உபநயனம் செய்விக்கப்பட்டதும், பகவான் வாமனர் ஸமிதாதானம் செய்தார். பின்னர் பலிச் சக்ரவர்த்தி நடத்தும் அஸ்வமேத யாகத்திற்குச் செல்லத் திட்டமிட்டார்.
அவர் மெல்லிய அடிகள் வைத்து நடந்தபோதிலும், அவரது கனம் தாங்காமல் பூமி நெளிந்தது.
நர்மதையின் வடகரையில் இருக்கும் ப்ருகுகச்சம் என்ற புண்ய ஸ்தலத்தில் யாகம் நடந்து கொண்டிருந்தது. வாமனர் அவ்வேள்விச் சாலையில் ப்ரவேசித்ததும், சூரியனே கீழே இறங்கி வந்தாற்போல் இருந்தது.
அவரது ஒளியில் அங்கிருந்த ரித்விக்குகள், பெரியோர்கள், மற்றும் பலி ஆகியோரது தேஜஸ் மங்கிற்று.
இவர் யாராக இருக்கும்? சூரியனோ, அக்னியே உருவெடுத்து வந்தாரோ, ஸனத்குமாரரோ என்று சபையோர் குழம்பினர்.
சுக்ராசாரியார் தன் சீடர்களுடன் விவாதம் செய் கொண்டிருந்த போது, பகவான் கையில் குடை, தண்டம், மற்றும் கமண்டலத்துடன் வேள்விச் சாலையின் மத்தியில் வந்து நின்றார்.
அரையில் முஞ்சிப்புல், பூணூல் போல் அணியப்பட்ட மான்தோல், தலையில் சடை, வாமன மூர்த்தியாக வேடமிட்டு வந்த பகவான் ஸ்ரீ ஹரியைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் தத்தம் ஆசனங்களிலிருந்து எழுந்தனர். தங்களது சீடர்கள் சூழ ரித்விக்குகள் அவரை வரவேற்றனர்.
குள்ளமான உருவத்திற்கேற்ற அழகான அவயவங்கள் பார்க்கத் தெவிட்டாதவை. அவரைக் கண்டு மனம் மகிழ்ந்த பலி அவருக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்தான்.
அவரை முறைப்படி உபசரித்து பூஜித்தான். அவரது ஸ்ரீ பாத தீர்த்தத்தை சிரசில் தெளித்துக்கொண்டான்.
பிறகு அவரைப் பார்த்துக் கூறலானான்.
அந்தணச் சிறுவரே! உங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? ப்ரும்மரிஷிகளின் தவமனைத்தும் திரண்டு உருக்கொண்டதைப் போல் இருக்கிறீர்.
தாங்கள் என் குடிலுக்கு வந்ததால் என் முன்னோர்கள் மகிழ்ந்தனர். எமது வம்சமே பாவனமாயிற்று. இவ்வேள்வியின் பயன் கிடைத்துவிட்டதாய் உணர்கிறேன். தங்களது திவ்ய மங்கள திருமேனியால் இந்த பூமி தூய்மையடைந்தது.
என்னிடம் எதையாவது பெற விரும்பி வந்தீரா? நீங்கள் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் தரச் சித்தமாய் இருக்கிறேன். நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
பசுக்களா? பொன்னா? வாசம் செய்ய வீடா? உணவா? திருமணம் செய்ய பெண் வேண்டுமா? கிராமங்களா? குதிரைகளா? தேர்களா? எது வேண்டுமோ கேளுங்கள்.
என்று விநயத்துடன் கூறினான் பலிச் சக்ரவர்த்தி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment