அனைத்திற்கும் தலைவரான இறைவனே எல்லா ஜீவன்களுக்கும் அறிபவராகவும், அறியப்படுபவராகவும், சாட்சியாகவும் விளங்குகிறார். தனக்குத் தானே காரணமானவர். பரிபூரணரான அவரை வணங்குகிறேன்.
பொறி புலன்களையும், அதற்கான விஷங்களையும் காண்பார். அவற்றைத் தூண்டுபவர். நிழல் போலிருக்கும் ப்ரபஞ்சம் தங்களை எப்போதும் உணர்த்துகிறது. அதாவது ப்ரதிபிம்பம் தெரிவதாலேயே பிம்பத்தின் இருப்பு நிச்சயமாகிறது.
அனைத்து பொருள்களிலும் அதன் இருப்பை விளக்கும் இறைவனை வணங்குகிறேன்.
இறைவனுக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எந்த ஒரு மாறுபாடும் இல்லை. பரிணாம மாற்றங்களும் இல்லை. அனைத்து நதிகளுக்கும் புகலிடம் கடல். அதுபோல், ஆகமங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முடிவானவர் இறைவனான தாங்களே. அடியார்களும் சான்றோர்களும் தங்களையே தஞ்சமடைகின்றனர். தங்களைப் பன்முறை வணங்குகிறேன்.
அரணிக்கட்டையில் நெருப்பு மறைந்திருப்பது போல், ஞான வடிவினை முக்குணங்களாலான மாயையால் மறைத்து வைத்திருக்கிறீர். முக்குணங்களின் ஏற்றத்தாழ்வினாலேயே பல படைப்புகளைப் படைக்கிறீர்கள். கர்மங்களைப் பற்றற்று செய்பவனுக்கு அனுபவமாக நீங்களே ப்ரகாசிக்கிறீர். அவ்வாறான இறைவனை வணங்குகிறேன்.
தங்களுக்குத் தளைகளே இல்லை. அனைவரையும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிப்பவர் தாங்களே. கருணையே உருவானவர். சோம்பேறித்தனமே இன்றி பக்தர்களைக் காப்பவர். அந்தர்யாமியான தங்களை வணங்குகிறேன்.
உடல், மனைவி, மக்கள், உற்றார், உறவினர், வீடு, வாசல், சொத்து ஆகியவற்றில் பற்று கொண்டவர்க்கு தங்களை அடைவது கடினம். ஏனெனில் தாங்கள் பற்றற்றவர். பற்றற்ற முனிவர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவர். ஸர்வேஸ்வரனான தங்களை வணங்குகிறேன்.
தம்மை நாடுபவர்க்கு அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை வழங்குகிறீர். அவர்கள் விரும்பாவிடினும் அனைத்து சுகங்களையும் அருள்பவர் தாங்களே. விஷ்ணுபார்ஷதர் போன்ற உருவமும் தருகிறீர். அந்த இறைவன் என்னைக் காக்கட்டும்.
இறைவனின் அடியார்கள் எல்லா நலன்களையும் தரும் தங்கள் கதையமுதத்தையே விரும்புகின்றனர். அவர்கள் முக்தியைக்கூட விரும்புவதில்லை.
அழிவற்றவர், அக்ஷர ப்ரும்மமானவர், அனைத்து வல்லமைகளும் பொருந்தியவர், இப்படித்தான் என நிச்சயித்துக் கூற இயலாதவர், அணுவிற்கும் அணுவானவர், பெரிதினும் பெரிதானவர், அருகிலேயே இருப்பவர், ஆனால் எட்டிப்பிடிக்க இயலாதவர், முழுமுதற் கடவுள், எல்லையற்றவர், நீக்கமற நிறைந்தவர். இத்தைகைய இறைவனை வணங்குகிறேன்.
இறைவனின் ஒரு கலையின் ஒரு சிறிய அம்சத்தைக் கொண்டு ப்ரும்மா முதலான தேவர்கள் படைக்கப் படுகின்றனர்.
இறைவன் யார்? தேவனா? அசுரனா? மனிதனா? விலங்கா? பெண்ணா? ஆணா? இரண்டுமற்றவரா? சாதாரண ஜீவனா? உலகியலுக்கெட்டாதவரா? ஸத்வம் முதலிய குணங்களா? அல்லது செயல்களா? செயலின் காரணங்களா? ஸத்தா? அஸத்தா? இவ்வாறு ஒவ்வொன்றாக இல்லை இல்லை என்று தள்ளினால், முடிவில் அனைத்தின் காரணமாக எது மிஞ்சுகிறதோ அதுவே இறைவன். அந்தப் பரமாத்மா என்னை இங்கு வந்து காக்கட்டும்.
இந்த யானைப் பிறவியால் என்ன பயன்? நான் ஆன்ம ஒளியைப் பெறவே விரும்புகிறேன். பகவான் ஒருவரால்தான் அது கிட்டும். எனக்கு முதலையின் பிடியிலிருந்து விடுதலை கிடைப்பதை விட, ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்கட்டும்.
தனித்திருப்பவர். ஜீவன்களைப் படைத்து, பொம்மைகளோடு விளையாடுவதுபோல் அவற்றுடன் விளையாடுபவர். ஆனால், இவற்றுக்கெல்லாம் அப்பாலுள்ளவர். பிறப்பற்றவர். அவரையே சரணமடைகிறேன்.
அஷ்டாங்க யோகிகள் கர்மங்களை பக்தியோகத்தால் ஒழித்து கர்மாக்களின் படிவுகளையும், பயன்களையும் எரித்து ஹ்ருதயத்தைத் தூய்மையாக்கி யாரைக் காண்கிறார்களோ அவரை வணங்குகிறேன்.
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவற்றை எல்லையற்ற வேகத்துடன் செய்கிறீர். எல்லையற்ற சக்தி உள்ள தங்களைப் பலமுறை தொழுவேன்.எல்லையற்ற மகிமையுள்ள தங்களையே அடைக்கலமாகப் பற்றுகிறேன்.
இவ்வாறு உருவமற்ற, பெயரற்ற முழுமுதற்கடவுளை கஜேந்திரன் துதித்தது. ஆகையால் பெயர்களையும், உருவங்களையும் தாங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எந்த தெய்வமும் காக்க முன்வரவில்லை.
அப்போது, அகில உலகங்களின் ஆன்மாவான ஸ்ரீமன் நாராயணன் அங்கு தோன்றினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment