந்திருந்தார்.

மேலும், அசுரகுருவே ஆனாலும், குரு என்பவரது ஒரே நோக்கம், சீடனுக்கு இறையைக் காட்டுவது‌.
வந்திருப்பவன் பகவான் என்று தெளிவாக பலிக்கு எடுத்துரைத்தார் சுக்ராசார்யார்.

இன்னொரு சுவாரசியம் என்னவெனில்,
யாருக்கும் தெரியாமல், சுக்ராசார்யாருக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம் என்றால்,
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறிதளவு செல்வம் இருப்பினும் அது மஹாலக்ஷ்மி கடாக்ஷம் என்று கொண்டாடுகின்றானர். அந்த மஹாலக்ஷ்மியோ பகவான் நாராயணனின் பாதமே கதி என்று அமர்ந்திருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே காலடியில் இருக்கும்போது, பகவான் யாரிடமோ போய் தேஹி என்று கையை நீட்டி தானம் வாங்குகிறார். எனில், அவர் யாரென்று பார்க்க தாயாருக்கு ஆசை வந்து விட்டதாம்.

மேலும், தன் கணவர் கேட்டு அவன் இல்லையென்று சொல்லிவிட்டால் அவமானம் நேருமே என்று தானம் கொடுப்பவரை தான் ஒரு கடாக்ஷம் செய்வோம் என்று நினைத்தாளாம். எனவே பகவானின் மார்பில் வசிக்கும் தாயார், வாமனரின் மார்பை அலங்கரிக்கும் மான்தோலைச் சற்று விலக்கி எட்டிப் பார்த்தாளாம். அதை பார்த்த சுக்ராசார்யார், தாயார் ஹரியின் மார்பிலல்லவோ வசிப்பாள். எனவே வந்திருப்பவர் ஹரி என்று கண்டுகொண்டாராம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபாவங்களில் இவையும் சிலவே..

Friday, May 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 255

பலியின் யக்ஞசாலைக்குள் நுழைந்த வாமனரை பலி முறைப்படி பூஜித்து, யாது வேண்டுமெனக் கேட்டான். வாமன பகவான் பலியைப் பார்த்துக் கூறலானார்.

தாங்கள் கூறியவை அனைத்தும் தமக்குப் புகழ் சேர்ப்பவை. தமது குருவான, ப்ருகு முனிவரின் புதல்வரான சுக்ராசார்யாரின் புகழை வளர்க்கிறீர். தங்கள்ப்பாட்டனாரான ப்ரஹலாதனின் கட்டளைகளை மதிக்கிறீர்.

உங்கள் குலத்தில் இதுவரை, பேராசை கொண்டவர்களோ, கருமிகளோ பிறந்ததில்லை. தானம் தருவதாக வாக்களித்து பின் வாங்கிய வரும் இல்லை.

தானம் வேண்டும் யாசகனது தீனக்குரல் கேட்டு உதவாதவரும், போரின் அறைகூவல் கேட்டு பின் வாங்கியவரும் உமது வம்சத்திலேயே இல்லை.

ஹிரண்யாக்ஷன் கதையேந்தி தனியொருவனாக திக்விஜயம் சென்றான். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவனை பகவான் போரில் வென்றார். பின்னாளில் அவனது மனோபலத்தையும், உடல் வலிமையும் நினைத்துப் பார்த்த பகவான் தன் வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணவே இல்லை.

தம்பி கொல்லப்படதைக் கேட்ட ஹிரண்யகசிபு மிகவும் சினம் கொண்டு ஸ்ரீ ஹரியைக் கொல்ல எண்ணி வைகுண்டம் சென்றான். அவனைக் கண்ட பகவான், இவன் நாம் எங்கு சென்றாலும் பின் தொடர்வான். வெளிமுகமான விஷயங்களையே பார்க்கிறான். உள்முகமாக இவனது உள்ளத்திலேயே நுழைந்து விட்டால், இவனால் நம்மைக் காணமுடியாது. என்று எண்ணினார். தன்னை நுண்ணுருவாக்கிக்கொண்டு, தன்னை நோக்கி ஓடிவரும் ஹிரண்யகசிபுவின் சுவாசத்தில் கலந்து அவனது ஹ்ருதயத்தில் அமர்ந்தார்.

ஹிரண்ய கசிபு, பகவானை வைகுண்டத்தில் காணாமல், பின் எல்லா உலகங்களிலும் தேடினான். எங்கும் அவரைக் காணவில்லை. என் தம்பியைக் கொன்றவன் திரும்பிவர இயலாத உலகம் சென்றிருப்பானோ. பகை என்பது உடல் உள்ளவரைதானே. எனவே இனி ஹரியிடம் பகை வேண்டாம் என்று நிச்சயித்து வீடு திரும்பினான்.

உன் தந்தையும் ப்ரஹலாதனின் மகனுமான விரோசனன், அந்தணர்களிடம் பக்தி பூண்டவன். தேவர்கள் அந்தண வேடம் பூண்டு வந்து அவனது ஆயுளை தானமாக வேண்ட, அவர்கள் தேவர்கள் என்ற உண்மையை உணர்ந்த பின்னரும், தன் ஆயுளை அவர்களுக்குக் கொடுத்தான்.

அசுரகுல திலகனே! உங்கள்‌ முன்னோர்‌ கைக்கொண்டிருந்த நெறியையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். வேண்டுவதை நல்கும் பெருமனம் படைத்த தாங்கள் என் காலடிகளால் அளக்கப்பட்ட மூன்றடி நிலம் கொடுத்தால் போதுமானது.

நீங்கள் மூவுலகின் அரசனாயினும், பெருங்கொடையாளியாயினும், எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம். தனக்கு எவ்வளவு வேண்டுமோ, அதை மட்டும் தானமாகப் பெறுபவனே அறிவாளி. அப்போதுதான் யாசகம் வாங்கும் பிழையிலிருந்து ஒருவன் தப்பிக்க இயலும். என்றார்.

இதைக் கேட்டு பலியின் முகம் வாடியது.
அந்தணக் குழந்தையே! பெரியவர்கள் போல் பேசுகிறாய். ஆனால், இன்னும் குழந்தை புத்தி மாறவில்லை. நன்மை தீமைகளையும் அறியவில்லை. இதன் உட்கருத்து, குழந்தைபோல் தோற்றமளிக்கும் நீ பெரிய அறிவாளி. உன் நன்மை தீமைகளை அறியமாட்டாய். தனக்கென்று எதுவும் வேண்டமாட்டாய். என்பதாகும்.

நான் மூவுலகின் சக்ரவர்த்தி. ஒரு தீவையே வேண்டினாலும் தருவேன்‌. என் மனம் மகிழும்படி பேசிவிட்டு மூன்றடி மண் போதும் என்கிறாய். என்னிடம் யாசித்தபின், வேறொருவனிடம் யாசகம் பெற ஒருவன் கை நீட்டினால் அது எனக்கு இழுக்கு. உங்கள் வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
என்றான் பலி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, May 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 254

உபநயனம் செய்விக்கப்பட்டதும், பகவான் வாமனர் ஸமிதாதானம் செய்தார். பின்னர் பலிச் சக்ரவர்த்தி நடத்தும் அஸ்வமேத யாகத்திற்குச் செல்லத் திட்டமிட்டார்.

அவர் மெல்லிய அடிகள் வைத்து நடந்தபோதிலும், அவரது கனம் தாங்காமல் பூமி நெளிந்தது.

நர்மதையின் வடகரையில் இருக்கும் ப்ருகுகச்சம் என்ற புண்ய ஸ்தலத்தில் யாகம் நடந்து கொண்டிருந்தது. வாமனர் அவ்வேள்விச் சாலையில் ப்ரவேசித்ததும், சூரியனே கீழே இறங்கி வந்தாற்போல் இருந்தது.

அவரது ஒளியில் அங்கிருந்த ரித்விக்குகள், பெரியோர்கள், மற்றும் பலி ஆகியோரது தேஜஸ் மங்கிற்று.
இவர் யாராக இருக்கும்? சூரியனோ, அக்னியே உருவெடுத்து வந்தாரோ, ஸனத்குமாரரோ என்று சபையோர் குழம்பினர்.

சுக்ராசாரியார் தன் சீடர்களுடன் விவாதம் செய் கொண்டிருந்த போது, பகவான் கையில் குடை, தண்டம், மற்றும் கமண்டலத்துடன் வேள்விச் சாலையின் மத்தியில் வந்து நின்றார்.

அரையில்‌ முஞ்சிப்புல், பூணூல் போல் அணியப்பட்ட மான்தோல், தலையில் சடை, வாமன மூர்த்தியாக வேடமிட்டு வந்த பகவான் ஸ்ரீ ஹரியைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் தத்தம் ஆசனங்களிலிருந்து எழுந்தனர். தங்களது சீடர்கள் சூழ ரித்விக்குகள் அவரை வரவேற்றனர்.

குள்ளமான உருவத்திற்கேற்ற அழகான அவயவங்கள் பார்க்கத் தெவிட்டாதவை. அவரைக் கண்டு மனம் மகிழ்ந்த பலி அவருக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்தான்.
அவரை முறைப்படி உபசரித்து பூஜித்தான். அவரது ஸ்ரீ பாத தீர்த்தத்தை சிரசில் தெளித்துக்கொண்டான்.

பிறகு அவரைப் பார்த்துக் கூறலானான்.
அந்தணச் சிறுவரே! உங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? ப்ரும்மரிஷிகளின் தவமனைத்தும் திரண்டு உருக்கொண்டதைப் போல் இருக்கிறீர்.

தாங்கள் என் குடிலுக்கு வந்ததால் என் முன்னோர்கள் மகிழ்ந்தனர். எமது வம்சமே பாவனமாயிற்று. இவ்வேள்வியின் பயன் கிடைத்துவிட்டதாய் உணர்கிறேன். தங்களது திவ்ய மங்கள திருமேனியால் இந்த பூமி தூய்மையடைந்தது.

என்னிடம் எதையாவது பெற விரும்பி வந்தீரா? நீங்கள் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் தரச் சித்தமாய் இருக்கிறேன். நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பசுக்களா? பொன்னா? வாசம் செய்ய வீடா? உணவா? திருமணம் செய்ய பெண் வேண்டுமா? கிராமங்களா? குதிரைகளா? தேர்களா? எது வேண்டுமோ கேளுங்கள்.

என்று விநயத்துடன் கூறினான் பலிச் சக்ரவர்த்தி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..