யோகதாரணையால் அடையப்படும் சித்திகளைப் பற்றிக் கூறினேன். இவ்வகை சித்திகள் எவ்வாறு கிடைக்கின்றன என்பதைக் கூறுகிறேன் கேள் உத்தவா! என்றான் கண்ணன்.
பஞ்சபூதங்களின் ஆதார வடிவம் தன்மாத்திரை எனப்படும். அதுவும் என் ஸ்வரூபமே. அவைகளின் சூட்சும ஸ்வரூபம் நான்தான். தன் மனத்தை தாரணை செய்து தியானிப்பவர்க்கு அணிமா சித்தி கிடைக்கும்.
மஹத் என்னும் தத்துவமும் நானே. அந்த தத்துவத்தில் மனத்தை நிலைநிறுத்துபவனுக்கு மஹிமா சித்தி கிடைக்கிறது.
நான் அணுவுக்கும் அணுவாக அத்தனை இடத்திலும் நிறைந்திருக்கிறேன். அந்தப் பரமாணு ரூபத்தில் லயிப்பவன் லகிமா என்னும் சித்தியை அடைகிறான்.
மனம் எல்லாப் புலன்களையும் ஆட்டிப் படைக்கிறது. அஹம் என்னும் தத்துவத்தின் ஸத்வகுண மாறுபாட்டினால் தோன்றுகிறது. என் அஹங்கார தத்துவத்தில் மனத்தை நிறுத்தி புலன்களை அடக்கி ஆளும் யோகிக்கு ப்ராப்தி என்ற சித்தி கிடைக்கும்.
பிறப்பற்ற நானே மஹத் ஆவேன். நானே அனைத்திற்கும் காரணமான சூத்ராத்மா அதாவது மூலாத்மா. என்னிடம் மனத்தை நிறுத்துபவர் ப்ரகாம்யம் எனும் சித்தியை அடைவார். அவர் ப்ரும்மாண்டம் முழுவதையும் ஆளும் சக்தி பெறுவார்.
எங்கும் வியாபித்த பொருள் நான். முக்குணத்தைத் தூண்டும் மாயையை ஆள்பவனும் நானே. ப்ரம்மாண்டத்தை அழிக்கும் சக்தி படைத்த காலன் நான். க்ஷேத்ரமாகிய உடல், க்ஷேத்ரக்ஞனாகிய ஜீவாத்மா இரண்டையும் தூண்டுபவன் நான். இப்படியாக எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் என் விஷ்ணு வடிவத்தில் லயிப்பவன் ஈஷித்வம் என்ற சித்தியைப் பெறுகிறான்.
பகவான் என்ற சொல்லுக்குப் பொருள் நாராயணன் எனப்படும் நானே. விராட், ஹிரண்யகர்பன், காரணம் என்ற நிலைகள் தாண்டி நான்காவதாக நிற்கும் என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு வசித்வம் கைவரப்பெறும்.
நிர்குணப்ரும்மமாக என்னை உபாசிக்கும் யோகிக்கு எல்லா விருப்பங்களும் அழிகின்றன. அவன் காலவசாயிதா என்ற சித்தியை அடைகிறான்.
ச்வேத த்வீபத்தின் தலைவனான என்னை தியானிப்பவன் பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் ஆகிய ஆறு துன்பங்களையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறான்.
அனைத்துப் ப்ராணன்களின் ஸ்வரூபமான ஆகாசம் நானே. இவ்வடிவில் என்னை தியானம்செய்து அநாஹத ஒலியை தியானம் செய்பவன் ஆகாயத்திலுள்ள எல்லா உயிர்களின் ஒலிகளையும் கேட்கும் சக்தி பெறுகிறான்.
தன் கண்களில் சூரியனையும் சூரியனை நானாகவும் தியானம் செய்பவன் மிக நுட்பமான பார்வையைப் பெறுவான். அவன் இருக்குமிடத்திலிருந்தே உலகம் முழுவதையும் காணும் சித்தியை அடைவான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment