ஸத்யவிரதன் கைக்குள் கிடைத்த குட்டிமீனின் வேண்டுகோளுக்கிணங்க அதைக் கமண்டல நீரில் இட்டு இருப்பிடம் கொண்டு வந்தான். கமண்டலத்தை அப்படியே வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனான்.
அதே இரவில் அந்த மீன் கமண்டல நீரினுள் பெரிதாக வளர்ந்தது. அதனால் கமண்டலத்தினுள் இருக்க முடியவில்லை. அது அரசனைப் பார்த்துக் கூறிற்று.
மன்னா! இந்தக் கமண்டலத்தினுள் என்னால் வளர முடியவில்லை. நான் வளர எனக்கு ஒரு நல்ல பெரிய இடம் வேண்டும் என்றது.
ஒரே இரவில் விரலளவு இருந்த மீன் கையளவு வளர்ந்ததைப் பார்த்து யோசித்துக்கொண்டே மீனைக் கையால் எடுத்து அங்கிருந்த ஒரு பெரிய தொட்டிக்குள் விட்டான் சத்யவிரதன்.
ஒரு முஹூர்த்த காலம் சென்றதும் வந்து பார்த்தால் மீன் தொட்டி முழுமைக்கும் வளர்ந்து திரும்பக்கூட இடமின்றித் தவித்தது.
மன்னா! நான் உன்னிடம் அடைக்கலமாக வந்துள்ளேன். இந்தத் தொட்டி நான் வாழப் போதுமானதாக இல்லை. எனக்கு இன்னும் பெரிய இடம் வேண்டும் என்றது.
ஸத்யவிரதனுக்கு மீனின் வளர்ச்சி பெரிய புதிராக இருந்தபோதிலும், அடைக்கலமாக வந்த மீன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் அதை எடுத்து ஏரியில் விட ஏற்பாடு செய்தான். ஏரியில் விட்ட சில மணி நேரங்களில் அந்த மீன் ப்ரும்மாண்டமாக வளர்ந்தது.
மன்னா! நான் நீர்வாழி பிராணி. இந்த ஏரியும் எனக்குப் போதவில்லை. நீர் என்னைக் காக்க விரும்பினால், நீர் வற்றாத பெரிய ஏரியில் என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்றது.
மீன் இவ்வாறு கூறவே ஸத்யவிரதன் மிகவும் குழப்பத்துடனும், பயத்துடனும் அம்மீனை நாட்டிலுள்ள ஒவ்வொரு நீர்நிலையாகக் கொண்டு விட்டான். ஒரு கட்டத்தில் மீனை விடுவதற்கு அதை விடப் பெரிய நீர்நிலை இல்லை என்ற நிலையில் கடலில் கொண்டு போய் விட்டான்.
கடலில் விட்டதும் மீன், கடலில் வாழும் திமிங்கிலங்கள் என்னைக் கொன்று விடும். என்னைக் கடலில் விட்டுச் செல்லாதீர்கள் என்றது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment