வைசம்பாயனரின் சீடர்களுள் சிலர், குருவிற்கு நேர்ந்த ப்ரும்மஹத்தி தோஷம் நீங்க ப்ராயச்சித்தம் செய்தனர். இவர்கள் சரகாத்வர்யுக்கள் எனப்படுவர். அதைக் கண்ட யாக்ஞவல்க்யர் அவர்களை ஏளனம் செய்தார். அதைக்கேட்டு சினமுற்ற வைசம்பாயனர், அந்தணர்களை அவமதிக்கும் நீ என் சீடனாக இயலாது. என்னிடம் கற்ற வேதத்தைக் கக்கிவிட்டு இங்கிருந்து போ என்றார்.
யாக்ஞவல்க்யரும் வைசம்பாயனரிடம் கற்ற யஜுர்வேதததைக் கக்கிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். அந்த யஜுர் பாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை மற்ற முனிவர்கள் மிகவும் விரும்பினர். ஆனால் அந்தணர்களான அவர்கள், கக்கியதைத் திரும்ப எடுப்பது உகந்ததல்ல என்றெண்ணியதால் தித்திரிப் பறவைகளாக உருக்கொண்டு அவ்வேத பாகங்களை விழுங்கி விட்டனர். அந்த யஜுர்பாகம் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது.
அதன்பின் யாக்ஞ்வல்க்யர், வேதங்களை மீண்டும் அடைய முனைந்தார். அதற்காக வேதங்களின் தலைவரான ஆதித்யனை உபாசனை செய்தார்.
சூரிய பகவான் மீதான மிகவும் அழகான சுருக்கமான ஸ்துதி இதோ.
1. ஓங்கார ஸ்வரூபமான ஆதித்யரே உமக்கு நமஸ்காரம். எல்லா உலகங்களுக்கும் ஆத்மா நீரே. கால ஸ்வரூபமாக விளங்குகிறீர்கள். விதைத்தாவரம் (உத்பிஜம்), வியர்வையில் தோன்றும் ஜீவன்கள் (ஸ்வேதஜம்), முட்டையில் தோன்றுவன (அண்டஜம்), கருவில் தோன்றுவன (ஜராயுஜம்) என்ற நால்வகை ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் ஒரே சீராக வியாபித்திருப்பவர் தாங்களே. எதிலும் ஒட்டாமல் தனித்து இயங்குகிறீர். நீரை ஆவியாக்கி மழை பெய்விப்பவர் தாமே. அனைத்து உலகங்களும் சீராக இயங்கக் காரணம் தாங்களே. தங்களுக்கு நமஸ்காரம். (தத்ஸ விதுர்வரேண்யம் என்பதன் பொருள்)
2. புத்தியைத் தூண்டும் தேவாதிதேவன் நீர். மூன்று வேளைகளிலும் தம்மைத் துதிப்பவரின் அஞ்ஞானத்தை அடியோடு அழிப்பவர். உலகின் உச்சியில் ஒளிமண்டலமாக விளங்கும் தங்களை தியானிக்கிறோம். (பர்கோ தேவஸ்ய தீமஹி என்பதாகும்)
3. தாங்களே எல்லா ஜீவன்களின் அந்தர்யாமி. அனைத்திற்கும் ஆதாரம். ஜடப்பொருள்கள் அனைத்தையும் அதனதன் வழியில் ஊக்குவித்துச் செலுத்துகிறீர். (தியோ யோந: ப்ரசோதயாத்)
காரிருள் வடிவான அஞ்ஞானம் எனும் பாம்பின் வாயில் தினம் தினம் இந்தப் ப்ரபஞ்சம் விழுந்து பிணம்போல் இருக்கிறது. கருணைக்கடலான தங்களின் அமுதப் பார்வையால் அதை உயிர்ப்பிக்கிறீர்கள். தர்மம் மற்றும் அனுஷ்டானங்களில் ஜீவனை ஈடுபடச் செய்பவர் நீரே. திருடர் மற்றும் தீயோர்க்கு பயத்தை விளைவிக்கிறீர்.
எண்திசையில் இருக்கும் யோகிகளும் தத்தம் இடத்திலேயே தங்களை வணங்கி அர்க்யம் ஸமர்ப்பிக்கின்றனர். மூவுலகிற்கும் குருவாக விளங்குகிறீர். அனைவரும் உம்மை வணங்குகின்றனர். இதுவரையிலும் யாராலும் முறைப்படி பயிலப்படாத யஜுர் வேத சாகைகளை எனக்கு உபதேசம் செய்வீராக. நான் தங்களையே சரணமாகப் பற்றுகிறேன். என்றார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment