ருக் மந்திரங்கள் அதிகமாகக் காணப்படும் பஹ்வ்ருசம் என்ற ஸம்ஹிதையை பைலருக்கு உபதேசம் செய்தார் ஸ்ரீ வியாஸ பகவான். அதைத் தொடர்ந்து வரும் நிகதம் என்ற யஜுர் வேத ஸம்ஹிதையை வைசம்பாயனருக்குக் கொடுத்தார்.
ஸாம சந்தங்கள் கொண்ட சந்தோகம் என்ற ஸம்ஹிதையை ஜைமினிக்குக் கொடுத்தார். அதர்வாங்கிரஸீ என்ற ஸம்ஹிதையை சுமந்து என்பவருக்குக் கொடுத்தார்.
பைலர் தனது ருக் ஸம்ஹிதையை இரண்டாகப் பிரித்தார். அவற்றை இந்திரப்பிரமிதி மற்றும் பாஷ்கலர் என்பவர்க்குத் தனித்தனியாக உபதேசம் செய்தார்.
பாஷ்கலர் தனக்குக் கிடைத்த ருக் ஸம்ஹிதையை நான்காகப் பிரித்தார். அவற்றை முறையே போத்யர், யாக்யவல்க்யர், பராசரர், அக்னிமித்ரர் ஆகியோர்க்கு உபதேசம் செய்தார்.
இந்திரப்பிரமிதி ஞானியாவார். அவர் தனக்குக் கிடைத்த ருக் ஸம்ஹிதையை மாண்டூக்யருக்கு உபதேசம் செய்தார். அவரது மாணவர் தேவமித்திரர் ஆவார். ஸௌபரி முதலான முனிவர்கள் தேவமித்திரரிடம் பயின்றனர்.
மாண்டூக்யரின் புதல்வர் சாகல்யர். அவர் தான் கற்றதை ஐந்தாகப் பிரித்தார். வாத்ஸ்யர், முத்கலர், சாலீயர், கோகல்யர், சிசிரர் ஆகிய ஐந்து சீடர்களுக்கு உபதேசம் செய்தார்.
சாகல்யரின் சீடர் ஜாதூகர்ண்யர் என்பவர். அவர் தான் பெற்ற கல்வியை மூன்றாகப் பிரித்தார். வேதங்களின் விரிவுரையான நிருக்தத்துடன் அவற்றை பலாகர், பைஜர், வைதாளர், விரஜர் ஆகிய நால்வருக்கு உபதேசம் செய்தார்.
பாஷ்கலரின் புதல்வர் பாஷ்கலி என்பவர். அவர் அத்தனை சாகைகளிலிருந்தும் மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து வாலகில்யம் என்றொரு சாகை செய்தார். அதைத் தம் சீடர்களான பாலாயனி, பஜ்யர், காஸரர் ஆகியோர்க்குக் கொடுத்தார்.
மேற்கூறப்பட்ட அனைத்து மஹரிஷிகளும் ருக் வேதத்தின் சாகைகளான பஹ்வ்ருச சாகைகளை ச்ரத்தையாகப் பயின்றனர்.
வேதத்தின் இப்பிரிவுகளைப் பற்றிய விவரங்களைக் கேட்பவர்கள் அனைத்துப் பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment