பகவான் தொடர்ந்தான்.
கர்மாக்கள் துக்கத்தைத் தரும் என்று ஞானம் பெற்று அவற்றைக் கைவிடுபவன், புலன்களை வெல்லவேண்டும். மனத்தை மற்ற விஷயங்களிலிருந்து திருப்பி ஆத்மாவில் நிலை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தும்போது மனம் அங்குமிங்கும் செல்லத் துடிக்கும். அப்போது விழிப்புடன் அதைத் தவிர்த்து, அறிவுரை கூறி, தன்வசப்படுத்தவேண்டும்
புலன்களையும் ப்ராணனையும் தன்வசப்படுத்த வேண்டுமாகில் மனத்தைச் சுதந்திரமாக விடக்கூடாது.
ஸத்வகுணத்தினால் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
முரட்டுக் குதிரையில் பயணம் செய்ய விரும்புபவன், ஒரேயடியாக அதை அடக்கமுயன்றால் நடவாது. முதலில் அதன் போக்கில் சற்று விட்டுப் பின்னர் தன் வழிக்குக் கொண்டுவருவது போல மனத்தின் போக்குப்படி சிலசமயம் அனுமதித்துப் பின்னர் அறிவுரை கூறி கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
ஸாங்க்ய சாஸ்திரத்தில் ப்ரபஞ்சத் தோற்றம் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் படியே சிந்தித்தல் நலம். அதே வரிசையில் உடல் முதல் அனைத்தும் ப்ரக்ருதியில் லயப்படுவதை சிந்திக்க வேண்டும். மனம் ஒரு நிலையில் வசப்படாத வரை இந்தச் சிந்தனை உதவி செய்யும்.
உலகப் பற்று நீங்கியவன் ஆசார்யனின் வாக்கை எண்ணிப் பார்த்து உணர்ந்து ஆத்மஸ்வரூபத்தில் நிலைக்கவேண்டும். இவ்விதமான பயிற்சி தேகப்பற்றை அறுக்கும்.
யம நியமங்கள் முதலான யோகவழியில் என்னை அடையலாம். அல்லது ஆத்ம அனாத்ம என்று வஸ்துவின் மூலத்தை ஆராய்ந்து என்னைப் பூஜை செய்யலாம். அல்லது என் உருவச்சிலையை வழிபடுவது, அதற்கு உபசாரங்கள் செய்வதன் மூலம் என்னை தியானிக்கலாம். அதாவது கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் இவையே ப்ரதானமான வழிகள்.
யோகி எப்போதாவது தவறி, ஒரு தீய செயலைச் செய்ய நேர்ந்தால் அந்தப் பாவத்தை யோகத்தீயிலேயே பொசுக்கிவிடலாம். தனியாக ப்ராயசித்தம் தேவையில்லை.
எவ்வெவர்க்கு எந்தெந்த மார்கம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பின்பற்றுவதே சுலபம். குண தோஷம், விதி நிஷேதங்கள் ஆகியவை எவ்விதமாகவாவது உலகப்பற்று நீங்குவதற்காகவே ஆகும்.
பிறப்பிலிருந்தே கர்மாக்களால் வினைப்பயன் அதிகரிக்கும். அவை அசுத்தமானவை. அவற்றை ஒரு வரம்பில் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே சாஸ்திரங்களின் அபிப்ராயம். உலகப் பற்றைக் குறைப்பதே உண்மை நோக்கம்.
என் லீலைகளினால் சிரத்தை ஏற்பட்டு எல்லா சுகங்களும் துக்கத்தின் வாசல் என்பதை அறிந்திருந்தாலும் அவற்றை முற்றிலும் விலக்க இயலவில்லை எனில் இந்த இன்ப நுகர்வு துக்கம் தரும் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் நிலை நீங்க என்னை வழிபடவேண்டும்.
இவ்விதமாக பக்தி நெறியைப் பின்பற்றுபவர்களின் இதயமே என் இருப்பிடம். நான் தோன்றியதும் அவனது மன மாசுக்கள் அனைத்தும் பொசுங்குகின்றன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..