தங்கள் முன் தோன்றிய பகவான் நாராயணனைப் பார்த்து இருகை கூப்பிய வண்ணம் நாதழுதழுக்கக் கூறினார்கள்.
இறைவா! பக்தர்கள் அனைவரின் துயரத்தையும் துடைப்பவர் தாங்களே. வேதங்களும் ஞானியரும் தங்கள் புகழையே பறைசாற்றுகின்றனர்.
தாங்கள் எப்போதும் ஸத்ய வடிவினராக இருப்பதால் தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்கிறீர்கள்.
முத்தொழில்களைச் செய்வதற்காக மூன்று உருவங்களை ஏற்கிறீர்கள்.
தங்களுடைய திருவுந்திக்கமலத்திலிருந்து இந்த ப்ரும்மாண்டம் தோன்றியது. தங்கள் கண்களும் தாமரை. கழுத்தில் தாமரை மலர். திருவடிகளும் தாமரையே.
அரையில், தாமரை மலரின் மகரந்தம் போன்ற பட்டாடை. அனைத்து ஜீவராசிகளின் புகலிடம். அனைத்திற்கும் சாட்சி. தங்கள் தரிசனம் அனைத்து துன்பங்களையும் நொடியில் தீர்ப்பது.
அறியாமை, செருக்கு, விருப்பு, வெறுப்புகளுக்கிடையில் உழலும் எங்களுக்கும் தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிட்டியதே!
தங்களை மனதார நினைப்பதாலேயே அனைத்து ஜீவன்களுக்கும் அமைதி கிடைக்கிறது.
அந்தர்யாமியாக இருக்கும்தங்களுக்கு எங்கள் விருப்பம் தெரியாதா?
தங்களிடம் எப்போதும் அன்பாக இருப்பது ஒன்றே நாங்கள் வேண்டும் வரம்.
கற்பகமலர் கிடைத்துவிட்டால் வேறு மலரில் விருப்பம் வருமா? அதுபோல் தங்கள் திருவடிமலரைக் கண்ட எங்களுக்கு வேறென்ன வேண்டும்?
எப்போதும் தங்களுடைய அடியார்களின் இணக்கம் வேண்டும்.
இறையடியார் கூட்டத்தில் எப்போதும் தங்களுடைய திருவிளையாடல் பற்றிய கதையமுதம் பெருகிக்கொண்டே இருக்கும். அதை அரைநொடி கேட்டாலும் தாபங்கள் அனைத்தும் தீரும். ஜீவன்களுக்குள் பகைமை விலகும். அன்பு பெருகும்.
ஸாதுக்கள் புண்யநதிகளையும் க்ஷேத்ரங்களையும் தூய்மைப்படுத்துவதற்காகவே தீர்த்தயாத்திரை என்ற பெயரில் உலவி வருகிறார்கள்.
தங்களுக்கு மிகவும் நெருங்கியவரான பரமேஸ்வரனின் ஒரு கணநேர இணக்கத்தாலேயே தங்கள் தரிசனம் கிடைத்தது.
தங்கள் பெருமை அளவிட இயலாதது.
எங்கள் அறிவுக்கெட்டியவரை தங்களைப் போற்றினோம்
எங்கள் அறிவுக்கெட்டியவரை தங்களைப் போற்றினோம்
இறைவா! இதுவரை ஒன்றிய மனத்துடன் நாங்கள் செய்த வேத அத்யயனம், ஆசிரியர் களுக்கு ச் செய்த பணிவிடை, அந்தணர்களுக்கும்,
பெரியோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் செய்த சேவை, அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி, உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர்க்கு தன்னலமற்றுச் செய்த உதவிகளும், தொண்டும், ஊண் உறக்கமின்றி நெடுங்காலம் இயற்றிய தவம் அனைத்தும் சர்வவியாபியான தங்களுடைய மகிழ்ச்சிக்காகவே ஆகட்டும்.
இதுவே நாங்கள் கோரும் வரம்.
தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.
பகவான் மனம் மகிழ்ந்து நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும் என்று அருள் செய்துவிட்டு அவர்கள் கண்ணெதிரிலேயே வைகுண்டம் கிளம்பினார்.
பின்னர், கடல் நீரிலிருந்து வெளிவந்த ப்ரசேதஸர்கள் கரைக்கு வந்து நிற்கக்கூட இடமின்றி, வானளாவ உயர்ந்து நிற்கும் மரங்களைச் சினத்துடன் பார்க்க, அவை பற்றி எரியத் துவங்கின.
மரஞ்செடிகொடிகள் பற்றியெரிவது கண்டு அங்கு தோன்றிய ப்ரும்மதேவர், அவர்களை ஆற்றுப்படுத்தினார். மீதமிருந்த மரங்கள் தங்கள் புதல்விகளை ப்ரசேதஸர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர்.
அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். முன்பு பரமேஸ்வரனை நிந்தித்ததன் பயனாக உடலை இழந்த தக்ஷன் இப்போது மீண்டும் பிறந்தான். கால வெள்ளத்தில் முந்திய படைப்புகள் அழிந்து சாக்ஷுஷ மன்வந்தரம் துவங்கியபோது இந்த தக்ஷன் மீண்டும் ப்ரும்மதேவரால் ப்ரஜாபதியாக நியமிக்கப்பட்டான்.
அவனை மக்களைப் படைத்து நன்முறையில் காக்குமாறு ப்ரும்மதேவர் உத்தரவிட்டார். மரீசி முதலிய மற்ற ப்ரஜாபதிகளையும் அவரவர் பதவியில் நியமித்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment