பரீக்ஷித், ஸுகமஹரிஷியைப் பார்த்து,
கஜேந்திரன் என்னும் யானையா? அதை பகவான் காத்தது எவ்வாறு? என்று வினவினான்.
சுகர் மிகவும் மகிழ்ந்து பரீக்ஷித்தைக் கொண்டாடிக் கூறத் துவங்கினார்.
திருப்பாற்கடலின் மத்தியில் பத்தாயிரம் யோஜனை உயரமுள்ள திரிகூடம் என்னும் பெரிய மலை உள்ளது. அதன் மத்தியில் வெள்ளி, இரும்பு, தங்கம் ஆகியவற்றிலானால் ஆன மூன்று பெரிய சிகரங்கள் உள்ளன. அப்பகுதி மிக மிகச் செழிப்பாக விளங்கியது.
நீரோடைகளும், குளங்களும், பற்பல தோட்டங்களும், பல்வகையான மிருகங்களும் நிரம்பிய பகுதி. சித்த சாரண கந்தர்வ வித்யாதரர்கள், நாகர்கள், கின்னரர்கள் ஆகியோர் மகிழ்ந்து அவ்வனங்களில் ஆடிப் பாடினர்.
பூக்களையும் பழங்களையும் வாரி இறைக்கும் மரங்களும், செடிகொடிகளும் அங்கு நிறைந்திருந்தன. அங்கு மலர்களால் நிரம்பிய அழகிய பெரிய தடாகம் இருந்தது.
அம்மலையிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில், கஜேந்திரன் என்னும் ஆண்யானை தன் பிடிகளுடன் சுற்றித் திரிந்துவந்தது. அநேக யானைகளடங்கிய பெரிய கூட்டத்தின் தலைவனாக அந்த யானை விளங்கியது.
இந்த கஜேந்திரனின் தயவால், பல எளிய மிருகங்கள் சிங்கம் முதலியவற்றின் பயமின்றி சுற்றித் திரிந்தன.
எப்போதும் பல யானைகளுடன் விளங்கியது கஜேந்திரன். ஒரு சமயம், வேனில் காலத்தில் நீரின்றி தாகத்தால் அந்த யானைகள் தவித்தன. நீரைத் தேடி அலையும் சமயம், தாமரை மலர்களின் நறுமணத்தைக் கொண்டு அருகில் தடாகம் இருப்பதை ஊகித்தது கஜேந்திரன். விரைவில் அந்த தடாகத்தை அடைந்தது. இனிமையான நீர் நிரம்பிய அந்த நீர்நிலையைக் கண்டதும் அனைத்து யானைகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தன.
கஜேந்திரன் முதலில் நீரில் இறங்கிற்று. துதிக்கையால் தன் மேல் நீரை வாரியிறைத்துக்கொண்டு, நீர் அருந்தியது. மற்ற யானைகள் மீதும் நீரை வாரியடித்தது.
ஒரு குடும்பத்தலைவன் போல் தன் கன்றுகளையும், பெண்யானைகளையும் குளிப்பாட்டி, நீரூட்டியது.
தடாகம் யானைகளால் கலங்குவதைக் கண்டு அதில் வசித்து வந்த முதலை மிகுந்த சினம் கொண்டது. முன்வினைப்பயனால், கஜேந்திரனின் காலைப் பற்றியது.
ஆபத்தை அறியாமல் விளையாடிக்கொண்டிருந்த யானையரசன் நிலைகுலைந்து போயிற்று. தன் காலை விடுவித்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.
எவ்வளவு போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து தன் காலை விடுவித்துக்கொள்ள இயலவில்லை.
முதலை இன்னும் பலமாக யானையை நீரினுள் இழுக்கலாயிற்று. மற்ற யானைகள் மிகவும் வருத்தமுற்று பிளிறிக்கொண்டு, தங்கள் தலைவனை வெளியில் இழுக்க எண்ணிப் பிடித்திழுத்தன. ஆனால், விடுவிக்க முடியவில்லை.
முதலை நீருக்குள் பலம் பொருந்தியதாகவும், யானை நீருக்கு வெளியில் பலமானதாகவும் இருந்தது.
வெகு நாள்களாகியும் கஜேந்திரனை விடுவிக்க இயலாததால், மற்ற யானைகள், முயற்சியைக் கைவிட்டு தங்களுக்கும் வேறொரு தலைவனை நியமித்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றன.
முதலையும், யானையுமாக ஆயிரம் வருடங்களுக்கு மேல் போராடியும், இருவருக்கும் வெற்றி கிட்டவில்லை.
கஜேந்திரன் உணவில்லாததாலும், தொடர் போராட்டத்தினாலும் உடல் வலுவிழந்து சோர்ந்தது. தான் காப்பற்றிய உறவினர்கள் நிர்கதியாக விட்டுப் பிரிந்ததில் மனமுடைந்து போயிருந்தது.
ப்ராண சங்கடத்தில் மாட்டிக்கொண்ட அந்த யானை யோசிக்கலாயிற்று.
இது விதிப் பயனே ஆகும். எவ்வளவோ காலமாக முயற்சி செய்தும் இதிலிருந்து விடுபட இயலவில்லை. என்னைக் காப்பவரும் எவரும் இல்லை. எனவே, நான் எல்லாம் வல்ல இறைவனைச் சரணடையவேண்டும். அவன் நிச்சயம் காத்தருள்வான். மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் அவனே அடைக்கலம். எனவே அந்த இறைவனைச் சரணடைவேன் என்று நினைத்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment