ஸ்ரீசுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷித்! இம்மண்ணுலகை வெற்றி கொள்ளத் துடிக்கும் அரசர்களைப் பார்த்து பூமிதேவி கேலியாகச் சிரிக்கிறாள். இவர்கள் அனைவரும் காலனின் வாய் வீழப்போகிறவர்கள். அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தன்னை வெல்லும் திறத்தைப் பெற சற்றும் முயலாமல் என்னை வெல்ல முயன்று ஏமாறுகிறார்களே என்றெண்ணுகிறாள்.
மேலும் ஒரு நாட்டைப் பிடித்தால் அடுத்த நாடு, அடுத்த தீவு என்று பெருஞ்சேனையுடன் கடற்பயணம் மேற்கொண்டு சிரமப்படுகிறார்கள். புலன்களை அடக்கத் தெரியாதவன் நாடுகளை வென்று என் செய்வான்? அந்தோ பரிதாபம். மனு முதலான பெருமன்னர்களும் அவரது வழித்தோன்றல்களும் என்னை இங்கேயே விட்டு வெறுங்கையுடன் தான் சென்றனர்.
தாம் வென்ற பூமியின் கைப்பிடி மண்ணைக்கூட அவர்களுடன் எடுத்துச் செல்ல இயலாது.
இந்த நிலம் என்னுடையது என்று சகோதரர்கள் சண்டையிட்டு நிலத்திலேயே புதைகின்றனர்.
எத்தனை எத்தனை வீரர்களை இப்புவி கண்டிருக்குறது. பிருது, புரூரவஸ், காதி, நகுஷன், பரதன், அர்ஜுனன், மாந்தாதா, ஸகரன், ராமன், கட்வாங்கன், ரகு, திருணபிந்து, யயாதி, சர்யாதி, சந்தனு, கயன், பகீரதன், ககுத்ஸன், நளன், நிருகன் முதலிய ஸார்வபௌமர்கள், ஹிரண்யகசிபு, விருத்ரன், ராவணன், நமுசி, சம்பரன், நரகாசுரன், இரண்யாக்ஷன், தாரகன், ஆகிய அசுரகுல வீரர்கள், இவர்கள் அனைவருமே திக்விஜயத்தில் தோற்றதே இல்லை. ஆனால் அனைவரும் யமனின் வாய் உணவானார்கள். அவர்களின் உடல் எங்கே? வீரம் எங்கே? வெறும் கதைகள் தான் மிச்சம்.
அவ்வாறே சான்றோர்களும்.
இவ்வுலகம் சாரமற்றது என்ற வைராக்யத்தை மேற்கொள் பரீக்ஷித்! அதற்காகத்தான் இதைக் கூறினேன்.
இவையெல்லாம் ஆன்ம அறிவுக்கு உதவாது. ஆனால் வைராக்யம் அடைய உதவும்.
கண்ணனின் பெருமைமிகு குணங்களே எப்போதும் அமுதினும் இனியவை. அவனது கல்யாண குணங்களை எப்போதும் செவியாரப் பருகுவதே உய்யும் வழி.
பரீக்ஷித் கேட்டான்.
கலியின் கொடுமையை நன்கு விளக்கினீர்கள். ஆனால் பாவம் இம்மாந்தர்கள். இவர்கள் எவ்வாறு கலியின் பிடியிலிருந்து தப்பிக்க இயலும்? அவர்களுக்கு உய்யும் வழிதான் என்ன? நான்கு யுகங்களின் தர்மங்ளையும் கூறுங்களேன். பகவானின் காலரூபத்தின் மஹிமை யாது ? என்றான்.
ஸ்ரீசுகர் பரிக்ஷித்தை வாஞ்சையுடன் பார்த்துக் கூறலானார்.
அரசனே! க்ருத யுகத்தில் தர்மம் ஸத்யம், தயை, தவம், தானம் ஆகிய நான்கு பாதங்களுடன் விளங்கியது.
மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். மிகவும் கருணையுள்ளம் படைத்தவர்கள். மன அமைதி கொண்டவர்கள். நட்புடன் பழகக் கூடியவர்கள். புலனடக்கம் உள்ளவர்கள். எல்லாவற்றிலும் சம புத்தி உள்ளவர்கள். ஆன்மாவை உணரும் ஆசை அனைவரிடமும் இருந்தது. அதற்கான முயற்சிகளைத் தவறாமல் செய்து வெற்றியும் அடைந்தனர்.
அதர்மத்திற்கும் பொய், ஹிம்சை, சோகம் (மனக்கலக்கம்), கலகம் ஆகிய நான்கு பாதங்கள் உண்டு. இவற்றின் சக்தியால் தர்மத்தின் பாதங்களில் பலம் குறைகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment