முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டு பல காலமாகியும், யானையால் தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம், முதலையாவது வெற்றி பெற்றதா என்றால் அதுவுமில்லை.
உற்றாரும் கைவிட்ட நிலையில் பூர்வ ஜென்ம வாசனையினால் கஜேந்திரன் இதிலிருந்து விடுபட என்ன வழி என்று யோசித்து, இறைவனைச் சரணடையலாம் என்று முடிவு செய்தது.
எந்த இறைவனை அழைப்பது, அவர் பெயர் என்ன என்பதை எல்லாம் யோசிக்காமல் பொதுவாக, உலகைப் படைத்து காத்து அழிக்கும் ப்ரும்ம ஸ்வரூபத்தை அழைத்தது.
மிகவும் அருமையான இந்த துதியை இயன்றவரை அனுபவிப்போம்.
முற்பிறவியில் இறைவனைப் பூஜித்தபோது செய்த துதிகளின் வாசனையினால் இப்போது துதிக்கலாயிற்று.
சித்ஸ்வரூபனான பகவானாலேயே இவ்வுடல் சைதன்யம் உள்ளதாகிறது. காரணமாகவும், காரணத்திற்கு ஆட்படும் ப்ரக்ருதியாகவும் இருக்கும் ப்ரணவ ரூபமான இறைவனை த்யானிக்கிறேன்.
இந்த ப்ரபஞ்சம் முழுவதும் இறைவனிடம் நிலைத்திருக்கிறது. அவரை காரணமாக அதிஷ்டானமாக வைத்தே ப்ரபஞ்சம் உருவானது. அவரே ப்ரபஞ்சத்தைப் படைத்து, தானே அதில் விளங்கவும் செய்கிறார். ஆனால், இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். அந்த இறைவனைச் சரணடைகிறேன்.
இந்த ப்ரபஞ்சம் சில சமயம் கண்ணுக்குப் புலனாகிறது. ப்ரளய காலத்தில் இறைவனிடம் ஒடுங்குகிறது. எப்போதும் குறைவற்றவர். அவர் இருப்பதற்கு வேறு காரணம் இல்லை. அணுவிற்கு அணுவானவர். மிகவும் உயர்ந்தவர். அந்த இறைவன் என்னைக் காக்கட்டும்.
ப்ரளய சமயத்தில் எண்டிசை பாலர்கள் உள்பட பஞ்ச பூதங்கள், நிமித்த காரணங்கள் அனைத்தும் அழிந்து எங்கும் அடர்ந்த இருள் நிரம்புகிறது. அப்போதும் எவர் ஒருவர் தானாகவே ப்ரகாசிக்கிறாரோ அந்த இறைவன் என்னைக் காப்பாற்றட்டும்.
இறைவனது திருவிளையாடல்களின் ரகசியம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு நடிகன் போல் பற்பல வேடங்களில் தோன்றுகிறார். தேவர்களும் முனிவர்களும்கூட அவரை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவரது குணங்களையும், புகழையும் முழுமையாகச் சொல்லும் சக்தி ஒருவருக்கும் இல்லை. அத்தகைய இறைவன் என்னைக் காக்கட்டும்.
அவருடைய திவ்ய தரிசனத்திற்கு ஆசைப்பட்டு சான்றோர்கள் அனைத்து பற்றுக்களையும் விடுகிறார்கள். வனம் சென்று கடுமையான விரதங்களை மேற்கொள்கிறார்கள். அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு பாராட்டுகிறார்கள். அந்த இறைவனே எனக்குத் துணை. அவரே எனது புகலிடம்.
இறைவனுக்குப் பிறப்பு, செயல், பெயர், வடிவம் எதுவும் இல்லை. குணமும் குற்றங்களும் இல்லை. அனைத்தும் தேவைக்கேற்ப மாயையைக் கொண்டு அவ்வப்போது அவர் ஏற்பவை. அந்த இறைவனைச் சரணடைகிறேன்.
இறைவன் உருவமற்றவர். பரமாத்மா. அளப்பரிய சக்தி படைத்தவர். பலப்பல உருவங்களை ஏற்பவர். அனைத்து செல்வங்களும் நிரம்பியவர். அவரை மீண்டும் மீண்டும் வணக்குகிறேன்.
வேறொரு துணையின்றி தானே ஒளிர்பவர். மற்ற அனைத்தும் அவராலேயே ஒளிர்கின்றன. சகல ஜீவராசிகளையும் தன் ஆளுமைக்குள் கொண்டவர். மனம், வாக்கு, சித்தம் ஆகியவற்றுக்கு எட்டாதவர். அந்த பகவானை சரணடைகிறேன்.
அனைத்து கர்மங்களையும் பற்றற்று செய்து முடித்தபின், உள்ளத்தை தூய்மையாக்கி இறைவனுக்கே அர்ப்பணிப்பவன் அவரையே அடைகிறான். அவர் எவ்வித தளைகளும் அற்றவர். சுதந்திரமானவர். ஞானஸ்வரூபர். அவரே முக்தியின்பத்தை அளிப்பவர். அவரைச் சரணடைகிறேன்.
ஸத்வ குணத்தை ஏற்று சாந்தராகவும், ரஜோகுணம் ஏற்று பயங்கர ரூபியாகவும், தமோ குணத்தை ஏற்று மூடன் போலும் உண்மையில் எந்த குணவேறுபாடுகள் அற்றவரும், எங்கும் நீக்கமற நிறைந்தவரும், சைதன்யம் நிரம்பியவரும் சமமானவருமான இறைவனுக்கு நமஸ்காரம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment