வாமனராய் இருந்த பகவான் வானுயர வளர்ந்தார்.
அவரது ரூபத்திலேயே ஈரேழு பதினான்கு லோகங்களையும் அவற்றில் வாழ்பவர்களையும் கண்டான் பலி.
பகவானின் உள்ளங்காலில் ரஸாதலம், திருவடிகளில் பூவுலகையும், முழங்கால்களில் மலைகளையும், முட்டிக்காலில் பறவைக்கூட்டங்களையும், தொடைகளில் மருத்கணங்களையும் கண்டான்.
ஆடைகளில் ஸந்த்யா தேவியையும், மறைவிடங்களில் ப்ரஜாபதிகளையும், பின்புறம் தன்னையும், அசுரக் கூட்டங்களையும், தொப்புளில் விண்வெளியையும், வயிற்றினுள் ஏழு பெருங்கடல்களையும், திருமார்பில் நக்ஷத்ரக் கூட்டங்களையும் கண்டான்.
ஹ்ருதயத்தில் அறக்கடவுளையும், மார்புத்தடத்தில் சத்யத்தையும், மனத்தில் சந்திரனையும், திருமார்பில் தாமரை மலரேந்திய மஹாலக்ஷ்மியையும், கழுத்தில் ஸாம வேதத்தையும் மற்ற எழுத்துக்களையும் கண்டான்.
கரங்களில் இந்திரன், காதுகளில் திசைகள், தலையில் ஸ்வர்கம், கேசங்களில் மேகக்கூட்டங்கள், மூக்கில் வாயு, கண்களில் சூரியன், வாயில் அக்னி ஆகியவற்றைக் கண்டான்.
திருவாக்கில் மூன்று வேதங்களும், நாக்கில் வருணனையும், புருவங்களில் விதி நிஷேதங்களையும், இமைகளில் பகலிரவுகளையும், நெற்றியில் கோப தேவதையையும், கீழுதட்டில் பேராசையின் தேவதையையும் பார்த்தான்.
பகவானின் தோலில் மன்மதனும், முதுகில் அதர்ம தேவதையும், திருவடியின் அடியில் வேள்விகளும், நிழலில் எமதர்மயனும், புன்சிரிப்பில் மாயையும், உரோமங்களில் மூலிகைகளும் காணப்பெற்றான்.
பகவானின் நரம்புகளில் நதிகள், நகங்களில் கற்கள், புத்தியில் ப்ரும்மதேவர், ப்ராணனில் தேவரிஷிகள், திருமேனியில் அசையும் அசையா அனைத்து ஜீவராசிகள் ஆகியவற்றைக் கண்டான்.
அதைக் கண்டு அனைவரும் பயந்துபோயினர். அப்போது ஒளி படைத்த சுதர்சனம், இடிபோல் நாணொலி செய்யும் சார்ங்கம், நீருண்ட மேகம் போன்ற பாஞ்சஜன்யம், மிகுந்த வேகம் கொண்ட கௌமோதகீ எனும் கதை, கூர்மையான நந்தகி எனும் வாள் ஆகியவை பகவானுக்கு சேவை செய்ய அங்கு வந்தன.
திருமுடியில் திருமகுடம், தோள்வளைகள், காதுகளில் குண்டலங்கள், திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் எனும்மரு, தோள்களில் ஐந்து வித மலர்கள் கொண்ட வனமாலை, அரையில் பீதாம்பரம், இடுப்பில் இரத்தின ஒட்டியாணம் ஆகியவற்றுடன் அழகின் எல்லையாக பகவான் ஒளிர்ந்தார்.
அந்த திரிவிக்ரம பகவான் தன் ஒரு காலால் பூமி முதலான அனைத்து உலகங்களையும் அளந்தார். இன்னொரு அடியால் விண்ணையும், மேலுலகங்களையும் அளந்தார். அவரது திருவடி ஸ்வர்கதைத் தாண்டி, மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம் அனைத்தையும் தாண்டி, ஸத்யலோகம் வரை சென்றது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment