த்ரேதாயுகத்திலும் மக்கள் அமைதியுடன் திகழ்ந்தனர். நிறைய வேள்விகள் நடைபெற்று வந்தன. அஹிம்சை எண்ணம் மேலோங்கியிருந்தது. வேதத்தில் கர்மகாண்டம் மிகவும் பின்பற்றப்பட்டது.
துவாபர யுகத்தில் இம்சை, வீண்பழி, வீண் பகை, மோஹம் ஆகியவை தழைக்கத் துவங்கின. தர்மத்தின் பாதங்களில் பாதி குறைந்துவிட்டது.
புகழில் ஈடுபாடு கொண்டு அதற்காக வேள்விகள் செய்தல், முதலியவை துவங்கின.
மக்கள் செல்வச் செழிப்புடன் விளங்கினர்.
கலியுகத்தில் அதர்மத்தின் நான்கு கால்களும் பலம் பெறும். தர்மத்தின் நான்கு கால்களும் வலுவிழந்து கால் பகுதி மட்டும் இருக்கும். கலியுகத்தின் முடிவில் அதுவும் நசிந்துபோகும். மக்கள் அனைவருமே உலகியல் விஷயங்களில் பேராசை கொண்டு தர்மத்தை முழுவதுமாக உதாசீனம் செய்வர். ஒருவருக்கொருவர் வீண் கலகம் செய்துகொண்டு ஆசைக்கடலில் மூழ்குவர். தீயவர்களின் செல்வாக்கு ஓங்கும்.
எல்லா ஜீவன்களுக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களும் உண்டு. காலக் கோளாறால் இக்குணங்களின் தாக்கம் ஜீவன்களின் உடல்களிலும் மனத்திலும் வெவ்வேறு தாக்கங்களை உண்டு பண்ணும்.
மனம் புத்தி பொறிகளில் ஸத்வ குணம் நிறைந்திருந்தால் க்ருத யுகம் என்றும், இம்மை மறுமை என்றெல்லாம் ஆலோசித்து நாட்டம் கொள்ளும் சமயம் அப்போது த்ரேதாயுகம் என்றும் அறியப்படுகிறது.
தீயகுணங்கள் அஹங்காரம், பகட்டு ஆகியவை ஓங்கி நிற்கும் சமயம் துவாபர யுகம் என்று அறியலாம். அப்போது ரஜோ குணமும் தமோ குணமும் ஓங்கி நிற்கும்.
பொய்யும், புரட்டும் தூக்கம், இம்சை, மோகம், சோகம் பயம் ஆகிய அனைத்தும் தமோ குணமாகும். இவை ஓங்கும் சமயம் கலியுகம் ஆகும்.
கலியுகத்தின் கீழ்மை நெறிகளை முன்பே பார்த்தோம்.
தீயொழுக்கம் பெருக பெருக பஞ்சம் தலைவிரித்தாடும். உயிர் காக்கச் சிறிது உணவுகூட கிடைக்காமல் திண்டாடும் நிலை வரும்.
மக்கள் சின்னஞ்சிறு தொகைக்காக நெடுநாள் நட்பு, உறவுகளை பகைத்துக் கொள்வர்.
அற்பக் காசுக்காக உறவுகளைக் கொலை செய்யவும் தயங்கார். நாத்திகம் கோலோச்சும். தேவர்களை மட்டுமல்ல பகவானைக் கூட வழிபட மாட்டார்கள். ஆனால் கலியுகத்தில் ஒரு பெரிய நன்மை உண்டு. மரணத் தறுவாயிலோ, துன்பத்தால் வருந்தும்போதோ இடறி விழும்போதோ, நிலை கவிழும்போதோ மனதார இல்லாமல் வாய் தவறியாவது இறைநாமத்தைச் சொல்வானாகில் கர்மத் தளைகள் அனைத்தும் அறுபடும். உத்தம கதி கிடைக்கும்.
கலியுகத்தில் உணவு, முதலியவற்றால் சுலபமாக தோஷங்கள் வரும். இடத்தாலும் பொறிகளாலும் தோன்றும். இவை அனைத்திற்கும் காரணம் மனமே ஆகும். மனத்தில் இறை குடிபுகுமாயின் எல்லா தோஷங்களும் தீக்கிரையாகும்.
பகாவனின் கல்யாண குணங்கள், லீலைகள், நாமங்கள், பாடுவது, தியானிப்பது, வழிபடுவது, ஆகியவற்றால் ஆயிரக் கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களும் கண நேரத்தில் சாம்பலாகிறது.
தங்கத்தைத் தீயிலிடும்போது அதிலுள்ள அழுக்குகள் நீங்கி தங்கம் தூய்மையாகும். அதைப்போலவே பகவான், தம்மை அழைக்கும் உள்ளத்தில் அமர்ந்து பாவங்களைப் போக்குகிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment