பகவான் தொடர்ந்தான்.
உத்தவா! உத்தம பக்தனின் மனம் முழுவதும் தூய்மையானது. அவனுக்கு என்னை எண்ணுங்கால் உடலில் புல்லரிப்பு, மனம் உருகுதல், ஆனந்தக் கண்ணீர், ஆகியவை ஏற்படும். சொல் தடுமாறும். சில சமயம் அழுவான், சில சமயங்களில் சிரிப்பான். வெட்கம் விட்டு உரத்த குரலெடுத்து என் பெயரைப் பாடுவான். அவனால் இவ்வுலகம் புனிதமடையும்.
என் பக்தனுக்கு என்னைப் பற்றிய சிந்தனை ஒன்றினாலேயே கர்ம வாசனைகள் அனைத்தும் நீங்கும். தன் இயல்பு வடிவான என்னை அப்பிறவியிலேயே அடைந்துவிடுவான்.
புலநுகர் பொருள்களை நினைக்கும் மனம் அவற்றில் மாட்டிக்கொள்ளும். அதேபோலவே என்னை நினைக்கும் மனம் என்னிடம் லயமாகிவிடும்.
கனவில் ஒருவனின் விருப்பம் நிறைவேறினால் அது மெய்யாகுமா? அதுபோலவே பொய்யான விஷயங்களை நினைப்பதால் என்ன பயன்?
ஆன்ம சாதனை செய்பவன் பெண்ணாசையை விடவேண்டும். அதனால் பெருந்துன்பம் விளையும்.
உத்தவன் கேட்டார். முக்தியை அடைய விரும்புபவன் உன்னை எப்படி தியானிக்கவேண்டும் கண்ணா?
கண்ணன் உத்தவனைப் பார்த்து ஒரு மந்தஹாசம் செய்தான்.
பின்னர் கூறத் துவங்கினான்.
அதிக உயரமாகவும் இல்லாமல் மிகவும் தாழ்ந்தும் இல்லாமல் சமமாக உள்ள இருக்கையில் அமரவேண்டும். வளைவில்லாமல் நேராக உடலை வைத்துக்கொண்டு சௌகர்யமாக ஒரு ஆசனத்தில் அமரவேண்டும். இரண்டு கைகளையும் மடியில் வைத்துக்கொண்டு கண்பார்வையை மூக்கின் நுனியில் நிறுத்தவேண்டும். பின்னர் ப்ராணாயாமத்தினால் சுவாசப் பாதையை சுத்தம் செய்யவேண்டும்.
இதயத்தில் தாமரைத்தண்டு போல, தைல தாரை போல, தொடர்ந்து மெலிதாகக் கேட்கும் ஓங்காரத்தில் கவனம் செலுத்தவேண்டும். ப்ராணன் மூலமாக அதை மெல்ல மெல்ல மேலே கொண்டுவந்து மணி போன்ற நாதத்தில் நிறுத்தவேண்டும்.
இம்மாதிரியாக ஓங்காரத்துடன் ப்ராணாயமத்தைப் பயிற்சி செய்ய வெகு சீக்கிரம் சுவாசம் வசப்படும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே
No comments:
Post a Comment