ஐந்தாவது ஸ்கந்தத்தில் ப்ரியவிரதன், ஆக்னீதரன், நாபி, ரிஷபதேவர்,
ஜடபரதர், பரதவம்சம், பூலோக கோசங்களின் வர்ணனை, கங்கை, வர்ஷங்கள், கிரஹங்களின்
இருப்பிடம், சஞ்சாரம், சிம்சுமார சக்கரம், சங்கர்ஷண மூர்த்தி, நரகங்கள்
ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்மால் இயன்றவரை சுருக்கமாகக்
காண்போம்.
மன்னன் பரீக்ஷித் ஸ்ரீ சுகமுனியைப் பார்த்துக் கேட்டான்.
முனிவரே! ஸ்வாயம்புவ மனுவின் புதல்வன் ப்ரியவிரதன், பெரிய
பக்திமான். நாரத மஹரிஷியிடமிருந்து ஆத்ம வித்யையைப் பெற்று தியானத்திலெயே
இருந்தார். அவருக்கு இல்லற ஆசை எவ்வாறு உண்டாயிற்று? இது முரணாக உள்ளதே. அவரது
கதையைச் சொல்லுங்கள் என்றான்.
ஸ்ரீ சுகர் கூறலானார்.
அரசே! ஆன்மஞானம் பெற்றவர்க்கு இல்லற ஆசை எழாது. ஆனால், எவருடைய
மனம் அஞ்ஞான இருளினின்று அகன்று பகவானின் மதுரமான திருவடித் தாமரைகளின் ரஸத்தில்
மூழ்குகின்றதோ, அவர்கள் எவ்வளவு இடையூறுகள் இருந்தபோதிலும், பகவானின் கதைகளில்
இருக்கும் ஆசையை விடமாட்டார்கள்.
பூர்வ வாசனையால் அவ்வழியிலேயே அவர்களது மனம் செல்லும்.
அரசே! ஸ்வாயம்புவ மனுவின் புதல்வன் இயற்கையிலேயே பகவானின்
பரமபக்தன். நாரத மஹரிஷிக்கு அவர் மனம் குளிர குளிரப் பணிவிடைகள் செய்து இறையறிவு
பெற்றவன்.
ப்ரும்மத்தைப் பற்றியே எப்போதும் சிந்தனை செய்தல் என்ற ப்ரும்மஸத்ர
வேள்விக்காக தீக்ஷை எடுத்துக்கொள்ளப்போகிறவன். அரசர்க்குரிய அனைத்து மேன்மையான
குணநலன்களும் அவனிடம் இருந்தன.
அவனைப் பார்த்து மகிழ்வுற்ற ஸ்வாயம்புவ மனு அவனை அரசாட்சியை
ஏற்கும்படி கட்டளையிட்டார்.
ஆனால், ப்ரியவிரதனோ, அரசாட்சியை ஏற்றால் அது தியானத்திற்கும்,
பக்திக்கும் இடைஞ்சல். மேலும் மனைவி மகன் என்றாகிவிட்டால், நாட்டு நலம், குடும்ப
நலம் ஆகியவற்றில் மனம்செல்லும். ஆன்ம நாட்டம் குறைந்துவிடும் என்று நினைத்து
அரசுரிமையை ஏற்க மறுத்தான்.
ப்ரும்மதேவர் ப்ரியவிரதனின் மனநிலையை அறிந்து, முனிவர்களின்
கூட்டத்தை அழைத்துக்கொண்டு ஸத்யலோகத்தினின்றும் இறங்கி வந்தார்.
அவர் வரும் வழியிலிருந்த இந்திர லோகத்தைச் சேர்ந்தவர்களும், சித்த
சாரண கந்தர்வர்களும் அவரைப் பூஜை செய்தனர். அனைவரின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டு
ப்ரியவிரதன் இருக்கும் கந்தமாதன மலையின் தாழ்வரையை அடைந்தார்.
அங்கு ஏற்கனவே ப்ரியவிரதனுக்கு ஆத்மவித்யையை உபதேசிப்பதற்காக
நாரதர் வந்திருந்தார்.
அன்னப்பறவையைக் கண்டதும் தன் தந்தையாகிய ப்ரும்மதேவர்தான்
வருகிறார் என்றறிந்து நாரதர், ஸ்வாயம்புவமனு, ப்ரியவிரதனுடன் வேகமாக எழுந்து
கைகூப்பி வரவேற்று உபசரித்து துதித்தார்.
நாரதர் பலவாறு ப்ரும்மாவின் பெருமைகளை எடுத்துக்கூறி துதி
செய்ததும், ப்ரும்மா கருணை பொங்கும் கண்களால் ப்ரியவிரதனைக் கடாக்ஷம் செய்தார்.
அதன்பின் அவனைப் பார்த்துப் பேசலானார்.
குழந்தாய்! அனைத்து உலகங்களையும் படைத்துக் காத்து அழித்துவரும்
பகவான் வாசுதேவனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள். நான், பரமேஸ்வரன், மனு, உன்
குருவான நாரதர் இன்னும் இங்கு வந்திருக்கும் பல மஹரிஷிகளும், ப்ரஜாபதிகளும்
பகவானின் கட்டளையைத் தலைமேல் தாங்கி அதன்படி நடக்கிறோம்.
எந்த ஒரு ஜீவனும் தன் தவத்தாலோ, அறிவாலோ, புத்தியாலோ, உடல்பலத்தாலோ
பகவானின் செயல்பாடுகளை மாற்ற இயலாது. வேள்விகளால் ஏற்படும் புண்ணியத்தால் பகவானை
அசைக்க இயலாது.
இவ்வுலகில் எத்தனை விதமான ஜீவன்கள் எத்தனையெத்தனை விதமான உடல்களை
ஏற்றுக்கொண்டு பிறக்கின்றன. அனைத்தும் பகவானின் ஸங்கல்பமே.
ஞானத்தை அடைந்த ஜீவன் முக்தன் முன்வினைப் பயன்களை
அனுபவிப்பதற்காக, பகவானது விருப்பப்படியே உடலைத் தாங்குகிறான். அவன் எந்நேரமும்
விழிப்புடன் பகவானை மறவாமல் இருப்பான். அடுத்த பிறவிக்கான கர்மாக்களையும்,
வாசனைகளையும் அவன் சுமப்பதில்லை.
நன்றாகக் கேளுங்கள்.
பகவானை ஆராதிக்காதவன், புலனடக்கமற்றவன், காடுகளில் இருந்தாலும்
என்ன பயன்? புலன்களை வெல்லாதவன் எங்கிருந்தாலும் புலன் இன்பத்தைத்தான் நினைப்பான்.
புலன்களை வெற்றி கொண்டவன் மற்றும் பகவானிடம் பற்று கொண்டவனே
பகுத்தறிவு பெற்றவன். அவன் இல்லறத்தானாக இருந்தால்என்ன? துறவியாயினும் என்ன?
இவ்வுலக வாழ்க்கை அவனை எவ்விதத்திலும் பாதிக்காது.
மேலும் ஐம்புலன்களையும் வெற்றிகொள்ள விழைபவன் இல்லறத்தில்
இருந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை அடக்கித் தன்வயப்படுத்தவேண்டும்.
கோட்டைக்குள் பத்திரமாக இருந்து போரிடுபவன் பெரும்படையையும் வெற்றி
கொள்வான்.
நீ பகவானின் திருவடித்தாமரைகளின் கோட்டைக்குள் இருக்கிறாய்.
புலன்களை வென்றுவிட்டாய். எனவே, அரச போகங்களை அனுபவி. அரசாட்சி செய். பின்னர்
அவற்றைத் துறந்து ஞான ஸ்வரூபனான பகவானிடம் ஒன்றுபடு.
என்றார்.
ப்ரும்மதேவரின் கூற்றை மறுக்க இயலாத ப்ரியவிரதன்,
அவ்வாறே செய்கிறேன் என்று சொல்லி, அவரையும் மற்ற மூத்தோர்
பெருமக்களையும், முனிவர்களையும் வணங்கி அரசாட்சியை ஏற்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட
ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment